dimanche 13 janvier 2013

தமிழா் புத்தாண்டு




தமிழர் புத்தாண்டு

தமிழரின் புத்தாண்டுச் சித்திரைத் திங்களா? தைத் திங்களா? சித்திரையே தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ் அறிஞர்கள் தை மாதத்தைப் புத்தாண்டாகப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். தமிழ் அறிஞர்தம் சொற்கேட்டு வளரும் சமுதாயமும் தைத்திங்களைப் புத்தாண்டாகப் பாடிப் பரவுகின்றனர். ஒன்றும் அறியா எளியோர் குழம்பிய நிலையில் உள்ளனர். தமிழ்ச் சான்றோர் சித்திரையை நீக்கி, தை மாதத்தைப் புத்தாண்டாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? எப்பொழுது தேர்ந்தெடுத்தார்கள்? யார் யார் இதை தேர்ந்தெடுத்தார்கள்? இவைகளுக்கு விடை தெரிந்து கொண்டால் குழப்பம் நீங்கும்? தெளிவு பிறக்கும்.

      சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி நடைமுறையில் உள்ள இந்த மாதப் பெயர்கள் தமிழ் அல்ல. தமிழ் மாதங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமெனத் தமிழ் அறிஞர்கள் விரும்பினர். பிரபா முதல் அட்சய வரை உள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. நடைமுறையில் உள்ள இவ்வறுபது ஆண்டுகள் பல்லுருளை முறையில் இருப்பதால், அவை அறுபது ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.

      இந்தக் குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளைச் செய்தார்கள்; 1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, 2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது. 3. திருவள்ளுவர் காலம் கி. மு. 31. (20081031ஸ்ரீ2039) திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழர் புத்தாண்டின் தொடக்கம் தை முதல் நாளே. இவ்விதம் முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க, தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியனார், சைவப் பாதிரியார் சச்சிதானந்தம், நாவலர் ந.மு. வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார். இந்த முடிவை மக்களும் அரசும் ஏற்றுக் கொண்டு வாழ்வில் வழக்கில் பின்பற்றல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

      தமிழ் நாட்டு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. 1970 ஆம் ஆண்டு முதல் தை 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் திருநாள் என்று கொண்டாடி வருகிறது. அந்நாளில் தமிழ் மொழிக்கும் திருக்குறளுக்கும் தொண்டு செய்தவர்களுக்குத் திருவள்ளுவர் விருது வழங்கியும், நலிந்த தமிழ் அறிஞர்களுக்கும் புலவர் பெருமக்களுக்கும் நிதி உதவி அளித்து வருகிறது.

      தமிழ் மாதங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என நினைத்த தேவநேயப் பாவாணர் பின்வருமாறு அவற்றை மாற்றினார். அவை மேழம் (சித்திரை), விடை (வைகாசி), ஆடவை (ஆனி), கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி), துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை), சிலை (மார்கழி), சுறவம் (தை), கும்பம் (மாசி), மீனம் (பங்குனி) என்பனவாகும்;. பாவாணர் சூட்டிய மாதப் பெயர்களைப் பின்பற்றிவரும் தனித்தமிழ்ப் பற்றாளர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகின்றனர்.

6 commentaires:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!
    தமிழ் மாதங்களின் தமிழ் பெயர்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் இந்தப் பதிவின் மூலம்.

    எனது வலைபூவிற்கு வந்து வாழ்த்து சொன்னது நெகிழ வைத்தது.

    நன்றி ஐயா!

    RépondreSupprimer
  3. தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

    பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!
    பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!
    பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!
    பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!
    தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்
    கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!
    வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!

    பச்சரிசி, சர்க்கரை, பால், பயறு
    உச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்
    அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்
    இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்!
    பச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்!
    உச்சமான உன்னதக் காலநிலை நாடு
    இச்சகத்தில் இலங்கை யென உலகம்
    மெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்!

    பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
    ஓகுஸ், டென்மார்க்.
    13-1-2013

    RépondreSupprimer
  4. புத்தாண்டு பிறந்த சம்பவத்தை அழகாக இயம்பியதற்கு பாராட்டுக்கள்...

    அருமையான க்விதையால் எமது பதிவை
    அலங்கரித்தமைக்கு நிறைவான நன்றிகள் ஐயா..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    RépondreSupprimer

  5. பலரும் அறிய உரைத்தீர்! நன்று! இதிலும் இங்கு அரசில் விளையாடுகிறதே!

    RépondreSupprimer
  6. அருமையான விளக்கம்.எங்களைப்போன்றவர்களுக்கு நிச்சயம் தேவை.நன்றியும்கூட !

    RépondreSupprimer