mercredi 14 août 2013

கனிவிருத்தம் -1





கலிவிருத்தம் () கனிவிருத்தம்

1.
கன்னியவள் காதலிலே கட்டுண்டு கிடக்கின்றேன்!
மின்னியவள் மீட்டுகின்ற விழியிசையில் விழுகின்றேன்!
பின்னியவள் பண்ணிவரும் மென்னடையைப் பேணுகின்றேன்!
பொன்னியவள்! பூமியவள்! புதுமையவள்! புகழுமவள்!

2.
கலையென்ன? கயலென்ன? கவிநீந்தும் கடலென்ன?
சிலையென்ன? சிறப்பென்ன? செந்தமிழின் சீரென்ன?
இலையென்னும் இடையென்ன? இணையிலா எழிலென்ன?
அலையென்ன? அமுதென்ன! அருளெனன்ன? அன்பே!வா!

3.
உனைப்பாரா நாள்களிலே ஒளியுண்டோ கண்களிலே?
உனைப்பாடா நாள்களிலே சுவையுண்டோ நாவினிலே?
உனைச்சேரா நாள்களிலே உணா்வுண்டோ உயிரினிலே?
உனையெண்ணா நாள்களிலே நானுண்டோ உலகினிலே?

4.
வந்தாடும் வண்ணமயில்! வஞ்சிதரும் ஆசையினைத்
தந்தாடும் பச்சைவயல்! தஞ்சமிடும் பாவலனைப்
பந்தாடும் மின்னிளமை! பளபளக்கும் பாவையுடல்
சிந்தாடும்! என்னுயிரைச் சோ்ந்தாடும்! பேரின்பம்!

5.
இன்பூறும்! இசையூறும்! இதயத்துள் மதுவூறும்!
அன்பூறும்! அருளூறும்! அருந்தமிழின் அணியூறும்!
என்பூரும் குருதியென எந்நொடியும் நினைவூறும்!
வென்றூறும் கனவுகளின் விழாச்சிறக்க நீ..வேண்டும்!

தொடரும்

13 commentaires:

  1. விருத்தக் கனியின் சுவையில்
    மனம் குளிர்ந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விருத்தக் கனிபெற்ற நன்விருதாய் உன்றன்
      கருத்தைப் பதித்தேன் களித்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      கனியின் சுவையெண்ணி வாக்களித்தீா்! காலைப்
      பனியின் குளிரைப் படைத்து!

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா

    வந்தாடும் வண்ணமயில்! வஞ்சிதரும் ஆசையினைத்
    தந்தாடும் பச்சைவயல்! தஞ்சமிடும் பாவலனைப்
    பந்தாடும் மின்னிளமை! பளபளக்கும் பாவையுடல்
    சிந்தாடும்! என்னுயிரைச் சோந்தாடும்! பேரின்பம்!

    வரிகளின் அர்தங்கள் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      சோ்ந்தாடும் சீராளா! செந்தமிழைச் சோலையில்
      ஊா்ந்தாடும் உன்றன் உறவு!

      Supprimer
  4. ஐயா வணக்கம்!

    நல்ல இன்னுமொரு பாக்கள் வகைத் தொடர் ஆரம்பம்.
    அருமையாக இருக்கின்றதே ஐயா!

    சீர்கள் ஒவ்வொன்றும் மிகமிக அழகாக அடுக்கிவைக்கப்பட்டு
    ஒரு மாலையாகத் தோன்றுகிறது. அற்புதம்!

    ஐயா.. இவ்வகைப் பாக்களைக் கலிவிருத்தம் அல்லது கனிவிருத்தம் என்கின்றீர்கள் .

    இங்கே எனக்கொரு சந்தேகம்!...

    உங்கள் பாக்களில் இங்கே வரும் சீர்கள் அத்தனையும்
    காய்ச்சீர்களாக இருக்க எப்படி இவற்றைக் கனிவிருத்தம் என்கின்றீர்கள்?...
    ஒரு சீர் என்றாலும் கனியாக இல்லையே ஐயா...
    விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

    மிக்க நன்றி!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கனிவிருத்தம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை
      ஒரடியில் நான்கு காய்ச்சீா்கள் பயின்றுவரும் கலிவிருத்தம் ஆகும்

      கலிவிருத்தப் பொது இலக்கணம்
      அளவடி நான்கின கலிவிருத்தம் என்று யாப்பருங்கலம் கூறுகின்றது.
      ஓரடியில் நான்கு சீா்கள் அமைய வேண்டும்.
      அதுபோல் நான்கு அடிகள் வரவேண்டும்.
      நான்கடிகளும் ஓரெதுகை பெற வேண்டும்.
      முதற்சீா் மூன்றாஞ்சீா் மோனை பெறவேண்டும்

      காய்ச்சீா் மட்டுமே பயின்றுவரும் இப்பாட்டைக் கனிவிருத்தம் என்று
      பெயரிட்டது பொருந்துமா?

      முற்றல் கனிபோன்று சுவை தருகின்ற பெண்ணழகை
      இக்கவிதை பாடுவதால் கனிவிருத்தம் என்று பெயரிட்டேன்.

      இயற்கையில் காய் முற்றிக் கனியாகும்.
      காய்ச்சீா்கள் என் காரிகையின் பேரழகைக் கண்டு கனிந்தன!
      ஆதலால் காய்விருத்தம் இங்கே
      கனிவிருத்தம் என்று பெயா் பெற்றது.

      கனிவிருத்தம் என்றபெயா் கன்னல் கவிதைக்[கு]
      இனிபொருத்தம் என்றே இயம்பு!

      Supprimer
  5. கவிஞரே!
    ஐஸ்வர்யாராய் சங்கத் தலைவரோ நீங்கள்.:). அவரின் படத்தை மட்டுமே அடிக்கடி இங்கு காண்கிறேன்.
    அழகுப் பதுமைதான் இந்த நடிகையும். அவர்களுக்கெனவே பாடப்படுகிற கவிதைகளாய் எனக்குத் தோன்றுகிறது. சரி எது எப்படியோ இருக்கட்டும்.

    நல்ல வர்ணனைக் கவிதைகள் ஐயா! அழகினை எப்படியெல்லாம் ரசிக்க முடியுமோ அவ்வளவிற்கு ரசிக்கின்ற, ரசிக்கவைக்கின்றன உங்கள் கவிதைகள்.

    ஐயோ!
    ஐயா..... இதுவும் தொடரோ?......

    கடவுளே! அப்போ இதுவும் கலிவிருத்தம் (அ) கனிவிருத்தம் ஆயிரமோ?

    தாங்குமோ பூமி.:)

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நான் எழுதிய பாக்களுக்குத் தகுந்த படங்களைத் தோ்வு செய்து
      சிறந்த படங்களைப் பதிவிட எனக்குக் காலமில்லை!

      ஏதோ என் கண்ணில் பட்ட படங்களைப் பதிவேற்றுகிறேன்.

      கம்பன் கழகத் தலைமைப்பொறுப்பு ஒன்றே போதும்!
      வேறு பொறுப்புகள் இனி வேண்டாம்!

      பூங்கொடி அவா்களே!

      ஒரு கொடி தன்வாழ்நாளில் எவ்வளவு பூக்களைப் பூக்கும் என்பதைக்
      கணக்கிட்டுச் சொல்லுங்கள்

      ஒரு மாமரம் தன் வாழ்நாளில் எவ்வளவு கனிகள் கொடுக்கும் என்பதைக்
      கணக்கிட்டுச் சொல்லுங்கள்

      நான் எழுதும் பாட்டின் எண்ணிக்கையை உடனே சொல்லிவிடுகிறேன்

      கோடிக் கவிகள் கொடுக்கும் அவளழகைப்
      பாடி மகிழ்வேன் பறந்து!

      Supprimer
  6. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
    சந்தச்சத்தம் சிந்தையில் இனிக்கிறது.
    இலக்கணம் அறிந்ததில் ஓர் திருப்தி !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சந்தத்தில் துள்ளிச் சதிராடும் தண்டமிழை
      கந்தத்தில் சோ்ப்பேன் கணித்து!

      Supprimer

  7. காதல் கடல்குளித்துக் கன்னல் கவிபடித்தேன்!
    மோதல் விழியம்பில் மூச்சடைந்தேன்! - ஊதல்
    குழலிசைபோல் கொண்டு குளிருற்றேன்! உன்றன்
    அழகிசைக் கீடோ அமுத?

    RépondreSupprimer