lundi 5 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 115]




காதல் ஆயிரம் [பகுதி - 115]
 
956.
கற்பனை வானில் களித்திடுவோம்! நாமிணைந்து
நற்சுவைப் பாட்டெழுதக் கற்றிடுவோம்! - பொற்றமிழ்
பூத்துப் பொலிந்தாடும்! புன்னகைப் பூஞ்சோலை
கோர்த்துப் பொலிந்தாடும் கூடு!

957.
கல்லும் கரைய கதைபேசி! எந்நாளும்
துள்ளும் இளமையைத் தூண்டுகிறாய்! - கள்ளியே!
வெல்லும் விழியழகே வெண்பாட்டு வேந்தன்நான்
சொல்லும் கவிகளில் சொக்கு!

958.
அன்பால் அணைத்திடுக! ஆர்த்தெழுந்து ஆடுமே
என்பால் இனிக்கும் எழிற்கவிகள்! - இன்பால்
குறள்படித்துக் கூத்திடுவோம்! நாளும் புதிய
பிறப்பெடுத்து வாழ்வோம் பிணைந்து!

959.
உதிக்கின்ற ஆசைகள் உள்ளத்துள் ஓங்கி
விதிக்கின்ற பாதை விரியும்! - வதிந்து
கதியிழந்து நிற்கின்றேன்! காரிகையே உன்னால்
மதியிழந்து நிற்கின்றேன்! மாற்று!

960.
தேடிவந்து தின்னுதடா! தென்றல்போல் இன்பத்தை
நாடிவந்து நல்குதடா! நாவலனே! - கோடிநலம்
பாடிவந்து உன்பா படைக்குதடா! வாடுகிறேன்
கூடிவந்த ஏக்கம் கொழித்து!

(தொடரும்)

6 commentaires:


  1. திகட்டாத தேனாக தங்கள் கவிதைகள்
    சுவைத்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. வெல்லுமே எம்மொழி வீரமுங் காதலும்
    சொல்லுமே வாகையைச் சூடி!

    மிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer