samedi 27 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 81]




காதல் ஆயிரம் [பகுதி - 81]


776.
உன்னை நினைத்தே உருகிவரும் கற்பனைகள்
என்னை எழுச்சியுறச் செய்யுமடி! - பொன்மகள்..நீ!
பண்ணைப் பசுமையெனப் பார்க்கும் திசையெல்லாம்
கண்ணைப் பறிக்கும் கலை!

777.
செல்லப் பெயர்இட்டுச் சொல்லும் பொழுதெல்லாம்
மெல்லத் துடிக்குதடி என்மேனி! - முல்லையே!
அள்ளி அணைக்க அலைபாயும் நெஞ்சத்தைத்
துள்ளி அணைப்பாய் துணிந்து!

778.
உன்னோடு பேசுதல் இன்பம்! உழுகின்ற
பின்னேரு போல்வருதல் பேருவகை! - பொன்னோடு
உறவான ஊர்வசியே! ஒண்டமிழே! வாழ்வின்
நிறைவான செல்வமே நீ!

779.
உறங்கும்முன் உன்றன் ஒளியிதழ் தந்தால்
இறங்கும்என் ஏக்க உணர்வு! - பிறங்கும்பொன்
மேனியளே இன்பயணத் தேணியளே! உச்சிமுதல்
தேனியலே! கற்போம் திறந்து!

780.
கையுடைந்து! என்றன் கருத்துடைந்து! உள்ளமெனும்
பையுடைந்து பொல்லாப் பழியுரைத்து! - மைவிழியே
பொய்யுரைத்து என்னைப் பொடிப்பொடியாய் ஆக்காதே!
மெய்யுரைத்துக் காதலை மீட்டு!

(தொடரும்)

13 commentaires:

  1. 776. செய்யுமடி - எனத் திருத்துக! 777. நெஞ்சத்தைத் துள்ளி - மிகும். 778. உழுகின்ற பின்னேரு போல்வருதல் பேருவகை!- நன்று. ஊர்வசி - கற்பனை - தவிர்த்திருக்கலாம்! 779. இறங்கும்என் அல்லது இறங்குமென் - என்றமைக்க! 780. உள்ளமெனும் பையுடைந்து - பொருத்தக் குறைவாக உள்ளது. பொடிப்பொடியா யாக்காதே - இதையில் 'ய்' தேவையில்லை!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      சவுக்கடி என்ன? சரவெடி என்ன?
      சிவப்படி என்ன சிதையேன்? - தவஞ்சோ்
      தமிழ்அடி சூடித் தனிப்புகழ் கொண்டீா்!
      உமதடி தாழ்ந்தேன் உவந்து!

      தமிழ்மொழி, தமிழினப் பற்றாளா்களை ஒன்றிணைப்பதும், மரபு இலக்கணத்தை உரைப்பதும் பரப்புவதும் என் வலையின் நோக்கம்! தங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கின்றேன்!

      அனைத்துப் பாவகைகளையும் உரைநடைபோல் விரைவாக எழுதும் ஆற்றலாலும், எழுதியபின் ஒப்புநோக்கிப் பார்க்கக் காலம் இன்மையாலும் எழுத்துப்பிழைகள் மலிந்துவிடுகின்றன. பொறுத்தாற்றுக! சுட்டியமைக்கு மிக்க நன்றி!

      பதிவைத் திருத்தப் புகுந்த நான் உங்களின் கண்களுக்குப் படாமல் போன மேலும் இரண்டு சொற்களைத் திருத்தம் செய்தேன்!

      மெல்ல துடிக்குதடி - மெல்லத் துடிக்குதடி
      அகரவீற்றுக் குறிப்பு வினையெச்சத்தில் வல்லினம் மிகும்!

      மீட்டும் - மீட்டு
      வெண்பாவின் ஈற்றுச்சீா் காசு, நாள், மலா், பிறப்பு என வாய்ப்பாட்டுச் சீா்களில் வர வேண்டும்!

      --------------------------------------------------------------------

      நெஞ்சத்தைத் துள்ளி [இரண்டாம் வேற்றுமை விரி]

      இரண்டாம் வேற்றுமை விரியிலும்
      நான்காம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகும்!
      தமிழைப் படித்தான்! - இ.வே.வி
      அவனுக்குக் கொடு - நா,வே,வி

      இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும்
      நான்காம் வேற்றுமைத் தொகையிலும் வல்லினம் மிகா!
      தமிழ் படித்தான்! - இ.வே.தொகை
      பொன்னி கணவன் - நா.வே,தொகை

      இரண்டாம் வேற்றுமைத் தொகையில் உயா்திணை முன் வலி மிகும்
      தாய்க்கொலை
      நான்காம் வேற்றுமைத் தொகையில் அ/றிணை முன் வலி மிகும்
      வண்டிச் சக்கரம்

      இரண்டிலும் நான்கிலும் உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலி மிகும்

      இவை சிறந்த கவிஞா்கள் அறிந்த இலக்கணமே

      -------------------------------------------------------------------

      ஊா்வசி
      பெண்ணின் பெயரெனக் கொள்க

      -------------------------------------------------------------------

      உள்ளமெனும் பையுடைத்து

      பொருத்தம் நிறைவாக உள்ள தொடா் ஆகும்!

      காயமே இது பொய்யடா
      காற்று அடைத்த பையடா!

      துணியால் செய்த பை கிழியும்!
      தசையால் எலும்பால் குருதியால் செய்த பை கிழியும்! உடையும்!

      கவிஞன் கற்பனையில் செய்த பையும் உடையும், கிழியும், துாள்துாளாகும், வெடிக்கும்.........
      இதயத்தைக் கிழித்தாள்
      நெஞ்சத்தை உடைத்தாள்

      மரபு இலக்கணத்தைக் கற்போர்க்குப் பயனுறும் என்றே விரிவான விளக்கத்தை எழுதினேன்!

      நட்புடன்
      கவிஞா் கி. பாரதிதாசன்

      Supprimer

    2. வணக்கம்!

      சவுக்கடி என்ற வலையைப் பார்க்க
      அதன் முகவரியை அறியத் தரவும்

      Supprimer
  2. அத்தனையும் அருமை அய்யா...

    காதல் ஆயிரம் ௧௦௦௦ பகுதிகளை நிரப்பட்டும்...

    வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருங்காதல் ஆயிரத்தை நன்றே வடிக்கப்
      பெருங்காதல் பித்துப் பெருகும்! - வருங்காதல்
      இன்னுலகம் ஏத்தி இறைஞ்சிடுமே இந்நுாலை!
      பொன்னுலகம் மின்னும் பொலிந்து!

      Supprimer
  3. தணிந்திடாத தாகமென தமிழில் காதல்
    கனியிலும் காணாத கன்னல்கவி பாக்கள்
    இனிப்பிலும் உண்டோ ஈடு இதற்குஎன்று
    கணிகமாய் காதல் காப்பியம் காட்டுகிறீர்!

    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    த.ம.2

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாகம் தணிந்திடா! தங்கத் மலா்தந்த
      மோகம் தணிந்திடா! மோதுகிறேன்! - வேகம்
      எடுத்த விசையாக என்னை இயக்கும்!
      கொடுத்த கவிகள் குவிந்து!

      Supprimer
  4. Réponses

    1. வணக்கம்

      நல்ல தமிழ்மணத்தை நாடிக் கொடுத்திட்ட
      செல்வமே வாழ்க செழித்து!

      Supprimer

  5. வணக்கம்!

    எண்ணம் மணக்க இனிதே கருத்திட்ட
    வண்ணக் கவிஞரை வாழ்த்துகிறேன்! - கண்ணன்
    களித்திட்ட காதல் களமாக, என்பா
    அளித்திட்ட காதல் அழகு!

    RépondreSupprimer


  6. // பொய்யுரைத்து என்னைப் பொடிப்பொடியாய் ஆக்காதே!
    மெய்யுரைத்துக் காதலை மீட்டு!//

    இந்தப் பொய்யிலே மெய்யும் தடுமாறுகிறதே !!

    காதலி பொய் உரைக்கையிலே பொடிப்பொடி ஆகிறானா?
    அட...ஆமாம். அவள் அடிப்பொடி ஆகிறான். அடிமை ஆகிறான்.

    அவள் மெய் உரைக்கும்போதோ ??

    காதல் ஒரு சந்தன மரம்.? அதன் கிளையோ ?
    உறைக்க உறைக்க வாசம் கூடுகிறது.

    காதல் ஒரு சங்கும் கூட.
    சுடுங்கள். ஒளிர்கிறது.


    இக்கவிதையில் எனக்கு புதுப்புது பொருள் விரவி இருப்பதாகத் தோன்றுகிறது.

    இவ்வுலகத்தே காணும் யாவும் புறத்தோற்றத்தில் இன்பம் பயப்பினும்
    அவை யாவுமே பொய்யே. நிலைத்து நிற்பன அல்ல.

    அவ்வின்பங்களிலே மூழ்கி இருக்கும் வரை நான் பொடி ஆகித்தான் இருக்கமுடியும்.
    முடி ஆகிடுதல் முடியாது.

    நான் மெய் என்ன என உணரும்பொழுதோ
    நான் மெய்யென நினைத்த என் உடலும் உயிரும் பொய் என உணரும்பொழுதோ
    மெய்ப்பொருள் முன்னே மலர்கையிலே
    பொய்க்கு இதுவரை அடிபணிந்ததும்
    மெய் எனத் தெரிகிறது.

    பாரதிதாசன் அவர்களே !!
    பாரில் உள்ளோர் அனைவரும் போற்றிடவே
    பாங்காய் ஒரு மெய் பகர்ட்ந்துள்ளீர்கள்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha.blogspot.in

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பொடிப்பொடி ஆகிப் புலவன்நான் அன்னாள்
      அடிப்பொடி ஆகினேன்! அப்பா! - கொடியிடைக்
      காரி கொடுத்த கவிதைகள்! செந்தமிழாம்
      மாரி கொடுத்த வளம்

      Supprimer

    2. வணக்கம்

      புத்துரை கண்டு புலவன் மகிழ்வுற்றேன்!
      முத்துறை பேழை மொழியாவும்! - முத்திரை
      இட்டுப் புகழ்தந்த நற்சுப்புத் தாத்தாவைத்
      தொட்டுத் தொழுவேன் தொடா்ந்து!

      Supprimer