samedi 14 mars 2015

தாய்மொழிநாள்




புதுவைப் பாவலா் பயிற்சிப் பட்டறை

நடத்திய பாட்டரங்கம்
[தலைமைக் கவிதை]

தாய்மொழிநாள்

தமிழ் வணக்கம்!

மலர்பூக்கும்! மனம்பூக்கும்! எழில்சேர் மங்கை
     மணிவிழிகள் தாம்பூக்கும்! வையம் போற்றும்
நலம்பூக்கும் திருக்குறளை நன்றே கற்றால்
     நம்மினத்தின் சீர்பூக்கும்! சான்றோர் நுாலால்
புலம்பூக்கும்! புகழ்பூக்கும்! புதுமை பூக்கும்!
     புத்தமுதாய்ப் புன்னகையும் பூக்கும்! இந்த
நிலம்பூக்கும் பூவெல்லாம் தோற்கும் வண்ணம்
     நெஞ்சத்துள் கவிபூக்கத் தமிழே காப்பாய்!

இறை வணக்கம்

சீர்பூத்த செழுங்கம்பன் நுாலில் வாழும்
     செம்பொருளே! பொன்மறையே! பாடிப் பாடிப்
பேர்பூத்த ஆழ்வார்கள் நெஞ்சுள் நின்ற
     பெருமாளே! நெடுமாலே! சுழலு கின்ற
பார்பூத்த பொழுதினிலே தமிழைத் தந்து
     பயன்பூத்த என்னிறைவா! பசுமை பொங்கக்
கார்பூத்த திருமலையில் வாழும் தேவா!
     கவிபூத்த இவ்வரங்கைக் காப்பாய் நன்றே

அவை வணக்கம்!

பொங்குதமிழ் பூக்கின்ற புதுவைத் தாயின்
     பொன்னடியை வணங்குகின்றேன்! உங்கள் நெஞ்சுள்
தங்குதமிழ் தந்திட்ட இலக்கி யர்தம்
     தாள்தொட்டு வணங்குகின்றேன்! விழுதாய் நாளும்
தொங்குதமிழ் பாடுகின்ற உங்கள் முன்னே
     துாயகவி வணங்குகின்றேன்! சந்தம் பாடிச்
சுங்குதமிழ் காட்டுகின்ற ஆய்வு வேந்தா்
     சுடர்.அரங்க இராசரை..நான் வணங்கு கின்றேன்!

முன்பிறந்த முத்தமிழை உலகம் போற்றி
     முழங்கிடவே தாய்மொழிநாள் வேண்டும்! வேண்டும்!
தன்பிறந்த நாளுக்குச் சாலை எங்கும்
     தலைவனெனப் படமொட்டித் திரிதல் வீணே!
பின்பிறந்த பலமொழிகள் ஆட்சி மன்றில்
     பெருமையுடன் அமர்ந்தனவே! அறங்கள் சூடி
இன்குவிந்த வாழ்வுக்கு வழியைக் காட்டும்
     எழில்தமிழாள் அரசாளும் நாளே பொன்னாள்!

அடுத்துவரும் தலைமுறையைக் காக்க வேண்டின்
     அமைத்திடுக தாய்மொழிநாள்! மேன்மை யாவும்
தொடுத்துவரும் வண்ணத்தில் எதிலும் எங்கும்
     துாவிடுக தமிழ்விதையை! நம்மின் வாழ்வைத்
தடுத்துவரும் பகைசாயும்! சாதி நீங்கும்!
     சமயத்தின் தீ[து]ஒழியும்! உங்கள் நெஞ்சம்
அடுத்துவரும் பிறவியிலும் தமிழைப் பாடி
     அழகேந்தி அறிவேந்தி ஒளிரும் என்பேன்!

பற்றில்லாத் தமிழருக்குப் பண்பை ஊட்டிப்
     பகையெதிர்க்கும் மறமூட்டும் மொழிநாள் வேண்டும்!
கற்றெல்லாத் திசைகளிலும் தமிழன் சென்று
     கனித்தமிழின் தொன்மையினை உரைக்க வேண்டும்!
ஒற்றெல்லாம் உயிர்சேரும் இயல்பைப் போன்றே
     உயர்ந்தோரின் உள்ளங்கள் தமிழில் ஒன்றும்!
பொற்பெல்லாம் நாம்பெற்று வாழ்தல் வேண்டின்
     பொழுதெல்லாம் தமிழ்முழக்கப் பணிகள் செய்வீர்!

தன்மானம் பெற்றிடவும், வாழ்வைக் காக்கும்
     தமிழ்மானம் காத்திடவும் மொழிநாள் வேண்டும்!
பொன்வான விடிவாக நெஞ்சம் மின்னப்
     பூந்தமிழின் நன்னெறியைப் போற்ற வேண்டும்!
இன்கான யாப்பழகைக் கற்க வேண்டும்!
     இனமானம் உயிரென்றே இயம்ப வேண்டும்!
உன்னுான உள்ளத்தை மெல்ல மாற்றி
     உயா்தமிழால் ஒளியேற்று! பாரே வாழ்த்தும்!

பொய்யுரைத்து நம்வாழ்வைப் பொசுக்கப் பார்க்கும்
     புல்லர்களைப் போக்கிடவே மொழிநாள் வேண்டும்!
மெய்யுரைத்து விழிப்பூட்டி இருளைப் போக்கி
     வெற்றிபெறும் வீரத்தை விளைக்க வேண்டும்!
செய்..துடித்துக் கடமையினை! செம்மை காணச்
     சீா்திருத்து மேதினியை! கீழ்மைப் போக்கை
எய்..முடித்து! பிறப்பொக்கும் நெறியை ஓதி
     இவ்வுலகை மேலுயா்த்து! புகழே ஓங்கும்!

பாட்டரங்கில் தாய்மொழிநாள் தலைப்பில் பாடப்
     பாவலரை அழைக்கின்றேன்! ஆட்சி செய்யும்
நாட்டரங்கில் நற்றமிழை அமரச் செய்யும்
     நல்லகவி தந்திடுவார்! இதயம் என்னும்
கூட்டரங்கில் இவர்பாடல் இனிக்கும் என்பேன்!
     குயிலரங்காய் இவ்வரங்கம் மணக்கும் என்பேன்!
வேட்[டு]அரங்கில் விழுந்ததுபோல் கைகள் தட்டி
     வியன்தமிழை வரவேற்று மகிழ்வீர் இன்றே!

முடிப்பு கவிதை

வெள்ளிக் கிழமைப் பாட்டரங்கில்
     வியக்கும் வண்ணம் கவிபடைத்தார்!
துள்ளி ஓடும் மானாட்டம்
     துரத்தும் வேங்கைக் கண்ணேட்டம்
அள்ளிப் பாட்டில் அளித்திட்டார்!
     அமுதாய் நாமும் சுவைத்திட்டோம்!
பள்ளி கொண்ட திருவரங்கன் 
     பார்வை இவா்மேல் படருகவே!

மொழிநாள் என்னும் நற்றலைப்பில்
     மொழிந்த கவிகள் வாழியவே!
வழிநான் என்றே முன்னிற்கும்
     வல்ல புலவோர் வாழியவே!
பழிநாள் இன்றிப் பாதையினைப்
     படைக்கும் தமிழர் வாழியவே!
பொழில்நாள் என்பேன் இந்நாளை!
     புகன்றேன் வணக்கம்! நனிநன்றி!

20.02.2015 புதுவை

26 commentaires:

  1. வணக்கம் ஐயா !

    தேன் சிந்தும் கவிதை வரிகளைக் கண்டு நான் சிந்து பாடுகின்றேன்
    மகிழ்ச்சியில் இன்று அந்த மகிழ்ச்சியோடு அன்னைத் தமிழுக்கு
    அழகு சேர்க்கும் தங்களின் பணி மென் மேலும் சிறந்து விளங்க
    வேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகின்றேன் .வாழ்க தமிழ் !
    வளர்க தம் பணி !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அடியார் அளித்த கருத்துக்குள்
      எம்மேல் பொழியும் இனிப்பு!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      முத்தான பாட்டென்று முன்வந்து மொழிந்துள்ளீா்
      சத்தான சொற்களைத் தந்து!

      Supprimer
  3. தேனினும் இனிய பாக்களால்
    தமிழன்னைக்கு அமுது படைக்கும்
    தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேன்சுவைப் பாக்களைத் தேடி வருகின்றீர்!
      வான்மழை நல்கும் வளம்!

      Supprimer
  4. மனம் லயிக்கும் தமிழ்வணக்கத்தில். தலைவணங்கும் தானே இறைவணக்கத்தில்.சந்தம் பல பாடியே சங்கத்தினரை மகிழ்வித்த தங்கள் புலமையை என்னென்று சொல்வது. வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா.
    அழகுத் தமிழனங்கை ஆளுகின்ற ஆசான்
    பழகிடுமே பாக்கள் பணிந்து

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சசிகலா தந்த தமிழ்படித்தால் கொண்ட
      பசியெலாம் போகும் பறந்து!

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா

    தேன் தமிழ் செழிக்க செந்தமிலும் நீ பாடி
    சந்தமது கொண்டு சாயலை நான் படித்தேன்
    இன்பமது கண்டு மகிழ்ந்தது மனம்
    நல்கவியை படித்தபோது நாவரண்டு போணது
    தமிழ் இசையில் சந்தமும் சிந்து பாடுது

    அருமையாக உள்ளது ஐயா... பகிர்வுக்கு நன்றி த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேடி வருகின்ற தென்றலென நம்ரூபன்
      நாடிக் கொடுத்தார் நலம்!

      Supprimer
  6. தடையற்று ஓடும் தண்ணீர்போல் சொற்கள்
    இடையற்று வரிகளில் இயல்பாக வந்தன!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தடைவென்று பாய்கின்ற தன்மை தமிழின்
      கொடையென்று சொல்வேன் குளிர்ந்து!

      Supprimer
  7. தாய்மொழிநாள் வாழ்த்தினிலே தமிழின் தாகத்
    தடையறுத்த கவியெல்லாம் கண்டேன் ஐயா
    வாய்மொழியில் கேட்டோரின் மனதைப் போல
    வாசித்து உளம்மகிழ்ந்தேன் ! வானோர் கொஞ்சும்
    தூய்மனத்தைக் கொண்டவரே ! ஏக்கம் நூறில்
    துலங்குகின்ற தொன்மரபின் யாப்பைக் கற்றேன்
    சேய்மனத்தை உணர்கின்ற தாயைப் போலச்
    செய்துவரும் தமிழ்பணிக்கு எந்தன் நன்றி !

    அவைவணக்கத்தில் ஆயிரம் அர்த்தங்கள் அத்தனையும் அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    தம 9

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சீராளன் தந்த செழுந்தமிழ் என்னுள்ளே
      போராடும் இன்பம் பொழிந்து!

      Supprimer

  8. புதுவைப் புகழ்பரப்பும் பொங்குதமிழ் நெஞ்சா!
    எதுகை மணக்கும் எழிலா! - மதுவாய்த்
    தலைமைக் கவிதையில் தந்ததமிழ் உண்டேன்
    புலமை பொலிந்திடும் பூத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மொழிநாள் எனநான் மொழிந்த கவிதை
      வழிநான் எனவளம் வார்க்கும்! - விழியிருந்தும்
      இந்தத் தமிழர் இருள்கொண்டார்! என்மனம்
      நொந்து துடிக்கும் நொடிந்து!

      Supprimer
  9. பாக்கள் ரசித்(தேன்) ஐயா
    த.ம. 11

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாக்கள் படித்துப் படைத்திட்ட வாக்கிற்குப்
      பூக்கள் பொழிந்தேன் புகழ்ந்து!

      Supprimer
  10. Réponses

    1. வணக்கம்!

      ஆகா எனவிங்[கு] அருமை தமிழ்தந்தால்
      ஓகோ எனச்சொல்வேன் ஓா்ந்து!

      Supprimer
  11. எந்த ஒரு பொருண்மையையும் பதியும் முறை ஒன்று உள்ளது. அந்த முறையில் தங்களின் இந்த முறை வித்தியாசமாக உள்ளது. கவிதை நடையில் அழகான தலைப்பில் தமிழ் மொழியில் அழகினை ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதிய முறையில் புலமை பொலிந்து
      பதியும் படைப்பே படைப்பு!

      Supprimer
  12. படித்தேன் ரசித்தேன் சுவைத்தேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படித்தேன்! சுவைத்தேன்! படைத்துள்ள சொற்கள்
      அடைத்தேன் அளிக்கும் அணைத்து!

      Supprimer
  13. அழகிய நடையில் தங்களின் கவிதை. நன்று.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகிய நன்னடையில் ஆா்த்த கவிகள்
      பழகிய யாப்பின் பாிசு!

      Supprimer