lundi 12 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 122]





காதல் ஆயிரம் [பகுதி - 122]


991.
இருள்வேண்டும் இன்பம் இனிக்க! அவளின்
அருள்வேண்டும் ஆசை தழைக்க! - உருகி
வரவேண்டும்! வாரி அணைத்தே இதழில்
தரவேண்டும் தாகம் தணித்து!

992.
சும்மா இருந்தவனைத் தொட்டுத் தழுவியதேன்?
அம்மா அழைக்க அகன்றதுமேன்? - செம்மலரே!
தம்மா அளவேணும் தாகம் தணிந்திடவே
உம்மா கொடுப்பாய் ஒளிந்து!

993.
நறுமொழி தேனேந்தி நங்கையே உன்றன்
மறுமொழி நெஞ்சை மயக்கும்! - பொறிகள்
உருமாறிப் போகும் எனையுன்..கை தொட்டு!
கருமாறிப் போகும் கருத்து!

994.
சீரின்றி நின்ற செயலழித்தாள்! இங்குநான்
பேரின்றி நின்ற பிழைதுடைத்தாள்! - ஆரமுதாள்!
தேரின்றி போரின்றி என்னைச் சிறையெடுத்தாள்!
நீரின்றி மூழ்கிடும் நெஞ்சு!

995.
கண்ணாளும் காரிகையே! கட்டழகே! கற்கண்டே!
பெண்ணாளும் பேறுகளைப் பெற்றவளே! - எண்ணத்தால்
பொன்னாளும் பூங்கொடியே! புத்தமுதே! என்னுயிரே!
எந்நாளும் என்னுள் இரு!

(தொடரும்)

8 commentaires:

  1. இளமையின் எழுச்சி இன்னும் உங்களிடம் இருக்கிறது

    RépondreSupprimer
  2. ஆயிரம் நோக்கிப் பீடு நடையோ ?
    ஆவலுடன் நான் ......
    ஒரு கணிகைக்கு ஆயிரம் காதல் பாமாலையா ?
    அடேயப்பா .....
    படங்களின் துல்லியம் , அழகு அருமையோ அருமை.

    RépondreSupprimer
  3. கவிஞர் ஐயா!

    எதிர்காலத்தில் காதலுக்கு ஒரு கவிதைத் தொகுப்பென்றால் உங்களின் இந்தக் காதல் ஆயிரம் மட்டுமே போதும்! களைகட்டும்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. இருள்வேண்டும் இன்பம் இனிக்க! அவளின்
    அருள்வேண்டும் ஆசை தழைக்க! - உருகி
    வரவேண்டும்! வாரி அணைத்தே இதழில்
    தரவேண்டும் தாகம் தணித்து!

    முத்தத்தில் வித்திட்ட முதல்காதல் மண்ணில்
    செத்தாலும் வாழும் செழித்து ..!

    மிக மிக அழகிய பா

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    த ம 6

    RépondreSupprimer
  5. எத்தனைக் கோடி இனிமை! எழிற்கவியே
    அத்தனைப் பாட்டும் அமுதமே! - முத்தமிழ்
    சித்தம் நிறைந்து சிலிர்க்குதே என்நெஞ்சில்
    புத்தம் புதியதாய்ப் பூத்து!

    அத்தனையும் மிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  6. தித்திக்கும் செந்தமிழால் எத்திக்கும் முழங்கினீர் .
    காதல் பாக்கள் பூக்கள் போல் நித்தமும்
    மலர்ந்தது கண்டு வண்டுகள் காதல் தமிழ்
    உண்டு களித்தன . மயக்கத்தில் திளைத்தன.
    வாழ்த்துக்கள் செப்பின தொடரவே !

    RépondreSupprimer