samedi 6 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 73]




காதல் ஆயிரம் [பகுதி - 73]
 
721.
உன்குரல் கேட்காமல் உள்ளம் உருகுவதால்  
என்குரல் ஏனோ எழவில்லை! - சின்னவளே 
இன்குரல் மீட்டுக! இன்னலுறும் நெஞ்சத்தின்
துன்குரல் ஓட்டுக தொட்டு! 

722.
தள்ளி அமர்ந்திருந்தேன்! தங்கத் தமிழமுதை
அள்ளி அளித்திட ஆடினேன்! - கள்வனே!
சொல்லிய இன்சொற்கள் போதுமடா! நான்சொக்க
மெல்லிய பண்களை மீட்டு!

723.
சொந்தங்கள் உன்னருகே சூழ்ந்திருக்க என்னாசை
பந்தங்கள் போகும் பணிந்திங்கு! - செந்தேனே!
சந்தங்கள் பாடித் தனித்துனை நான்சுவைக்க
சிந்தனைகள் மேவும் சிலிர்த்து!

724.
எத்தனை நாள்தான் பொறுப்பதுவோ? என்னிதயம்
இத்தனை துன்பங்கள் ஏற்பதுவோ? - பித்தனே!
சித்திரை காயும்வன் கத்திரி சூடாக 
நித்திரை காயும் நினைந்து!

725.
கவிவண்ணம் காணக் கலையெண்ணம் கொண்டு
புவிவண்ணப் பூவழகாய்ப் பூத்தேன்! - நவிலும்
மொழியழகு கேட்டு முளைத்தெழும் ஆசை!
விழியழகு காதல் விருந்து!

726.
என்னடா கோபம்? எழுத மறந்தனையே!
பொன்னடா பூவடா என்மனம்! - புண்ணாக்கி
ஏனடா பார்க்கிறாய்? என்னுள் உனைக்கலந்து
காணடா காதல் களம்!

727.
எடுத்தெழுதும் பாட்டினிலே என்நிலையை நன்றே
தொடுதெழுதி நின்றேன் தொடர்ந்து! - படும்நோய்
தடுத்தெழுத மாட்டாயோ? தண்கவி முத்தம்
கொடுத்தெழுத மாட்டாயோ கூறு?

728.
கன்னெஞ்சம் கொண்டவனே! காதல் வலிகொடுத்து
உன்னெஞ்சம் அங்கே உறங்குவதோ? - என்னென்பேன்;
என்னெஞ்சம் ஏகும் துயரத்தைப்! போதுமடா!
வன்னெஞ்சம் கொண்டவனே வா!

729.
எட்டிக்காய் என்றே நினைத்தாயோ? ஏங்கிடும்
குட்டிக்காய்ப் பேசக்  குமட்டுதோ? - மெட்டெழுதிக்
கட்டும் கவிதையில் மெய்மறந்தேன்! நெஞ்சத்தைச்
சுட்டு..நீ சென்றதேன் சொல்லு!

730.
வெண்பட்டுப் பொற்காடே! வெண்ணிலவே! என்னோடு
பண்தொட்டுப் பாடிப் பறந்ததுமேன்? - தண்டமிழே!
கண்பட்டுப் போனதோ? கண்மணியே! என்னுயிர் 
புண்பட்டுப் போனதே போ!

(தொடரும்)

10 commentaires:

  1. உருக வைக்கும் வரிகள் அருமை ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உருகும் பனிக்கூழ்! சுவைப்பாகு! சூட்டில்
      உருகும் பசும்செய்! உணா்ந்தேன்! - உருகும்என்
      உள்ளம் ஒளிரும் அவள்அழகால்! காதலின்
      வெள்ளம் பெருகும் விரைந்து!

      Supprimer
  2. ஆயிரமென்ன பத்தாயிரத்தையேக் கடந்தாலும் அலுக்காத கவிதைகள் அய்யா தங்கள் கவிதை. காரணம் தங்கள் தமிழ். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கோடான கோடி மலா்களில் ஓரழகு!
      காடான தேன்கவியில் காட்டுகிறேன்! - ஈடான
      இன்பம் இருந்திடுமோ? என்னவளைப் பார்த்தவுடன்
      துன்பம் இருந்திடுமோ சொல்லு!

      Supprimer
  3. ஐயா... வணக்கம்!

    சிந்திய தேந்துளி தந்திடும் பாக்களில்
    முந்திய மூத்தஎம் மொழியாம் தமிழதன்
    கொஞ்சிடும் அழகும் குழைந்திடும் சந்தமும்
    பஞ்சமின்றியே உம் படைப்பிலே மிளிருதே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வஞ்சிக் கொடியவள்! வட்ட நிலவவள்!
      பஞ்சி மனத்தவள்! பாகவள்! - நெஞ்சேந்திக்
      கொஞ்சும் தமிழைத் குழைத்துநான் பாடுகிறேன்!
      விஞ்சும் சுவையை விளைத்து!

      Supprimer
  4. பொன்வண்ணம் போல பாவண்ணம் ஐயா படிக்கும் போதே உருக்கம் கூட்டும் ! தொடருங்கள்!

    RépondreSupprimer
  5. பாட்டுக்கே பாட்டெழுதி பாரதியின் தாசன்நீர்
    நாட்டுக்கே நாளுமதை நல்கிடுவீர்! - வாட்டமின்றி
    வெற்றிக்கே எண்திசையும் விண்முட்ட பறக்கட்டும்
    மற்றிங்கே உண்டாமோ ?மாசு

    RépondreSupprimer
  6. கவிவண்ணம் காணக் கலையெண்ணம் கொண்டு
    புவிவண்ணப் பூவழகாய்ப் பூத்தேன்! - நவிலும்
    மொழியழகு கேட்டு முளைத்தெழும் ஆசை!
    விழியழகு காதல் விருந்து!

    அழகிய வெண்பா கவிஞரே

    விழிகளைப் பாடாத
    கவிஞனும் உண்டோ
    அவள் விளையாடும்
    குழந்தை நிலா அன்றோ...!



    ..........வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    RépondreSupprimer
  7. வார்த்தைக்கு வார்த்தை அழகு மிளிர்கிறது. நன்றி ஐயா.

    RépondreSupprimer