dimanche 25 août 2013

ஐயப்பன் பதிகம்ஐயப்பன் பதிகம்

நெய்யில் மணக்கும் அய்யா!என்
     நெஞ்சில் மணக்க மாட்டாயோ?
பொய்யில் மணக்கும் நட்புகளைப்
     போக்கும் வழியைக் காட்டாயோ?
மெய்யில் மணக்கும் நன்னெறியை
     மேவும் திறனைக் ஊட்டாயோ?
செய்யுள் மணக்கும் செந்தமிழைச்
     சீராய் எனக்குச் சூட்டாயோ?

உகர எழுத்தின் உட்பொருளை
     உணர வைத்த ஒண்சுடரே!
அகர முதல எழுத்தெல்லாம்
     அறிய வைத்த அருளமுதே!
மகரச் சோதி வடிவாக
     வானில் தோன்றும் மாமணியே!
தகர மான என்னெஞ்சைத்
     தங்க மாக்கி உயர்த்துகவே!

தூண்டும் மனத்தைப் பாழ்வினைகள்
     துன்பம் மூட்டும் புன்னெறிகள்
யாண்டும் என்னை வாட்டியதால்
     இடரில் சிக்கித் தவித்தனனே!
மீண்டும் உலகில் பிறந்திட்டால்
     வீரா உன்னை மறவாமல்
வேண்டி வாழும் நன்னிலையை
     வியக்கும் வண்ணம் தருவாயே!

தாயின் சொல்லைத் தட்டாமல்
     தனித்துச் சென்றாய் காட்டுக்கு!
பாயும் புலிமேல் பயமின்றி
     அமர்ந்து வந்தாய் நாட்டுக்கு!
சேயுன் செயலை அன்றுலகம்
     திகைத்து வணங்கி நின்றதுபோல்
வாயில் சொற்கள் வாராமல்
     மயங்கி யானும் தொழுகின்றேன்!

ஞானப் படிகள் பதினெட்டில்
     நலங்கள் யாவும் வைத்தாயே!
காண வந்த அடியவரின்
     கண்ணீர் நீக்கிக் காத்தாயே!
ஊன மின்றி என்னுள்ளம்
     உண்மை நெறியில் ஓங்கிடவே
மோன நிலையில் அமர்ந்துள்ள
     முகுந்தன் மகனே அருளுகவே!

கோட்டை ஆண்ட பந்தளனின்
     குறையைப் போக்கச் சபரியிலே
நாட்டைக் காத்து மகிழ்விக்க
     நன்றே கோயில் கொண்டாயே!
பேட்டை துள்ளும் அடியார்தம்
     பிணிகள் நீக்கும் நற்றவனே!
மூட்டைச் சுமையாய் என்றலையில்
     மூளும் தீதை ஓட்டுகவே!

கல்லும் முள்ளும் குத்தாமல்
     காட்டில் என்னைக் காத்தவனே!
சொல்லும் செயலும் தவறின்றிச்
     சுடரும் வண்ணம் தருவாயே!
கொல்லும் முன்னை வினைநீக்கிக்
     கொஞ்சும் வாழ்வைக் கொடுப்பாயே!
வெல்லும் வீர வில்லுடையோய்
     வேண்டும் வரங்கள் அளிப்பாயே!

இறைவா உன்னை எப்பொழுதும்
     என்னுள் வைத்துப் போற்றுகிறேன்!
குறையே இல்லாக் கூர்மதியைக்
     கொடுக்க வேண்டும் வளமுடனே!
மறையே! மணியே! மரகதமே!
     மாசில் வடிவே மாநிதியே!
நிறைவாய் எங்கும் ஒளிர்கின்ற
     நீலச் சுடரே காத்தருளே!

தானே பெரிதாய் என்றெண்ணித்
     தடித்த மகிசி மாய்த்திடவும்
வானோர் போற்றி மகிழ்ந்திடவும்
     வந்து உதித்த வடிவழகா!
நானுன் அடிமை யென்றாகி
     நற்பேர் எய்திச் சிறந்திடவே
தேனார் பொழில்சூழ் சபரியிலே
     திகழும் செல்வா அருளுகவே!

தேவா உன்றன் மலரடியைத்
     தேடும் மேலோர் வாழியவே!
நாவால் உன்றன் நற்பேரை
     நவிலும் நல்லோர் வாழியவே!
பாவால் உன்றன் திருவடிவைப்
     பாடும் புலவோர் வாழியவே!
மூவாத் தமிழின் கொடையாலே
     முகிழ்த்த பதிகம் வாழியவே!

13-11-2000

8 commentaires:

 1. மூவாத் தமிழின் கொடையாலே
  முகிழ்த்த பதிகம் வாழியவே!

  அருமையான பதிகம் ..பாராட்டுக்கள்..!

  RépondreSupprimer
 2. ஐயனுக்கு சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள்...

  RépondreSupprimer
 3. அருமையான ஐயப்பன் பதிகம்
  அகம் மகிழ உருகப் படித்தேன்
  நெய்த் தீபம் ஏற்றி பொய்யகல வாழ்வில்
  கைமேல் பலனளிக்கும் ஐயப்பனின் அடிபணிவோம்!

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா!

  RépondreSupprimer
 4. வணக்கம்
  ஐயா
  தேவா உன்றன் மலரடியைத்
  தேடும் மேலோர் வாழியவே!
  நாவால் உன்றன் நற்பேரை
  நவிலும் நல்லோர் வாழியவே!
  ஐயப்பன் பதிகம் மட்டும்மல்ல உங்கள் வலைப்பூவில் தமிழ் இரசம் ஓடுது ஐயா வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 5. ஐயப்பன் பதிகம் படித்திடக் கிடைக்கின்ற
  அமைதியோ அதிகம் அதிகம்!

  அருமை! பக்தி ரசம் சொட்டும் பாக்கள்!
  வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
 6. சபரிமலை வாசனுக்கு ஒரு ஆராதனை...
  அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
 7. எழுதிய பதிகம் எல்லாமே
  வழுவா தமிழின் வாசகமே
  தொழுதிட தோணும் மாந்தரையும்
  தழுவிக் கொள்ளுது தன்னாலே
  அழியாப் புகழை கொண்டவரே
  ஐயப்பன் புகழைச் சொன்னீரே
  தெளிவாய் உரைத்த செந்நெறியை
  தேடிச் சுவைத்தேன் மெய்யாலே...!

  அழகிய ஐயப்பன் பதிகம் ஆன்மாவால் ரசித்தேன்
  வாழ்த்துக்கள் கவிஞரே
  8

  RépondreSupprimer
 8. மிக்க மகிழ்ச்சி தருகிறது நன்றி பல தெரிவித்து மகிழ்கிறேன் வாழ்க ஐயன் புகழ் வளர்க அவர்தம் அடியார்கள்

  RépondreSupprimer