காதல் ஆயிரம் [பகுதி - 80]
771.
காலை எழுந்தடவுன் கண்ணேஉன் பொன்முகம்
காளை மனமுருகக் கண்ணடிக்கும்! - சோலை
மலர்க்கூட்டப் பேரழகு மாமணியே! உன்னால்
உளத்தோட்டம் பூக்கும் ஒளிர்ந்து!
772.
கள்ளுண்ட போதைதரும் கண்ணேஉன் கட்டழகு!
எள்ளுண்டை விற்பவளே! என்னுயிரைக் - கிள்ளுவதேன்?
மல்லுண்ட தோள்கள் மலைபோல் புடைக்குதடி!
தொல்லுண்ட காதல் தொடர்ந்து!
773.
முக்தி எனும்சொல்லை முற்றும் உணருகிறேன்!
சொக்கி அவளழகில் சூழுகிறேன்! - பக்தியுடன்
கொக்கி விழியிரண்டும் குத்தாத நாள்களிலே
சக்தி இலையென்று சாற்று!
774.
அய்அய்யோ என்னுயிரை அப்படியே கொல்வதுமேன்?
நெய்நெய்யோ
என்றுடலை நெய்வதுமேன்? - பொய்பொய்யோ
என்றாலும் ஏற்கின்றேன்! என்னவளே ஓர்முத்தம்
இன்றேனும் தாராய் இனித்து!
775.
ஓடிவரும் ஆறாக உன்றன் நினைவலைகள்!
பாடிவரும் என்னுயிரைப் பந்தாடும்! - கோடிமலர்
சூடிவரும் பேரழகே! தூயவளே! என்மனத்துள்
கூடிவரும் காமம் கொழுத்து!
(தொடரும்)
வரிகள் மயக்க வைக்கிறது...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
மயக்கம் கொடுக்கும் மலரவள் என்னை
இயக்கிக் கொடுக்கும் இனியதமிழ்! என்றென்றும்
நின்று நிலைத்திருக்கும்! ஈடில் பெரும்புகழை
வென்று நிலைத்திருக்கு மே!
காலை எழுந்ததும் காதல் ரசம் குடிக்கும் பழக்கம் உள்ளவரோ!!
RépondreSupprimerஏனிந்த காதல் வெறி!! அருமையான வரிகள் ரசித்தேன் எனது பாராட்டுக்களும் வணக்கங்களும். பாரதிதாசன் பெயரில் கண்ணதாசனை காண்கிறேன்.
Supprimerவணக்கம்
காலையிலும் காதல்!பொன் மாலையிலும் காதல்!பூஞ்
சோலையிலும் காதல்! சுரந்திடுமே! - வேலைசெய்
ஆலையிலும் காதல்! அவள்மேனி கொண்டொளிரும்
சேலையிலும் காதலெனச் செப்பு!
Supprimerகாதல் வெறியன்று! கவ்வும் கருத்துகளின்
மோதல் வெறியன்று! முத்தமிழின் - வேதமது!
சங்கத் தமிழா்தம் சால்பது! நல்லமுதைப்
பொங்கும் கவிதையைப் போற்று
Supprimerகொலைவெறி யன்று! குலவுதமிழ் பாடும்
கலைவெறி என்றதைக் கண்டேன்! - தலையில்
மலைவெறி தந்தஎழில் மங்கையின் பார்வை
அலைவெறி நீக்கும் அழைத்து!
வணக்கம் ஐயா...
RépondreSupprimerதமிழ்மொழியின் அருமையான சொற்களால் நீங்களும் படிக்கும் இவ்வெண்பாக்களையும் ஆங்காங்கே கருத்துப்பகிர்வாய் தரும் குறள் பாக்களையும் கவனித்து வருகிறேன்.
அத்தனையும் அற்புதமானவை. அருமையானவை!
இதுவரை சாதாரண பாக்களாக நான் இங்கு கருத்துப்பாகளாக எழுதிவருகிறேன். இதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து பா எழுதும் அடுத்த வகையை அகவல்... போன்றவற்றை விளங்கப்படுத்துங்கள்.
அறிந்து தொடர்ந்து பயில ஆவலுடையேன். மிக்க நன்றி ஐயா!
த.ம.4
Supprimerவணக்கம்!
பாட்டின் வகைப்போன்று பாவையின் சொல்லினிக்கும்!
காட்டின் வளமாய்க் கமழ்ந்தினிக்கும் - வீட்டின்
விளக்காய் ஒளிர்கின்றாள்! வெற்றி தரும்நல்
இலக்காய் இருக்கின்றாள் இங்கு!
தமிழ் சூடிவரும் பாமாலை
RépondreSupprimerதேடி தரும் சுகம் நித்தம் நித்தம்....
அருமை ஐயா.
Supprimerவணக்கம்!
பூமாலை வாடிவிடும்! பொன்மகளை நான்எண்ணிப்
பாமாலை பாடிப் படைக்கின்றேன்! - வா..மாலை
என்றே தவமிருக்கும்! ஈடிலாக் கற்பனைகள்
நிற்றே தவமிருக்கும் நீடு!
RépondreSupprimerவலைத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
நனிநன்றி!
நேரிசை வெண்பாவில் நெஞ்சம் நிலைத்ததனால்
சீரிசை சோ்த்துநான் செய்தகவி! - பாரிதைக்
காதலின் வேதமாய்க் கற்றுக் களிப்பெய்தும்!
மாதவ மங்கை வளம்!