காதல் ஆயிரம் [பகுதி - 10]
91.
கண்ணினைக் கவ்விக் கருத்தினை நெய்யுதடி!
பண்ணினைப் பாடிப் பறக்குதடி! - பெண்ணழகே
இன்னிலைக் காவியமே! என்னுயிர் ஓவியமே!
துன்னிலை தீா்க்கத் தொடு!
92.
ஆக்கத்தைத் தந்தாய்! அருங்கவிகள் நான்பாட
ஊக்கத்தைத் தந்தாய்! ஒளிர்கின்றாய்! –
நோக்கியெனை
ஏக்கத்தைத் தந்தாய்! இரவெல்லாம் வந்தாடி
தூக்கத்தை கொன்றாய் தொடர்ந்து!
93.
கண்ணில் கமழக் கனவுகள் பொங்கிவரப்
பொன்னில் பொலியும் பொழுதுகளே! – அன்பில்நாம்
பின்னிக் கிடக்கும் பிறப்பின்பக் காட்சிகள்!
மன்னிப் புடைக்கும் மார்பு!
94
தனியிடத்தைத் தேடித் தலைகோதி உன்றன்
கனியுதட்டின் தேன்பருகக் காட்டு! - பனிப்பொழிவாய்
எச்சில் வழிந்தோட ஈருயிர் ஒன்றாகி
உச்சம் தலைக்பேறும் ஊர்ந்து!
95.
பருவம் பதினாறாம்! பார்வைத்தேன் ஆறாம்!
உருவம் மலர்காடாம்! உள்ளம் - உருகப்
புருவம் படைக்கும் பொலிவுக்கே(து) ஈடாம்!
பருக வருவேன் பறந்து!
96.
இறகெடுத்துத் தீட்டும் எழுத்தெல்லாம் இன்ப
உறவெடுத்து ஊட்டும் உளத்தே! – மறஞ்சேர்
திறமெடுத்த மார்பு திணவெடுத் தேங்கச்
சிறகடித்துக் கொஞ்சும்இன் சிட்டு!
97.
முன்னே நடைபயிலும் முல்லை மலர்க்காடே!
என்னே அழகடி? இன்பெருக்கே! – என்னுயிர்ப்
பெண்ணே வெறுக்காதே! பேரின்பப் பாட்டெழுதக்
கண்ணே கதவைத் திற!
98
திரும்பும் திசையெல்லாம் தேவியின் பார்வை!
அரும்பும் நினைவோ அமிழ்தம் - பருவம்
கரும்பின் நறுஞ்சாறு! கண்ணே! கவிதை
விருந்துண்ண வா..வா.. விரைந்து!
99.
பொற்கவிதை! பூங்கவிதை! போற்றும் புகழ்க்கவிதை!
நற்கவிதை! நற்றேன் நறுங்கவிதை! - நற்றோழி!
இன்கவிதை! ஈடில் எழில்கவிதை! நான்சுவைக்கும்
உன்கவிதை என்றன் உயிர்!
100.
கண்கள் கவிபாடும்! கன்னல் உதடிரண்டும்
இன்..கள் சுரந்தூறும்! என்னவளே! – கன்னத்தில்
பண்கள் பிறந்தாடும்! பாவையுன் பண்பெல்லாம்
பெண்கள் சிறந்தோதும் பேறு!
(தொடரும்)
கவிநடை சிந்தக்கண்டு கருத்தது மௌனங் கொண்டு
RépondreSupprimerகுவிந்தது மனத்துள் மறைந்தே.....
-
RépondreSupprimerஎதுகையும் மோனையையும் எங்கே பிடித்தீர்?
மதுவைக் குடித்த மனம்போல் – அதுவாய்
நிதானமின்றி ஆடுகிறது! நின்காதல் நூறும்
உதாரணங்கள் ஊறும் உயர்ந்து!
-