samedi 19 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 4]



காதல் ஆயிரம் [பகுதி - 4]
 
31.
தேன்வதியும் பூவைத் தினம்வண்டு சுற்றுதே!
வான்மதியும் சுற்றுதே மண்ணுலகை - மீன்விழியே!
உன்னையான் சுற்றல் ஒருகுறை யாகுமோ?
பொன்மனத் தாளே புகல்!

32.
பார்த்தும்..நீ பாராமற் போவதுவும் உன்அன்பைச்
சேர்த்தும்..நீ சேராமற் செல்வதுவும் - ஆர்த்தபுகழ்
அற்புதமே ஏனடி? ஆரமுதே! என்னுயிர்க்
கற்பகமே! உன்கருணை காட்டு!

33.
கல்லும் இரும்பும் கரைந்திளகும்! உன்புருவ
வில்லின் எழுவேல் விழிபட்டால்! - கொல்லுமெனை
உன்றன் கருவிழிகள்! ஊர்வசியே தீர்க்க..வா
என்றன் துயரெலாம் ஈங்கு!

34.
தேனிருக்கும் தேவி மொழியினிலே! நீந்திடும்
மீனிருக்கும் கூர்வேல் விழியினிலே! - மானிருக்கும்
மங்கை மருட்சியிலே! வான்தோய் மதியிருக்கும்
தங்க முகத்திலே தான்!

35.
கற்பனைக்கு எட்டாத காவியமே! மின்னிடும்
பொற்சிலையே! தேன்தரும் பூந்தளிரே! - அற்புத
வான்மதியே! என்றன் மனத்துள்ளே வாழ்கின்ற
தேன்தமிழே! வந்தெனைச் சேர்!

36.
முதன்முதலில் மங்கை முகம்பார்த்த நாளும்
இதமாகச் சேர்ந்த இடமும் - இதயங்கள்
தஞ்சம் புகுந்தமுன் மஞ்சமும் எந்நாளும்
நெஞ்சுள் கமழும் நினைவு!

37.
இளமை துடிப்பழகும்! இன்பத் தமிழின்
வளமை வடிவழகும்! பொங்கும் - புலமையெழில்
கொஞ்சுந் தமிழேயுன் கோலச் சிரிப்பழகும்
நெஞ்சுள் ஒளிரும் நினைவு!

38.
துன்ப இருளில் துவளும் பொழுதெல்லாம்
அன்பை அளித்தென்னைக் காத்ததுவும் - பொன்மலர்
மஞ்சம் விரித்தென்னை வாரி அணைத்ததுவும்
நெஞ்சுள் நிறைந்த நினைவு!

39.
சிலையை நிகர்த்த திருமேனி! காதல்
வலையை விரித்தகலை வாணி! - அலைமகள்
மிஞ்சும் உருவத்தாள்! கொஞ்சிக் கொடுத்தசுவை
நெஞ்சுள் நிலைத்த நினைவு!

40.
பழகுதற்கு என்றும் இனியவள்! பண்பை
வழங்கும் மலர்மகள்! வண்ண - அழகொளிர்
விஞ்சும் பருவத்தை வென்று விளைத்தசுகம்
நெஞ்சுள் குலவும் நினைவு!

(தொடரும்)

18 commentaires:

  1. எதைச் சொல்ல... எதை விட... எல்லாக் கண்ணிகளுமே ரசிக்க வைக்கின்றனவே... காதல் கவிதையிலும் களிநடம் புரியும் உங்கள் தமிழ் வாழ்க! அருமை ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பாக்கள் எல்லாமும் என்றன் மனத்துள்ளே
      தண்பூக்கள் போன்றே தழைத்தாடும்! - நண்பா!
      எதை..நான் உரைக்க! எதை..நான் மறைக்க!
      சதை..நான் உயிரவள் சாற்று!

      Supprimer
  2. வான்மதியும் சுற்றுதே மண்ணுலகை - மீன்விழியே!
    உன்னையான் சுற்றல் ஒருகுறை யாகுமோ?

    அழகான கவிதை ..பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அழகொளிர் மங்கை! அவள்தந்த வெண்பா!
      குழலொலிர் இன்பம் கொடுக்கும்! - நிழலாகப்
      பின்தொடா்ந்து என்னுயிர் பெற்ற இனிமையினைப்
      பின்தொடா்ந்து பாடுவதென் பேறு!

      Supprimer
  3. பைந்தமிழ் அழகினை பாங்காய்ப்பருகிடும் கவிஅழகே
    சிந்திடும் ஒருதுளியில் நானும் என் சிந்தை நிறைக்கின்றேன்...

    அருமை ஐயா...அத்தனையும் அருமை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிந்தை பறித்திட்ட சின்னவளை நான்எண்ணி
      விந்தைக் கவிகள் விளைக்கின்றேன்! - மொந்தையெனப்
      போதை கொடுக்கும்! பொழுதெல்லாம் நின்றாடும்!
      கோதை விழியில் குளித்து!

      Supprimer

  4. அடஅட என்ன அருமை!
    அடஅட என்ன இனிமை!
    எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமை!

    பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவா்
    காதல் கவிதைகளுக்கும் தலைவராக இருக்கிறேரோ!

    எங்களுக்கும் பெருமை!
    பெறுகின்ற இனிமை! புதுமை! புதுமை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அடடா எனக்குளிரும் என்னகம்! சொக்கி
      நடடா எனச்சொல்லும் நங்கை! - விடடா
      எனையென்று பேசும்! இனிக்கும் இளமை
      தனைவென்று பேசும் தழைத்து!

      Supprimer

  5. சுற்றும் உலகெனச் சுற்றுதல் குற்றமோ?
    முற்றும் கனி்ச்சுவை பெற்றுவந்தேன்! - பற்றுடனே
    காதலாம் ஆயிரத்தைக் காலம் படித்தோங்கும்!
    ஆதலால் நாளும் அளி!

    RépondreSupprimer
    Réponses


    1. காலத்தை வென்று கவிஞன்என் ஆயிரமும்
      கோலத்தை உற்றால் குருவருளே! - வேலழகை
      அள்ளிக் குவித்தேன்! அவளின் வடிவெண்ணி
      துள்ளிக் குதித்தேன் துணிந்து!

      Supprimer
  6. இன்பரசம் பொங்கி வழியும் காதல்க் கவிதை வரிகள் அருமை !.........
    வாழ்த்துக்கள் ஐயா மேலும் தொடரட்டும் ......

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பத்தேன் பொங்கும் இளமைக் கவிதைகள்!
      அன்புத்தேன் பாய்ச்சும் அளவின்றி! - என்னவளின்
      சொற்றேன் குடித்துச் சுரந்திட்ட கற்பனையால்
      பெற்றேன் பெருமை பெருக்கு!

      Supprimer
  7. அருந்தமிழில் நாற்பதும் ஆனந்தம் பொங்கிக்
    கரும்பாய் இனிக்கிறது! காதல் – அரும்பிடும்
    கன்னியர் உள்ளம் கவிபொருளைத் தன்மனத்தில்
    பொன்னென வைக்கும் பொதித்து!

    --

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாற்பது வெண்பாக்கள் நல்கும் நறுஞ்சுவையை
      ஏற்பது பேரின்பம் என்றுரைப்பேன்! - ஊற்றெனப்
      பொங்கும் அவளழகைப் போற்றிப் புனைந்துள்ளேன்
      தங்கும் இனிமை தழைத்து!

      Supprimer
  8. வணக்கம் படமே கவிதையாக/வாழ்த்துக்கள்.படத்தின் அசைவு எப்படி எனச் சொல்லாமா?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படமே கவிதையாகப் பாடிய வெண்பா
      இடமே இளமை இனிக்கும்! - சுடராக
      மின்னும் விழியழகை மீட்டும் கவியழகை
      இன்னும் படைப்பேன் இனித்து!

      Supprimer

    2. நண்பா் விமலன் அவா்களுக்கு
      மீண்டும் வணக்கம்!

      படத்தின் அசைவைக் குறித்துக்
      கணிப்பொறி தொழில் நுட்பத்தைக் குறித்து
      இன்னும் நான் அறியவில்லை!

      என் வலையில் உள்ள படங்கள்
      மற்ற வலைகளிலிருந்து நகல் எடுக்கப்பட்டவை!

      Supprimer

  9. தமிழ் உறவுகளே வணக்கம்!

    உங்கள் வருகையால் உள்ளம் மகிழ்ந்தாடும்!
    பொங்கல் சுவையில் புரண்டாடும்! - திங்கள்
    தருமொளியைப் பெற்றாடும்! தங்கக் கருத்தால்
    பெருமொளியைப் பெற்றாடும் பீடு!

    RépondreSupprimer