vendredi 11 janvier 2013

நாட்டுப் பற்று




நாட்டுப் பற்று

நாட்டின் உரிமைப் போரினிலே
     நன்றே தலைமை கொண்டதனால்
வாட்டும் சிறையில் பலஆண்டு
     வதங்கிக் கிடந்தார் என்தாத்தா!
கூட்டம் கூட்டி மாணவர்பால்
     கொள்கை விளைத்தார் என்தந்தை!
பாட்டில் இவைதாம் எழுதுகிறேன்
     பாரீச் நகரில் நானிருந்தே!

முன்னே வாழ்ந்த என்னவர்கள்
     மூச்சாய் நாட்டை எண்ணினரே!
பின்னே வந்த நாங்களெலாம்
     பிழைப்பைத் தேடிப், பெற்றதிரு
அன்னை மண்ணை எண்ணாமல்
     அயலார் அடியில் கிடக்கின்றோம்!
என்னே கொடுமை படைத்தவனே
     எங்கள் வாழ்வின் அவலநிலை?

29-11-2002

13 commentaires:

  1. எனக்குத் தெரிந்து அயல் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தாய் நாட்டை அதிக மாக நேசிக்கிறார்கள்.தமிழைப் போற்றுகிறார்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அயல்நாட்டில் வாழ்ந்தாலும் அந்தமிழ் பூக்கும்
      வயல்காட்டில் வாழும் மனம்!

      Supprimer
  2. பிறந்த பொன்னாட்டில் வாழ்பவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று பகட்டாய் வாழ ஆசை. வெளிநாட்டில் வாழபவர்களுக்கோ தான் பிறந்த பொன்னாட்டில வாழ ஆசை. என்னே விசித்திரம் ஐயா. நாட்டுப்பற்றில் தோய்ந்து வந்த உங்கள் கவிதை மனதை அசைத்தது.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      பிறந்த இடத்தைப் பெரிதுவக்கா மாந்தன்
      இறந்த பிணமென எண்ணு!

      Supprimer
  3. முன்னே வாழ்ந்த என்னவர்கள்
    மூச்சாய் நாட்டை எண்ணினரே!

    நாட்டுப்பற்றை விதைக்கும் உன்னத கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாட்டின் உணா்வும் நறுந்தமிழ்ப் பற்றும்!என்
      கூட்டின் இயக்கமெனக் கூறு!

      Supprimer

  4. நாட்டுணா்வை அளிக்கும் கவிதை
    படித்தேன் சுவைத்தேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படித்துச் சுவைத்துப் படைத்த கருத்தைக்
      குடித்துச் சுவைத்தேன் குளிர்ந்து!

      Supprimer

  5. வணக்கம்!

    தண்டமிழ்த் தேன்பருகத் தாகமுடன் வந்தமா்ந்த
    நண்பரெலாம் காண்க நலம்!

    RépondreSupprimer
  6. தன் தாய் நாட்டை நேசிக்கும் ஒருவர் பிறருக்கும் அதே உணர்வை ஏற்படுத்துகிற ஆக்கம் !

    தொடர வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாய்மொழி! தாய்நாடு! கண்களென இன்புற்று
      வாய்மொழிந் தாடுதலே வாழ்வு!

      Supprimer
  7. பிழைப்பைத் தேடிப், பெற்றதிரு
    அன்னை மண்ணை எண்ணாமல்
    அயலார் அடியில் கிடக்கின்றோம்!
    என்னே கொடுமை படைத்தவனே
    எங்கள் வாழ்வின் அவலநிலை?

    நாலு துளி மைச்சொட்டு பேனவினால்
    உன் நாவில் வார்த்தைகள்
    அனல்ப்பறக்க
    நாட்டுப்பற்றினை,நச்சென்று
    கவி வடித்த
    எங்கள் கவிஞனே
    உன் கவியை இருகரம் கூப்பி
    வணங்குகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெருப்புக் கவிதைகளை நெஞ்சம் சமைக்கும்!
      இரும்புப் பகையை எரித்து!

      Supprimer