samedi 3 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 114]




காதல் ஆயிரம் [பகுதி - 114]


951.
பூக்காட்டைச் சூடிப் பொலிக்கின்ற பேரழகே!
பாக்காட்டைச் சூடிப் பயன்தர..வா! - சாக்காட்டைப்
போக்கும் புதுமருந்தே! பொங்கும் தமிழ்விருந்தே!
பூக்கும் புலமைப் பொழில்!

952.
பரவும் நினைவுகளில் பற்றிக் கிடந்தேன்!
விரவும் கனவுகளில் வீழ்ந்தேன்! - விருந்தாய்
இரவில் வருகைதரும் என்னரசே! உன்றன்
உருவில் உருகும் உயிர்!

953.
நித்தம் குரல்கேட்க வேண்டும்! நிலவே!என்
சித்தம் இழந்தேன்! செயல்மறந்தேன்! - கத்திக்
கசியும் கவிமனத்தைக் காணாமல் போனாய்!
வசியம் புரிந்தாய் வளைத்து!

954.
பொன்வேண்டாம்! எந்தப் பொருள்வேண்டாம்! சேர்த்துள்ள
மண்வேண்டாம்! வாழும் வளம்வேண்டாம்! - கண்ணே!உன்
கட்டழகை நான்சுவைக்கும் காலம் கனியட்டும்!
மொட்டழகைப் போர்வையால் மூடு!

955.
குரல்கேட்டு வாயும் குளறும்! இதமாய்
விரல்தொட்டுப் பொன்மேனி வீங்கும்! - திரளாய்
வரும்கனவு நாளும் வளரும்! இனிமை
தரும்உணர்வு நாளும் தழைத்து!

(தொடரும்)

3 commentaires:

  1. பாக்கள் பகரும் பலவித பாவனை
    பூக்களே கொள்ளும் பொலிவு!

    சீர்களும் சந்தங்களும் போட்டி போட்டுக்கொண்டு உங்கள் பாக்களில் நடனமிடுகின்றன!

    அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  2. ஐயா...

    அதிகம் சொல்லத் தெரியவில்லை!.

    கொள்ளைக்காரக் கவிஞர் நீங்கள்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer