vendredi 5 avril 2013

வள்ளலாரும் தமிழும்




வள்ளலாரும் தமிழும்
 

   அக்டோபர் 5 வள்ளல் பெருமான் அவதரித்த நன்னாளாகும். சமயப் புரட்சியாளராக ஒளிதந்த வள்ளலாரின் பிறந்த நாளை உலகமுழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி மகிழ்கின்றனா். ஆனம்நேய ஒருமைப்பாட்டையும், சீவகாருண்ய ஒழுக்கத்தையும், சோதி வழிபாட்டையும், மரணமிலாப் பெருவாழ்வையும் அருளிய வடலூராரின் பிறந்த நாளாகிய அக்டோபர் 5 ஆம் நாளை உலக ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தமே யாகும்.

   வள்ளலாரின் அருட்பாவை யாப்புச் சுவைக்காகத்தான் படிக்கத் தொடங்கினேன், படிக்கப் படிக்க வடலூராரின் வண்டமிழ் என் நெஞ்சை வளப்படுத்தியது. என்னுள் இருந்த ஐயங்களைப் போக்கியது.

   பாவேந்தர் பாரதிதாசனார் வடலூராரின் பொது நிலையைக் கண்டு பாடிய வரிகளைக் காணுங்கள்

''துருக்கர் கிருத்தவர் சூழ் இந்துக்களென்று
இருப்பவர் தமிழரே என்பது உணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு
மெச்சவும் காட்டுவோன் வேண்டும் என்றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றே!'' 

    சமற்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று சங்கராசாரியார் கூறிய பொழுது, தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தைமொழி என்று வள்ளலார் பதில் உரைத்தார்.

    தமிழ் மக்களுக்கு முதன் முதலாகத் திருக்குறள் வகுப்பையும், முதியோர் கல்வியையும் நடத்தியவர் வள்ளலார். கல்வெட்டு ஆராச்சியாளராகவும் திகழ்ந்தார்.  

    வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் 1596 அடிகளைக் கொண்டது. தமிழ் இலக்கிய உலகில் மிகப் பெரிய அகவலாக அருட்பெருஞ்சோதி அகவல் இடம் பெற்றுள்ளது.

   நெஞ்சறிவுறுத்தல் என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா 1406 அடிகளைக் கொண்டுள்ளது. தமிழிலக்கியத்தில் வள்ளலார் எழுதிய கலிவெண்பாவே பெரியதாகும்.

    192 சீர் கொண்ட விருத்தத்தையும், 104 கண்ணிகளை உடைய கீர்த்தனையும் பாடித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் வள்ளலார்.

   சங்க காலத்தில் வழக்காக இருந்து, இன்று வழக்கருகிப் போன தரவு கொச்சகக் கலிப்பா போன்ற வகைகளையும், இடைக்காலத்தில் பெரும் வழக்குப் பெற்ற விருத்த வகைகளையும், பிற்காலத்தில் உருவான சிந்து, கீர்த்தனை வகைகளையும் வள்ளலார் பாடித் தமிழின் தொன்மையையும் புதுமையையும் காத்தார்.

   பரிபாடல், தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல், திருப்புகழ் முதலிய இசைத்தமிழ்ப் பாடல்களும், முத்துத்தாண்டவர், திரிகூடராசப்பக் கவிராயர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை முதலியோர் பாடிய கீர்த்தனைகள் இருந்தும் 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே இசையரங்குகளில் தமிழர்களே பாடும் இழிநிலை தமிழ் நாட்டில் இருந்தது. இந்நிலையை உணர்ந்த வள்ளல் பெருமான் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாடி இசைத்தமிழை வளர்த்தார்.

   உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், சித்த மருத்துவராகவும், சீர்திருத்தச் செம்மலாகவும், அருட்கவியாகவும், அருள் ஞானியாகவும் வாழ்ந்த வள்ளலாரின் வழியை ஏற்போம், அவரின் நெறியைப் பரப்புவோம்.

4 commentaires:

  1. ஐயா...
    வள்ளலாரைப்பற்றி நிறைய விடயங்களை எடுத்துக்கூறியுள்ளீர்கள். நான் இதுவரை அவரைப்பற்றி அதிகமாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
    உங்களின் இப்பதிவு அவரைப்பற்றி மேலும் அறியும் ஆவலைத்தந்துள்ளது.
    தமிழ்மொழிபற்றி அவர் கூறியவை மிகவும் அருமையாக உள்ளதே... மகிழ்ச்சி.

    காலத்திற்கு உகந்த பதிவினை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வள்ளல் வகுத்த வழியில் நடைபோட்டால்
      உள்ளம் ஒளிரும் உயா்ந்து!

      Supprimer
  2. எங்கள் பகுதியில் சிறப்பான விழா நடந்தன...

    சிறப்பு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
      பாடும் நெறிகளைப் பற்று!

      Supprimer