காதல் ஆயிரம் [பகுதி - 1]
1.
ஆயிரம் வெண்பாவில் அன்னவளை யான்பாடத்
தாயாம் தமிழணங்கின் தாள்பணிந்தேன்! – பாயிரம்
போன்றே படைத்துளன்! பொங்கும் அழகுக்குச்
சான்றே படைத்துளன் சாற்று!
2.
கோயில் சிலையவள்! கொஞ்சும் குயிலவள்!
சேயின் சிரிப்பவள்! இன்னிசை – வேயவள்!
ஆயிரம் வெண்பா அருமையாய் பாடிடவே
தாயிடம் கேட்டேன் தமிழ்!
3.
என்னவள்! என்னுள் இருப்பவள்! இன்றமிழ்ப்
பெண்ணவள்! பித்தாய்ப் பிடித்தவள்! – பொன்னவள்
கண்ணவள்! கன்னற் கனியவள்! காதலைச்
சொன்னவள்! தூய்மை சுகந்து!
4.
முத்த மழைபொழிந்து மோகப் பயிர்செழித்துச்
சித்தம் சிலிர்த்ததடி சின்னவளே! – சித்திரமே!
புத்தம் புதுமலரே! பொற்குடமே! வாட்டுதடி
நித்தமும் உன்றன் நினைவு!
5.
தயங்கியது காலம்! தழைத்த கனவோ
இயங்கியது நாளும் இனித்தே! - உயர்ந்து
முயங்கியது காதல்! மொழியும் கவியுள்
மயங்கியது மங்கை மனம்!
6
பொய்யாகக் காதலித்துப் போனவளே! உன்னழகில்
மெய்யாக நான்படைத்த வெண்பாக்கள்! – மெய்யுடைந்து
நொய்யாக நொந்தாலும் உள்ளம் உருகதடி
நெய்யாக ஏனோ நினைந்து!
7.
குவ்விதழ்க் காட்சிகள் கொத்தாகப் பூத்தாடும்!
எவ்விதழும் என்னவளுக் கீடாமோ? – கவ்விடும்
செவ்வாழைப் பாட்டெல்லாம் தேனூறும் செல்லத்தின்
செவ்விதழைச் சேரும் சிவந்து!
8.
தொட்டுச் சிவந்ததும்! தூயவளின் பொன்விழி
பட்டுச் சிவந்ததும்! பாட்டெழுதி – மெட்டுக்கள்
இட்டுச் சிவந்ததும்! எந்நாளும் என்னுயிரை
விட்டு மறையா விருந்து!
9.
நீராடி நிற்கின்ற நேரிழையே! உன்னழகில்
போராடி வாழும் புலவன்நான்! – சீரோடு
தேராடிச் செல்வதைப்போல் தேவி நடக்கின்றாய்!
ஓராண்டாய் ஓதினேன் ஓர்ந்து!
10.
தாளை எடுத்துத் தமிழே உனைப்பாட
நாளைப் பொழுதினை நாடுவதோ? – காலைமுதல்
மாலை வரைமயக்கும் மங்கையைப் பாட்டாக்கும்
வேலை எனக்கு விருந்து!
(தொடரும்)
காதல் கவிதைகள் கற்கண்டே ஒவ்வொன்றும்!
RépondreSupprimerவேதங்கள் போற்றிடும் வேள்வியிது! – நாதமென
ஆயிரம் பாடிட ஆழ்ந்துவிட்டீர்! நற்றமிழில்
பாயிரம் பாடிடவா நான்!
Supprimerவணக்கம்!
முத்தாய் ஒளிரும் முதற்கருத்து! பூத்தாடும்
கொத்தாய்க் கொடுக்கின்றேன் நன்றியினை! - சத்தைப்
படைக்கும் கவிதைகளைப் பைந்தமிழ்ப்பொற் றாளில்
படைக்கும் கவிதைகளைப் பாடு!
அழகு தமிழில் ஆயிரம் வெண்பாவை ரசிக்க ஆவலாய் உள்ளோம்.கவி மழை பொழிக!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முரளி தரனின் மனம்முழுதும் இன்பம்
திரளும் கவிதைகளைத் தீட்டு!
தமிழணங்கே நீ கொடுத்து வைத்தவள்..
RépondreSupprimerஉன்னை இப்படி உருகி உருகிக் காதல் செய்கிறாரே எங்கள் கவிஞர்...:)
பார்க்கப்பார்க்க எங்களுக்கு உன்னில் பொறாமை வருகிறதெடி...
அருமையாக இருக்கிறது ஐயா. தொடருங்கள்...காத்திருக்கிறோம் படிக்க...
Supprimerவணக்கம்!
நாளும் வருகையிடு! நல்ல கருத்துமிடு!
ஆளும் தமிழை அளித்து!
ஆகா ஆகா காதல் பொங்கும் வெண்பாக்கள்!
RépondreSupprimerவிழிகள் தந்த கண்பாக்கள்!
ஆம் ஆம்
கள் பாக்கள்
போதை தரும்
கள் பாக்கள்!!
Supprimerவணக்கம்
போதைதரும் என்றே புகன்ற கருத்துக்கள்
பாதைதரும் என்பேன் படா்ந்து!
RépondreSupprimerதமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
தேனருந்தும் வண்டாகத் தேடிவரும் நண்பா்களை
வானிருந்து வந்த மழையென்பேன்! - நானுவந்து
நன்றி நவின்றேன்! நலஞ்சோ் கருத்துக்குள்
ஒன்றி மகிழ்ந்தேன் உரைந்து!
காலை முதல் மாலை வரை அல்ல கனவிலும் விடாது துரத்தும் வெண்பா அழகோ அழகு.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கனவிலும் கன்னற் கவிகள் தொடரும்
மனமே வளா்க மகிழ்ந்து!