mardi 2 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 69]




காதல் ஆயிரம் [பகுதி - 69]


681.
செந்தேனில் ஊறிய தீந்தமிழை நன்கேந்தி  
வந்தேன் வடிவாய் உனைப்பாட! - விந்தையடி
சிந்தை நெகிழ்ந்து சிலிர்ப்புற்றேன்! கற்பனைச்
சந்தை அழகில் தவழ்ந்து!

682.
இச்சென்று நீ..இட்ட இன்முத்தம் என்னுள்ளே
நச்சென்று காமத்தை நன்கேற்றும்! - கச்சவிர்ந்து
உச்சத்தை எட்டுகிறேன்! உன்னுதட்டு எச்சத்தின்
மிச்சத்தைக் கேட்பேன் மிதந்து!

683.
கருவெடுத்துக் கட்டிடும் காவியம்! காட்சி
உருவெடுத்து என்னுள் ஒளிரும்! - அருமை!
திருவென்று போற்றித் திளைக்கின்றேன்! இன்பப்
பெருக்கென்று வந்தவளே! பேசு!

684.
பாட்டொன்று கேட்டுப் படரும் சுகபெருக்கைக்
கூட்டென்று தேவனைக் கும்மிடுவாள்! - சீட்டொன்று
தீட்டென்று நெஞ்சம் திகைத்தாலும் நாணத்தால்
பூட்டொன்று போடுவாள் பொய்த்து!

685.
வாவென்று கூப்பிட்டேன்! வந்து..நீ மொத்தமும்
தாவென்று கேட்டதேன்? தள்ளியுனைப் - போவென்றேன்!
காவென்று சொன்னாலும் கன்னிமனம் எண்ணியுனைச்
சோவென்(று) அழுவும் சுருண்டு!

686.
ஆசையுடன் தந்த அமுதூறும் முத்தங்கள்!
மீசைமுடி குத்துவதும் மென்சுகமே! – ஓசையின்றி
உள்ளூறும் காதல் உணர்வுகளால் பொன்னிதழில்
கள்ளூறும் இன்பம் கனிந்து!

687.
பஞ்சுமெத்தை பாவையெனைப் பாடாய்ப் படுத்தியது!
கொஞ்சுமொழி கேட்டிடக் கெஞ்சியது! - வஞ்சியின்
பிஞ்சுமனம் வாடியது! பஞ்சமின்றி மிஞ்சிடவே
நெஞ்சத்தை மஞ்சத்தில் நீவு!

688.
பெண்ணென்றாய்! பேரின்பப் பண்ணென்றாய்! பாகென்றாய்!
பொன்னென்றாய்! பூவென்றாய்! இன்னமுத - விண்ணென்றாய்!
கண்ணென்றாய்! காதல் கனியென்றாய்! சொக்குகிறேன்
என்னென்று சொல்வேன் இதை!

689.
சுவைதமிழ்ப் பாட்டெழுதும் சுந்தர!உன் பாக்கள்
இவைதமிழ் என்றே இயம்பும்! - அவையமுதில்
ஆர்த்தெடுத்தாய்! வண்ண அலைமகனாய் என்னுயிரை
ஈர்த்தெடுத்தாய் இன்பம் இழைத்து!

690.
அஞ்சியங்சிப் போவதுமேன் ஆரணங்கே! கெஞ்சிவர
மிஞ்சிமிஞ்சிப் போவதுமேன் வெண்ணிலவே! - நெஞ்சமோ
வஞ்சிவஞ்சி என்றடிக்கும்! வண்ணமுகம் பார்த்தவுடன்
பஞ்சுபஞ்சாய் மேல்பறக்கும் பாட்டு!

(தொடரும்)

6 commentaires:

  1. “மீசைமுடி குத்துவதும் மென்சுகமே” – சரியான குறும்புக்காரரய்யா நீர்! – கவிஞர் இராய.செல்லப்பா.

    RépondreSupprimer
  2. வரிகளில் சொக்கித்தான் போகிறது மனம்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. தங்கள் கவிதைளைத் தொடர்கிற எவரும்
    நிச்சயம் கவிஞனாகி விடமுடியும்
    நான் கவிஞனாக முயன்று கொண்டிருக்கிறேன்
    மனம் கவர்ந்த அருமையான கவிதைகளுக்கு
    மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  4. கவிதை மிக அருமை..நான் பார்த்த வலைத்தளத்திலே தமிழை கொலைச் செய்யாமல் மிக அழகுற வருவது உங்கள் தளமே. உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வந்தாலே தமிழை தவறு இல்லாமல் எழுதவும் படிக்கவும் முடியும்.

    உங்களைப் போன்றவர்களால்தான் தமிழ் இன்னும் வாழ்ந்து வருகிறது. உங்கள் தமிழ் தொண்டிற்கு எனது வாழ்த்துக்களும் மனம் திறந்த பாராட்டுக்களும்

    RépondreSupprimer
  5. ஐயா...மேலும் மேலும் மிளிர்கிறது பாக்கள். கற்கின்றோம் நாங்கள்.
    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ஆசையுடன் தமிழ்படிக்க ஆயிரம் பாக்களை
    ஓசைநயமும் உள்ளுணர்வும் ஓங்கிட நீர்தர
    மீசைக்கார பாரதிதான் மீள இங்குற்ராரோவென
    பூசைசெய்து உம்மை போற்ற மனமேகுதையா!...

    RépondreSupprimer