samedi 3 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 113]



காதல் ஆயிரம் [பகுதி - 113]


946.
ஒத்தவரி சொல்வாய் உயிர்பிழைக்க! நீ..தந்த
பித்தமடி! நெஞ்சைப் பிழியுமடி! - கொத்துமலர்
போன்று சிரிப்பவளே! போதை கொடுப்பவளே!
ஊன்றும் உணர்வை உணர்!

947.
எண்ணிக்கை இன்றி இனியகனி முத்தங்கள்
கண்ணிமைக்கும் காலத்தில் தந்தவனே! - பெண்ணழகை
அங்குலம் அங்குலமாய் நன்களந்து உண்டவனே!
எங்குள்ளாய் என்னை மறந்து!

948.
நங்கையைத் தேடி நலிவதேன்? வான்மதி
தங்கையைத் தேடித் தவிப்பதேன்? - எங்கிருப்பாள்?
மின்னும் வடிவாய் விளைந்துள்ள ஆசையுடன்
உன்னுள் இருப்பாள் ஒளிர்ந்து!

949.
கட்டி அணைத்துக் கவிபாடு! முத்தங்கள்!
கொட்டிக் கொடுத்துக் குளிர்ந்தாடு! - மெட்டின்
ஒலியோசை என்றன் உயிர்வரை தாக்கும்!
கிளியோசை கொஞ்சும் கிளர்ந்து!

950.
கொஞ்சிடும் பாக்கள் குவிப்பவனே! நல்லமுதை
விஞ்சிடும் பாக்கள் விளைப்பவனே! - நெஞ்சத்தைக்
கஞ்சாய்க் கொதித்திடக் காய்ச்சாதே! உன்னினைவில்
பஞ்சாய்ப் பறக்கிறேன் பார்!

(தொடரும்)

4 commentaires:

  1. இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்துவதற்குப் பதிலாய் உங்களின் காதல் கவிநீரைப் பகிர்ந்துவருகிறேன்

    RépondreSupprimer

  2. உயா்கம்பன் காவியத்தை ஓதும் புலவா்
    உயிர்க்கம்பன் என்றே உரைப்பார்! - இயலிசை
    பின்னிப் படைக்கும் பெருஞ்சீா் நிகழ்வனைத்தும்
    மின்னிச் சிறக்கும் விழா!

    RépondreSupprimer
  3. கொஞ்சும் வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  4. கவிதரும் போதை கலந்திட வாழ்வில்
    புவிபெறு மின்பம் புதிது!

    RépondreSupprimer