vendredi 16 août 2013

தேன்.. தேன்.. தேன்..
தேன்... தேன்... தேன்...

அன்பும் பண்பும் ஒளிர்கின்ற
     அகமே இறைவன் வீடாகும்!
நன்றே தேவன் திருப்பெயரை
     நவிலல் பிறப்பின் பேறாகும்!
துன்பம் கூடி வதைவோர்தம்
     துயரைத் துடைத்தல் வாழ்வாகும்!
என்றும் தமிழர் செந்தமிழின்
     எழிலைக் காத்தல் நலமாகும்!

உள்ளே ஒன்றும் வெளியொன்றும்
     உரைத்துத் திரிதல் தீதாகும்!
கல்லே என்று மனமுற்றால்
     கற்ற கல்வி பாழாகும்!
எல்லாம் தமக்குத் தெரியுமென
     இறுமாந் துலறல் அழிவாகும்!
தௌ்ளத் தெளிந்த நன்னெறியின்
     தேனைக் குடித்தல் அறிவாகும்!

நான்..நான் என்று புகழ்பேசி
     நடிக்கும் செயலை நீக்குகவே!
ஏன்..ஏன் என்று முன்வினையை
     எண்ணி ஆய்ந்தே உணருகவே!
வான்..வான் என்று வளமருளும்
     வாழ்வைத் தொண்டாய் மாற்றுகவே!
தேன்..தேன் என்று செழுந்தமிழில்
     தேவன் சீரைப் போற்றுகவே!

11.11.2003

30 commentaires:

 1. தலைப்பு மட்டுமா
  கவிதையின் கருத்தும் கவிதையும் கூட
  தேன் தேன் தேன் தானே
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வானாய் விரிவெய்தும் வண்ணக் கருத்தெல்லாம்
   தேனாய் இனிக்கும் திரண்டு!

   Supprimer
 2. Réponses

  1. வணக்கம்!

   நன்றி நவின்றேன் இரமணியார் கைகளுக்கு!
   என்றும் எழுதுவீா் இங்கு!

   Supprimer
 3. தமிழர் செந்தமிழின்
  எழிலைக் காத்தல் நலமாகும்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   செந்தமிழ்ச் சீரைச் சிறப்புடன் நாம்காத்தால்
   வந்தெய்தும் வண்ணமிகு வாழ்வு!

   Supprimer
 4. நான்..நான் என்று புகழ்பேசி
  நடிக்கும் செயலை நீக்குகவே!
  ஏன்..ஏன் என்று முன்வினையை
  எண்ணி ஆய்ந்தே உணருகவே!
  வான்..வான் என்று வளமருளும்
  வாழ்வைத் தொண்டாய் மாற்றுகவே!
  தேன்..தேன் என்று செழுந்தமிழில்
  தேவன் சீரைப் போற்றுகவே!

  ------------

  அருமை... அருமை...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   திருவரங்கன் சீரடியைச் செந்தமிழில் பாட
   பெருமினிமை காண்பான் பிரண்டு!

   Supprimer
 5. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் கருணை புரிவாராக !
  நல்லதொரு பக்திப் பாடல்.

  RépondreSupprimer
  Réponses

  1. பக்தி இதழுக்குப் பாடிய பாவிது!
   சக்தி கொடுக்குமெனச் சாற்று!

   Supprimer
 6. வணக்கம் ஐயா !

  இன்பத் தேனை ரசித்தேன்
  இதயம் மகிழச் சுவைத்தேன்
  அள்ளிக் கொஞ்சம் எடுத்தேன்
  இதன் அருமை பெருமை உணர்ந்தேன்
  இன்னும் வேண்டும் என நினைத்தேன்
  ஈசன் திருவடியில் பணிந்தேன்
  உன்னைக் காக்கும் செந்தேன்
  உயிராம் தமிழென எட்டடியில் எழுதி வைத்தேன்

  வாழ்த்துக்கள் ஐயா....

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அம்பால் வருகைக்கு அடியவனின் நன்றிகள்!
   உம்மால் அடைந்தேன் உயா்வு!

   Supprimer
 7. எங்கள் வாழ்வில் என்றென்றும்
  ஒன்றாய் இருக்கும் ஒருவனவன்
  வென்றே நாமும் வினைகளையே
  நன்றாய் உயர்ந்தே நலம்பெறுவோம்!

  அன்றே பாடிய அத்தனையும்
  இன்தேன் அமுதாய் எமக்கிங்கே
  தந்தீர் சிந்தை சிறந்திடவே
  வந்தேன் வணங்கி வாழ்த்தினனே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   என்றன் கவிதைகளை இன்கனிபோல் உண்ணுகின்ற
   உன்றன் எழுத்தென் உயிர்!

   Supprimer
  2. ஐயா!

   நன்றே இங்கு நாநூறு பதிப்புகள்
   இன்றே ஆனது இப்போது கண்ணுறவே
   வந்தேன் வாழ்த்திட விரும்பியே உங்களைச்
   செந்தேன் நம்தமிழ் சிறப்புடன் காத்திடுமே!

   இன்று உங்களின் இப்பதிவுடன் 400 பதிவுகளை எட்டிப் பிடித்துள்ளீர்கள்!
   மிகவும் மகிழ்வாயிருக்கின்றது!

   மேலும் மேலும் பலநூறு பதிவுகளைப் படைத்து பல ஆயிரமாகப் பெருகிட
   உளமார வாழ்த்துகிறேன்!

   வாழ்க எங்கள் செந்தமிழ்!
   ஓங்குக உங்கள் தமிழ்த்தொண்டு!!

   Supprimer

  3. வணக்கம்!

   நானுாறு நற்பதிவை நன்றே கணக்கிட்டுத்
   தேனுாறித் தந்த செழுந்தமிழில் - நானுாறி
   நிற்கின்றேன்! நாளும் நெடுந்தமிழை நெஞ்சேந்திக்
   கற்கின்றேன் பாடல் கலை!

   Supprimer
 8. தேன்! தேன்!! தேன்!!!

  அற்புதத் தேன்! அள்ளிக் குடித்தேன்! ஆனந்தித்தேன்!

  கண்கவர் பெருமாள் பொற்கோலம் மேலும் சிறப்பு!

  வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பொற்கோலப் செல்வனைப் போற்றி மகிழ்ந்திட்டால்
   நற்கோலம் பொற்றிடுவோம் நாம்!

   Supprimer

 9. பொன்னரங்கன் நற்றாளைப் போற்றும் புலவரே!
  இன்னரங்கம் உன்றன் எழுத்தெல்லாம்! - என்னரங்க
  நெஞ்சுக்குள் என்றும் நிலைத்திருக்கும் உம்கவிதை!
  விஞ்சும் இனிமை விளைத்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   அன்னைத் தமிழ்தந்த நல்லருளால் பாடுகிறேன்
   பொன்னை நிகா்த்த புகழ்க்கவிதை! - என்னை..நீ
   போற்றும் எழுத்தெல்லாம் பூமகன் இன்னடியில்
   சாற்றும் எனதுயிர் சார்ந்த!

   Supprimer
 10. தேன் தேன் தேன்
  சுவைத்தேன்
  மகிழ்ந்தேன்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மோனை எதுகை முகழ்த்தாடும் என்கவிதைத்
   தேனைச் சுவைபீா் தினம்!

   Supprimer
 11. தேன் தேன் என்று சொல்லி
  தெவிட்டா பாடல் தந்தீர்கள்
  வான் பொலென்றும் நிலையான
  வாழும் தமிழை ஈன்றீர்கள்
  கண்டால் உங்கள் கவியமுதை
  காயும் பழமாய் இனித்திடுமே
  சீரும் புகழும் கொண்டென்றும்
  சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்...!

  அள்ளித் தந்த கவியெல்லாம்
  அழகோ அழகோ .....ருசித்தேன் ரசித்தேன்

  நன்றி
  வாழ்த்துக்கள் கவிஞரே
  வாழ்க என்றென்றும் நலமுடனே ..!
  த ம 9

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சீராளன் வந்திங்குச் செப்பிய செந்தமிழ்
   பாராளும் நன்றே படா்ந்து!

   Supprimer
 12. தேன் தேன் என்று சொல்லி
  தெவிட்டாப் பாடல் தந்தே
  வான் பொலென்றும் நிலையான
  வாழும் தமிழை ஈன்றீர்கள்
  கண்டால் உங்கள் கவியமுதை
  காயும் பழமாய் இனித்திடுமே
  சீரும் புகழும் கொண்டென்றும்
  சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்...!

  நானூறு பதிவுகளில் நான்கண்ட பலவற்றில்
  பாலாறு போலும்,பனிமலர் சோலைபோலும்
  தேனூறும் கவிதைகளின் சிறப்புக் கண்டேன்
  தேமதுரக் கவியேயுன் தீர்த்தங்கள் தினம் வேண்டும்...!

  அள்ளித் தந்த கவியெல்லாம்
  அழகோ அழகோ .....ருசித்தேன் ரசித்தேன்
  நன்றி
  வாழ்த்துக்கள் கவிஞரே
  வாழ்க என்றென்றும் நலமுடனே ..!
  த ம 9

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாலாறு போல்பாயும் பைந்தமிழில் நீந்திடுக!
   சேலாடும் வண்ணம் திளைத்து!

   Supprimer
 13. வணக்கம் ஐயா தேன் தேன் தேன் இன்பத்தேன் தமிழ் தேன் சுவைத்தேன் வாழ்த்துக்கள் ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வருகைக்கு நன்றி! இனிதே வரவேற்று
   இருகை குவித்தேன் இணைத்து!

   Supprimer
 14. இன்ப உலகத்தை காட்டிய ஈசனுக்கு நன்றி. இது வரை இருட்டிலேயா இருந்தேன்.பக்தி பண்பு காதல் இவையெல்லாம் பாலும்,பழமுமாக, பழரசமாக பருக்கி விடுகிறீர்களே இப்படி அருமை அருமை தத்தி தத்தி நடக்கும் பிள்ளை நான் உங்கள் தேமதுர கவிதை எல்லாம் உண்டு களிப்போடு வளருவேன்,என்று நம்புகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கும், உங்கள் தாலட்டுக்கள். http://kaviyakavi.blogspot.ca/

  RépondreSupprimer

 15. வணக்கம்!

  இனியார் இணையெனப் இப்புவி போற்ற
  இனியா எழிற்தமிழை ஏந்து!

  RépondreSupprimer