காதல் ஆயிரம் [பகுதி - 15]
141.
பார்க்கும் திசையில் பறந்து வருபவளே!
கோர்த்த மணியழகு கொண்டவளே! - கூர்விழியே!
வார்த்தெடுத்த பொற்சிலையே வந்துவிடு என்னருகில்!
மார்பணைத்து நிற்பேன் மகிழ்ந்து!
142.
கன்னல் கனிச்சாறே! கம்பன் கவியமுதே!
பின்னல் மலர்க்குழலே! பேரழகே! - என்னுயிரே!
சன்னல் வழியாகச் சாடை புரிந்திட்டால்
இன்னல் வருமோ எனக்கு!
143.
தோளுறுதி! நெஞ்சத் துணிவுறுதி! வன்மைமிகு
ஆலுறுதி போன்றே அகமுறுதி! – காலுறுதி
கையுறுதி எல்லாம் கரைந்ததே, என்னிதயப்
பையுறுதி குன்றுதே பார்த்து!
144.
பாத்திறம் ஊட்டிடும் பாவையே! உன்பார்வை
சூத்திரம் ஊட்டிடும் சூதறியேன்! – கோத்திரம்
சாத்திரம் நான்வெறுத்தேன்! உன்மடி சாய்ந்திடவே
கூத்திடும் நெஞ்சம் குளிர்ந்து!
145.
நடையளந்து செல்லும் நறுந்தமிழ் நங்கை
உடையளந்து வாடுதே என்னுள்ளம்! – கடைக்கண்
படைநடந்து பாய்ச்சுதே அம்புகளை! மார்பு
தடையுடைந்து போனதே தாழ்ந்து!
146.
வண்ணக் கிளியின் இனிய மொழியினிலே
எண்ணம் பதிக்க, எனதுடலில் - சின்ன
இறகுகள் வந்து முளைத்தனவே! சிட்டின்
உறவுகள் மின்னுதே ஊர்ந்து!
147.
பொய்யுருகும் பாடல் புலவர்தம் போக்கென்று
நொய்யுருகிப் பொங்குதல்போல் நோக்காதே?
– செய்யவளே!
நெய்யுருகும் தீயினிலே! நின்குளிர் பார்வையில்என்
மெய்யுருகி நிற்கும் மெலிந்து!
148.
பார்க்கும் பொழுதெலாம் பற்றி இழுக்கின்றாய்
யார்க்கும் தெரியாமல் என்னுயிரை! – சேர்த்துனைக்
கோர்க்கும் இளமை கொடுக்கும் நினைவெல்லாம்
வார்க்கும் இனிமை வளர்ந்து!
149.
பா..தரும் பெண்ணே! பனிதரும் மார்கழியே!
பூ..தரும் தேனே! புகழ்நிலவே – மாதவத்
தேவரும் தேவியும் சேரின்பம்! எண்ணுமடி
நீ..வரும் நாளை நினைத்து!
150.
கலையே! கவியே! கமழும் கடலே!
அலையே! அமுதே! அழகே! – சிலையே!
மலையே உடைக்கும் மறவன் எனக்கு
வலையே விரிக்கும் வரிந்து!
(தொடரும்)
arumai!
RépondreSupprimerஐயா! நீங்கள் இன்னொரு புகழேந்திதான்.அற்புதமான கற்பனை வளம்.காதல் ரசம் சொட்டும் பாக்கள்.
RépondreSupprimerபா ஆயிரம் படிக்க முடியாமல்
RépondreSupprimerபரிதவித்தேனே..
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படித்து ரசிக்க வேண்டும்.
கண்ணிமைக்கும் கணநேரத்தில்
RépondreSupprimerபண்ணிசைக்கும் பாவலா உம்கவி
எண்டிசைக்கும் பரவி இன்னும்மேலேறி
விண்னிருக்கும் வெண்நிலவையும் தொட்டு...
பா..தரும் பெண்ணே! பனிதரும் மார்கழியே!
RépondreSupprimerபூ..தரும் தேனே! புகழ்நிலவே – மாதவத்
தேவரும் தேவியும் சேரின்பம்! எண்ணுமடி
நீ..வரும் நாளை நினைத்து!
.........................................
காதல் ஆயிரம் கண்டேன் !என்னுள்
சாதல் நினைவெலாம் போக்க மோதல்
மேய்ந்த உள்ளம் மகிழ்ந்தே மண்ணில்
சாய்ந்திடும் நினைவே அற்று.
அழகிய வெண்பாவில் ஆயிரமென்ன பல லட்சம் காதல் பா பாடும் திறம் கொண்டீர் வாழ்த்த வயதில்லை இருந்தும் வணங்குகிறேன் தங்கள் கவிக்கு
வணக்கம்
RépondreSupprimerகவிஞர்(ஐயா)
ஒவ்வொரு வரியிலும் காதலின் அர்தம் நன்கு புரிகிறது சங்ககாலத்தில் இருந்த கவிஞர்களைப் போல 21ம் நூற்றாண்டில் தமிழ் உலகுக்கு இறைவன் தந்த கவிஞன் நீங்கள்தான் கவிஞரே அருமையான படைப்பு வாழ்க உங்கள் கவித்துவம் தொடர்க உங்கள் பணி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-