samedi 28 mars 2015

திருவருட்பா வாழ்த்துமலர்




திருவாளர் தட்சிணாமூர்த்தி சத்தியவாணி இணையாின் 
இல்லத்தில் நடைபெற்ற
திருவருட்பா முற்றோதல் வாழ்த்துமலர்

சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
பத்திய வாழ்வின் பயனுணர்ந்தார்! - சித்தத்தில்
சன்மார்க்கம் கொண்டார்! தங்கத் தமிழ்நெறியின்
பொன்மார்க்கம் கண்டார் பொலிந்து!

அன்பே தெய்வம்! அருளே இன்பம்!
பண்பே மேன்மை! பணிவே உயர்வு!
மனித நேயம் மாண்பின் உச்சம்!
இனிய மொழியே இன்றேன் ஊற்று!
ஒழுக்கம் வாழ்வின் ஒளியை ஏற்றும்!
பழுத்த பழமாய்ப் பாக்கள் இனிக்கும்!
அன்னைத் தமிழின் அமுத நெறிகளைப்
பொன்னெனப் போற்றிப் புகழும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
புத்தமு துண்டு புதுமை காண்கவே!

வடலூர் வள்ளல் வகுத்த வழியை
உடலூர் வண்ணம் ஓதி மகிழ்வார்!
உற்ற உறவை உயரச் செய்தல்
கற்ற கல்வியின் கடமை என்பார்!
கொல்லா நோம்பின் கோலம் கொண்டு
நல்லார் உரைகளை நாடிக் கேட்பார்!
செல்லும் இடமெலாம் செந்தமிழ்ச் சீரினை
வெல்லும் முறையில் விளைக்கும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
எத்திசை ஏத்த ஏற்றம் காண்கவே!

செம்மொழித் தமிழின் சிறப்பைக் காத்துக்
கம்பன் கழகம் கடமை யாற்றும்!
எங்கும் தமிழே! எதிலும் தமிழே!
தங்கத் தமிழின் சால்பினைச் சாற்றும்!
அருட்பா அமுதை அள்ளி அருந்தி
அரும்பா எழுத ஆற்றல் அளிக்கும்!
எங்கள் தொண்டில் இறுக இணைந்து 
பொங்கும் தமிழைப் போற்றும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
சித்தினை வென்று சிறப்பைக் காண்கவே!

அமைதி என்னும் அரும்தமிழ்ச் சொல்லைத்
தமதுயி ராகத் தரித்த மனத்தர்!
நட்பைப் பேணி நலங்கள் நல்கிக்
கட்டு மலராய்க் கமழும் செயலர்!
நல்ல வழியில் நடக்கும் மைந்தரை
வல்ல திறமையில் வளர்த்த செல்வர்!
வள்ளல் அடிகளை வாழ்த்தி வணங்கி 
உள்ளம் ஒளிரும் ஒப்பில் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
சித்திரை நிலவின் சிறப்பைக் காண்கவே!

28.03.2015

22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்து வழங்கி வளமுறச் செய்தவுனைத்
      தாழ்த்தி வணங்கும் தலை!

      Supprimer
  2. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அருளிய ஆட்பாவின் சிறப்பை அழகு தமிழில் படித்து ரசித்து மகிழ்ந்தோம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலை
      நாடும் நபர்களை நாடு!

      Supprimer
  3. அருமையான வாழ்த்து மலர் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்து மலரமுதை ஆழ்ந்து பருகிடுவீா்!
      சூழ்ந்து பெருகும் சுவை!

      Supprimer
  4. சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
    சித்திரை நிலவின் சிறப்பைக் காண்கவே!
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வள்ளல் மலரடியை வாழ்த்தும் இவா்களின்
      உள்ளம் ஒளிரும் உயர்ந்து!

      Supprimer
  5. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மனம்நிறைந்த வாழ்த்தினை வாரி அளித்தீர்!
      தனம்நிறைந்து வாழ்க தழைத்து!

      Supprimer
  6. ஏற்றம் காண வைத்த வாழ்த்துப்பாவில் எங்கள் மனமும் நிறைந்தது. நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மனம்நிறைந்து வாழ வடித்ததமிழ்த் தேனைத்
      தினமுண்டு வாழ்க திளைத்து!

      Supprimer
  7. அருமையான பாமாலை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாமாலை பாடிப் பணிவுடன் தந்துவந்தேன்
      பூமாலை போன்றே பொலிந்து!

      Supprimer
  8. ஆஹா அருமையான வாழ்த்துப்பா ...!
    எத்தனை காலத்தின் பின் நெஞ்சை நிறைக்கும் வண்ணம் அமைந்தது
    வாழ்த்துக்கள் ...!.
    தம +11

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆகா எனப்பாடி அன்பைப் பொழிந்துள்ளீர்!
      ஓகோ எனச்சீர் உரைத்து!

      Supprimer

  9. அருட்பா அரங்கம் அளித்தமலர் கண்டேன்!
    அரும்பா அமுதத்தை உண்டேன்! - பெரும்பா
    நடைதொடுக்கும் பாவலனே! நற்றிமிழைக் காக்க
    படைநடத்தும் காவலனே பாடு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்னடைப் பாக்களை நல்கும் தமிழ்ச்செல்வன்!
      இன்னடை நெஞ்சன்! எழிற்புலவன்! - வன்படை
      யாக வரும்மறவன்! ஆழ்த்தபுகழ் காண்கவே
      ஏகன் திருவருள் ஏற்று!

      Supprimer
  10. சித்திரை நிலவில் செழுமை கொண்டு
    நித்திரையின்றி நேசம் கண்டு
    பத்திரை மாற்றுத் தங்கமென
    படைக்கட்டும் அன்பை வென்று

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவியாழி தந்த கருத்துரை என்றன்
      செவியாழ்ந்து நிற்கும் செழித்து!

      Supprimer
  11. அழகான அருமையான வாழ்த்து மலர் மணம் வீசுகின்றது! தமிழ் வரிகளில்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை உணர்ந்தே அளித்த கவிதை!
      பெருமை உணர்ந்ததைப் பேசு!

      Supprimer