jeudi 24 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 9]




காதல் ஆயிரம் [பகுதி - 9]

81.
பெண்ணே மறந்தனையோ? பேசா திருந்தனையோ?
கண்ணே கவிதை சுவைத்தனையோ? - இன்றமிழ்ப்
பண்ணே எனவுனைப் பாடியது பொய்தானோ?
என்னே எழுதுவேன் ஏடு!

82.
என்னை விரும்பி இதயத்துள் வைத்தின்பம்
தன்னை யளித்த தளிர்கொடியே! - உன்னினிய
அன்பால் அமிழ்தை அளித்தவளே! இன்றேனோ
என்பால் வருத்தம் எதற்கு?

83.
ஏன்பிறந்தேன் என்றே இதயம் இயம்பும்முன்
தேன்கலந்தே செந்தமிழில் சீருரைத்தாய்! - வானமுதாய்
ஊண்கலந்து உள்கலந்து உன்பாக்கள் வாழுமடி
நான்மகிழ்ந்து கேட்டிடுவேன் நன்கு!

84.
ஊதாத பொற்குழலை ஊதிக் களித்தபின்
மோதாது துன்பங்கள்! முத்தமிழே - தீதேது?
ஓதா(து) ஒருகவியும்! என்னெஞ்சே! பெற்றசுகம்
போதாது போதாது போ!

85.
முன்னழகு! பின்னழகு! மோகத்தை மூட்டுதடி!
கண்ணழகுக் காந்தமெனக் கவ்வுதடி! – பெண்ணழகே!
உன்னழகு! பொன்னழகு! ஊர்வசி போலழகு!
தென்னழகுச் செந்தமிழாம் சீர்!

86.
குயில்போல் இசைப்பாள்! கிளிபோல் மொழிவாள்!
மயில்போல் மிளிர்வாள்! மலர்போல் - பயன்தருவாள்!
மான்போல் எனைப்பார்ப்பாள்! மங்கையவள் வண்ணங்கள்
தேன்போல் இனிக்கும் திரண்டு!

87.
பொன்னவள்! பூந்தமிழ்ப் பெண்ணவள்! ஈடிலா
என்னவள்! என்றும் இனியவள்! - சின்னவள்
கண்தரும் ஆயிரம் வெண்பாக்கள்! காலத்தால்
விண்தரும் நன்னீர் விளைவு!

88.
கவியிசை பாடும் கவிஞனின் கண்கள்!
புவிவிசை போன்றென் உயிரைக் – குவிந்திழுக்கும்!
என்னநான் செய்வேன்? இனியேதும் செய்கிலேன்!
கன்னிநான் கண்ட கனவு!

89.
பார்வையுள் என்னைப் படம்பிடித்தான்! சிந்தனைக்
கோர்வையுள் என்னைக் குழைத்தெடுத்தான்!– போர்வையாய்
வேர்வையுள் என்னைத் துவைத்தெடுத்தான்! அன்னவன்
மார்பினுள் என்னை வதைத்து!

90.
போதையை ஊட்டும் புலவனின் பார்வையுள்
பேதைநான் ஏனடி பித்தானேன்? – பாதை
மறந்து தவிக்கும்! மயக்கும் அவன்சொல் 
நிறைந்து தவிக்கும் நினைவு!

(தொடரும்)

3 commentaires:

  1. உங்களுடைய தமிழ் வார்த்தைகளைக் கண்டு வியக்கிறேன் ஐயா. அருமை அருமை!

    RépondreSupprimer
  2. காட்சி மாறியது கண்டேன் கவிஞரே!
    மாட்சிமை கொண்டு மயங்கியமாது
    பேச்சு இனி ஒன்றுமில்லை என்று
    ஆச்சுதே அவள் கண்ட கனவு...

    அருமை...வாழ்த்துக்கள் ஐயா!
    ரசிக்கின்றேன். தொடருங்கள்...

    RépondreSupprimer
  3. கவிஞரின் ஏக்கம் புரிகிறது என்ன செய்ய?

    RépondreSupprimer