mercredi 6 juillet 2016

படமும் பாட்டும்



தாமரைக் காடு!

1.
பெண்ணின் திருவருளைப் பெற்றிடவே, தாமரை
தண்ணீரில் செய்யும் தவம்!

2.
தண்ணீரில் தத்தளிக்கும் தாமரைக்குக் கை..கொடுத்துப்
பெண்ணே..நீ தீர்ப்பாய் பிணி!

3.
குளங்காதல் கொண்டதுவோ? கோதைக்குப் பூ..தந்[து]
உளங்கூடச் சொல்லும் உவந்து!

4.
தாமரைப் பூக்களைத் தள்ளாடச் செய்யும்!உன்
மாமரைக் கண்ணின் மது!

5.
தாமரைப் பூவெல்லாம் தாவணிச் சீர்கண்டு
பாமரை பாடும் பணிந்து!

6.
செம்மைக் கரம்பற்றச் செந்தா மரையேங்கும்
உம்மை உறவாய் உணர்ந்து!

7.
தாமரைக்குத் தாகமடி! தங்கமே உன்னமுத
நாமரை நீரினை நல்கு!

8.
சின்னவளே நீயழகா? செந்தா மரையழகா?
என்னவளே! நீயே எழில்!

9.
தங்கமே! உன்னழகால் தாமரை நெஞ்சுக்குள்
பொங்குமே ஏக்கும் புரண்டு!

10.
தலைவணங்கும் தாமரைகள்! தாரகையே! உன்றன்
கலைவழங்கும் கண்களைக் கண்டு!

11.
தாமரைக் காடே! தமிழ்தருவாய்! என்னுடைய
நாமரை மீது நடந்து!

12.
உடன்பிறப்பைக் கண்டுவக்க ஓடோடி வந்தாய்!
படரன்பைக் காட்டும் படம்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2016

1 commentaire: