mardi 22 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 7]




காதல் ஆயிரம் [பகுதி - 7]

61.
கண்ணைக் கவர்கின்ற வானவெளி மத்தாப்போ?
விண்ணைப் பிளக்கின்ற மின்னொளியோ? - தண்டமிழ்த்தாய்
கொண்ட அணிகளோ? மின்னும் மணிகளோ?
சின்னவளே உன்றன் சிரிப்பு!

62.
மணக்கும் மலரோ? மயக்கும் கவியோ?
கணக்காய் அசைகின்ற கண்கள் - உனக்கே
அடிமையடி என்னுயிர்! ஆரமுதே வாழ்வில்
விடிவைத் தருவாய் விரைந்து!

63.
மின்னும் சுடர்மணியே! வெண்ணிலவே! உன்னழகை
எண்ணும் பொழுதெல்லாம் இன்பமடி! - கண்ணுக்குள்
நீங்கா(து) இருப்பவளே! நெஞ்சம் இரவெல்லாம்
தூங்கா(து) இருக்கும் துவண்டு!

64.
உன்றன் மொழியும் உயர்செயலும் எப்பொழுதும்
என்றன் இதயத்தை ஈர்க்குதடி - உன்னிடமே!
அன்பே! அமிழ்தே! அருந்தமிழே! என்னாசைக்(கு)
இன்பம் படைப்பாய் இணைந்து!

65.
வட்ட நிலவென வண்ண மலரெனப்
பட்டின் பொலிவெனப் பாவையவள் - கட்டழகின்
வித்தென, இன்பத்தின் சொத்தென, மின்னிடும்
முத்தெனப் பெற்றாள் முகம்!

66.
மென்மை தழுவிட மேன்மை கமழ்ந்திட
உண்மை இனிதாய் உலவிடப் - பெண்மையின்
பண்பெலாம் ஓங்கிடப் பாங்குடன் பெற்றாள்!நல்
அன்பைப் பொழியும் அகம்!

67.
சிந்தனையைத் தூண்டிடும் செந்தேன் நிறைகுடமோ?
செந்தா மரையோ? செழுங்கனியோ? - முந்துகின்ற
சோகத்தைத் தீர்க்கும் சுடர்மணியோ? பேரின்ப
மோகத்தை மூட்டும் முகம்!

68.
மின்னும் மலர்க்கொடியே! மீட்டும் இசையமுதே!
என்னுள் படரும் இளங்கொடியே! - உன்றன்
சடையழகு என்னுயிரைத் தாக்கும்! அதற்கு
நடையழகு நன்மருந்தை நல்கு!

69.
ஓடிவரும் மேக முடன்ஒளிந்து கண்புதைக்க
ஆடிவரும் வெண்மதியின் அச்செயல்போல் - மாடியின்மேல்
மெல்லிடையாள் நின்று மறைந்துமெல்லக் காட்டுகிறாள்
முல்லையென மின்னும் முகம்!

70.
தேனருந்தும் வண்டினமே! தேடியெனை வந்திடுக!
நானறிந்த செய்திகளை நன்குரைப்பேன்! - தேன்நாடிக்
கால்வைக்க வேண்டா!என் காதலியின் பூமுகத்தில்
வேலெனத் தாக்கம் விழி!

(தொடரும்)

7 commentaires:

  1. அழகு தமிழ் சொல் எடுத்து
    காதல் ஆயிரம் வெண்பா புனைந்து
    நல்ல தமிழில் நம்மவர் உணர்ந்திட
    தூய தமிழ் வாழப் பாடுமய்யா!

    சிக்குச் சிக்குச் சொல்லடுக்கி
    சிறியர் புரியா மரபு வெண்பாவை
    சின்னஞ் சிறியர் எளிதாய் புரிந்திட
    இலகு தமிழில் பாடுவது நன்றய்யா!

    தங்கள் பா படித்து நம்மவர்
    மரபு புரிந்திட எளிய சொல்லடுக்கி
    இன்பத் தமிழ் இனிய தமிழென
    பாடும் தங்கள் பாவழகு நன்றய்யா!

    RépondreSupprimer
  2. புதுக்கவிதை என்ற வடிவத்தில் காதலை/காதலியைப் பாடுதல் எளிது. நிறையப் பேர் எழுதி வருகின்றனர். மரபுத் தமிழில் இத்துணை அழகாய்ப் பாடுதற்கு இயலும் என்பதை உங்களிடம் கண்டு பிரமிக்கிறேன். நன்று ஐயா தொடரட்டும் வரிசை.

    RépondreSupprimer
  3. அத்தனையும் அழகு
    '//தேனருந்தும் வண்டினமே! தேடியெனை வந்திடுக!
    நானறிந்த செய்திகளை நன்குரைப்பேன்! - தேன்நாடிக்
    கால்வைக்க வேண்டா!என் காதலியின் பூமுகத்தில்
    வேலெனத் தாக்கம் விழி!//
    மிக அற்புதம் ஐயா
    தொடர்க!

    RépondreSupprimer
  4. வட்ட நிலவும் வண்ண மலரும் தவம் இருந்தனவோ வெண்பாவில் இடம் பெறவே.

    RépondreSupprimer

  5. நிலவின் காட்சியையும்
    பெண்ணின் மாட்சியையும் ஒப்பிட்டது
    மிக மிக அருமை!
    சுவையோ புதுமை!

    தொடருங்கள்....

    RépondreSupprimer

  6. வேலெனத் தாக்கும் விழிகள்! வியன்வெண்பா
    பாலென இன்சுவை பாய்ச்சியது! - நுாலெனக்
    காதல் கமழ்கின்ற ஆயிரத்தைத் தந்திடுவீா்!
    பாதம் தொடுவேன் பணிந்து!

    RépondreSupprimer
  7. என்னவென சொல்லவது அருமையான உவமானங்களுடன் அழகழகாய்ச் சொற்களை அடுக்கி அற்புதமாகக் கவி படைக்கின்றீர்கள் ஐயா!
    தொடரட்டும்... தொடர்கிறோம்...

    RépondreSupprimer