காதல் ஆயிரம் [பகுதி - 78]
761.
ஒற்றடமாய்த் தந்தவுன் ஒண்ணிதழ் முத்தங்கள்
நற்றவமாய் என்னுள் நலம்படைக்கும்! - பற்றுடனேன்
காத்துக் களிக்கின்றேன்! கன்னற் கவிதைகளைப்
பூத்துக் களிக்கின்றேன்! போற்று!
762.
கன்னற் கவிதரும் கட்டழக! கம்பனென
மின்னற் கருத்துகளை மீட்டியவா! - பொன்னழகா!
என்னை மயக்கும் இனியதமிழ்ச் சொல்லழக!
உன்னை அழைக்கும் உயிர்!
763.
பொன்னவளோ! இன்பப் பொருளவளோ! பூந்தமிழ்த்
தென்னவளோ! தித்திக்கும் தேனவளோ! - தென்றலாய்
என்னவளோ! இன்பவளோ! என்னுயிரை ஆழ்மனத்துள்
சின்னவளோ வைத்தாள் சிறை!
764.
உன்னுடைய சட்டையை நான்உடுத்திப் பார்க்கையில்
என்னுடைய மேனி எழுச்சியுறும்! - இன்பனே!
துன்புடைய வாழ்வைத் துடைத்துத் துணிவூட்டும்
அன்புடைய உன்சொல் அமுது!
765.
உன்உடையை மெல்ல துவைக்கும் பொழுதினிலே
இன்அடையை ஒத்த இனிமையுறும்! - வன்படையை
ஆசை வழிநடத்தும்! ஆருயிரே! நம்காதல்
பூசை தொடங்கும் புலா்ந்து!
(தொடரும்)
அருமை...
RépondreSupprimerதொடருங்கள்... தொடர்கிறோம்...
Supprimerவணக்கம்!
வெண்பா படைத்து வியக்கின்றேன்! அத்தனையும்
தண்பா இனிமையைத் தந்திடுமே! - நண்பா!
கலைமகள்! சந்தக் கவிமகள்! இன்பத்
தலைமகள் தந்த தமிழ்!
அழகான வரிகள் ஐயா... ரசித்தேன்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நாளும் படைக்கின்ற நற்றமிழ் வெண்பாக்கள்
மூளும் உணா்வை மொழிந்திடுமே! - வாளும்
அவள்விழிமுன் தோற்கும்! அருந்சுவை குன்றும்
அவள்மொழிமுன் சற்றே அதிர்ந்து!
சிந்தும் தமிழ்மொழி சிந்தையில் நிறைந்து
RépondreSupprimerதந்திடும் பாக்கள் தரும்சுவை மிகவேதான்
எந்தையீசன் எமக்கு இயம்பிய வரம்தான்
புந்தியில் புகுந்திடப் புகட்டுகிறீர் நன்றே...
Supprimerவணக்கம்!
இளமதி தந்திட்ட இன்தேன் கருத்திற்கு
உளம்மகிழ் நன்றி உரைத்தேன்! - வளம்மகிழ்
வண்ணம் தொடுக்கும் மதுக்கவிகள், என்னவளின்
எண்ணம் தொடுக்கும் எழுத்து!
பத்துப் பத்தாய் கவிதை எழுதினீர்கள் இப்போது ஐந்தாகக் குறைத்து விட்டஈர்களே.கவிதை 762 என்னை மிகவும் கவர்ந்தது
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முன்பே எழுதி முடித்திட்ட ஆயிரத்தை
இன்பே ஒழுக எழுதுகிறேன்! - அன்பே
பெருகி நிறைந்தோடும்! பெண்ணவளை எண்ணி
உருகிக் கிடக்கும் உயிர்!
நண்பா் டினேசுசாந்த் அவா்களுக்குக் காதல் ஆயிரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிமுடித்துவிட்டேன்!
வெண்பாவை மேலும் செம்மையாக்கி இப்பொழுது வெளியிடுகிறேன்!
நிறைந்த தமிழ்ப்பணியால், காலம் குறைவாக உள்ளதால் பத்து ஐந்தாக மாறின!
உங்கள் வரிகளை வாசிக்கையில்
RépondreSupprimerஎங்கள் உள்ளம் எழுச்சியடைகிறது ஐயா.
Supprimerவணக்கம்!
இன்பத் தமிழை இசைக்கும் பொழுதெல்லாம்
துன்பம் அகன்று தொலைந்திடுமே! - என்னவளை
எண்ணி எழுதும் எழுத்தெல்லாம் தென்னையின்
தண்ணீா் கொடுக்கும் தரம்!
RépondreSupprimerவணக்கம்!
கருத்தை அளித்துக் களிப்புறச் செய்தீா்!
விருந்தை நிகா்த்த விளைவு!