dimanche 20 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 5]



காதல் ஆயிரம் [பகுதி - 5]

41.
நல்லின்பச் செந்தேனை நல்கியவள்! பூங்கொடியாய்
மெல்லிடை கொண்டுள்ள மேகலையாள்! - கள்ளமிலாக்
கொஞ்சும் மொழியழகும் கொவ்வை இதழழகும்
நெஞ்சை மயக்கும் நினைவு!

42.
மல்லிகை பூத்து மணக்கின்ற சோலையிலும்
முல்லைமலர்க் காட்டிலும் முப்பொழுதும் - எல்லையின்றிக்
கொஞ்சிக் களித்ததுவும் கூடித் திளைத்ததுவும்
நெஞ்சுள் மணக்கும் நினைவு!

43.
புதுமை புனைந்து பொலிந்தோம்! இளமை 
மதுவைக் குடித்து மகிழ்ந்தோம்! - முதுகதையை    
வஞ்சிக் கொடியே மறந்தனையோ? கொஞ்சமும்
நெஞ்சுள் இலையோ நினைவு?

44.
ஈருடல் ஓருயிராய் எண்ணி இணைந்திங்குப்
பேரின்ப நல்லமுதைப்  பெற்றோமே! - காரிகையே!
கொஞ்சித் தழுவிக் குளிர்ந்த இரவுகளோ
நெஞ்சுள் அழியா நினைவு!

45.
கல்லூரி நாள்களில் கண்மணியே! நாம்கலந்த
நல்லின்பக் காட்சிகளை நான்மறவேன்! - அல்லல்கள்
பஞ்சாய்ப் பறந்ததுவும் பாரை மறந்ததுவும்
நெஞ்சுள் மிளிரும் நினைவு!

46.
வயல்வெளிக் காற்றே! வளர்தமிழ் ஊற்றே!
கயல்விழிக் காரிகையே! காதல் - அயல்மொழி
அன்றே! அடியேன் அழைப்பை மறுக்காமல்
இன்றே வருக இனித்து!

47.
சிந்தை மயங்கிட விந்தை புரிந்திடும்
கந்தம் கமழும் கருங்குழலாய்! - சந்தம்
ஒளிரும் கவியாக உன்றன் பருவம்
ஒளிரும் சுடராய் உயர்ந்து!

48.
ஆற்றங் கரைதனில் அன்றளித்த வாக்கிற்கு
மாற்றந் தருவதேன் மான்விழியே! - போற்றிப்
புகழ்ந்து புனைந்த புலவனை உன்..நா 
இகழ்ந்து மொழிவதும் ஏன்?

49.
உன்றன் அருளின்றி உள்ளம் உவந்திடுமோ?
என்றன் நினைவும் இனித்திடுமோ? - அன்போடு
தஞ்சம் புகுந்திட நெஞ்சம் குளிர்ந்திட
மஞ்சம் கொடுத்திட வா!

50.
மாங்குயில் கூவ மறந்திடுமோ? மொட்டுள
பூங்கொடி பூக்காமற் போயிடுமோ? - தீங்கனியே!
கொஞ்சிக் களித்திடவும் கூடி மகிழ்ந்திடவும்
அஞ்சி இருப்பதேன் ஆழ்ந்து?

(தொடரும்)

12 commentaires:

  1. மணக்கும் வரிகள் மனம் கமழ அருமையான வரிகள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணக்கும் மலரவள்! மனத்தை மயக்கி
      அணைக்கும் அழகவள்!அன்பால் - நனைக்கின்ற
      இன்ப மழையவள்! என்னுள் இணைந்தவள்!
      என்றும் இனிப்பவள் ஈந்து!


      Supprimer
  2. வயல்வெளிக் காற்றே! வளர்தமிழ் ஊற்றே!
    கயல்விழிக் காரிகையே! காதல் - அயல்மொழி
    அன்றே! அடியேன் அழைப்பை மறுக்காமல்
    இன்றே வருக இனித்து!

    ஆஹா வயல்வெளிக் காற்றை சுவாசித்த அனுபவம் வருகிறது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வீசும் வயல்வெளி காற்றையும் வென்றிடவே
      பேசும் மொழியாவும் பேரின்பம்! - ஆசுகவி
      அள்ளி அளிக்கின்ற தேன்பாக்கள்! கண்ணழகுக்
      கள்ளி அளிக்கின்ற காப்பு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்

      தமிழ்மணச் சோலையில் தங்கி மகிழ
      எமையிங் கழைத்தீா் இனித்து!

      Supprimer
  4. காதலுணர்வை அருமையாக அழகாக இப்படி நயத்தோடு சொல்லும் உங்கள் கவித்திறன் அழகேஅழகு ஐயா!

    நெஞ்சினிலே எந்தன் நினைவினிலே
    வஞ்சி உன் வடிவம்தான் நிற்குதடி
    அஞ்சி ஓடிடாதே எனைவிட்டு
    கெஞ்சுகின்றேன் தமிழணங்கே யான்...

    ஐயா..இங்கு உங்கள் கவிகளைப்பார்த்து நானும் சிறிது சொல்லிப் பார்ப்பதை எழுதுகிறேன்..இங்கு இப்படி எழுதலாகாது என்றால் நீக்கிவிடுங்கள். வருத்தமில்லை..:)

    அன்புடன் இளமதி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      யாப்பு மலா்களை என்னுள் விளைத்தவள்!
      தோப்புக் கனித்தேன் சுரப்பவள்! - காப்பாக
      நின்று களிக்கும் கலைமகள்! என்னெஞ்சை
      வென்று களிக்கும் வியப்பு!

      Supprimer
  5. கவிதையைப் படித்து ரசிக்க முடிகிற என்னால் கவிதையாய் பதில் எழுத இயலவில்லை. அதனாலென்ன... வண்ணத் தமிழ் வரிகளை ரசித்து மகிழ மனம் உண்டு. ரசித்துச் சுவைத்தேன். கவிதையுடன் நீங்கள் வெளியிட்டிருக்கும் படமும் வெகு அழகு.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் கவிதைகள் கற்கண்டு! கண்களின்
      மோதல் கவிதைகள் பூச்செண்டு! - வேதமென
      ஓதி சுவைத்தால் உயிர்உருகும்! காதலெனும்
      சோதி ஒளிரும் சுடா்ந்து!

      Supprimer

  6. தமிழ் உறவுகளே வணக்கம்!

    என்னுள் அமா்ந்தே இயக்கும் இளையவளைப்
    பொன்னுள் பதித்தே புனைகின்றேன்! - இன்னுால்
    சுவைத்தே தொடுக்கும் கருத்துக்கள் யாவும்
    சுவை..தேன் சுவைத்தேன் தொடா்ந்து

    RépondreSupprimer
  7. கவிஞருக்கு காதல் கவிதை மிகவும் நன்றூ வருகிற்து.

    RépondreSupprimer