jeudi 4 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 71]



காதல் ஆயிரம் [பகுதி - 71]


701.
நடித்தேன் பகலில்! நலிந்தேன் இரவில்!
படித்தேன் இளமையின் பாடம்! - கிடந்து
துடித்தேன்! துவண்டேன்! துணிந்தேன்! அழகாய்
வடித்தேன் கவியில் வகுத்து!

702.
சுடர்..மை உடைய படர்தமிழ்ப் பாவே!
இடர்..மை விழியிரண்டும் ஏங்கும்! - தொடர்ந்து
கடமை கவியெழுத்தைக் கட்டியதா? வாடும்
மடமை மகளின் மனம்!

703.
சும்மா கிடைக்குமா உம்மா உனக்கிங்கே!
எம்மா என..நீ இறைஞ்சுகவே! - செம்மறவா!
இம்மான் மயங்கிடவே இன்பக் கவிபாடு!
செம்மாங் கனிசுவை சேர்த்து!

704.
கலைபேசி! கன்னல் கவிபேசி! காதல்
நிலைபேசி! நெஞ்சமொழி பேசி! - மலரே!
இலைபேச்சு என்றவுடன் இச்..இச்..இச் முத்தம்!
தொலைபேசி செய்யும் துணை!

705.
காதலனே! கன்னங் கரியவனே! நான்வாழும்
மாதவனே! நற்றமிழ் மன்னவனே! – காதலின்
வேதவனே! உன்னெழுத்தை வேண்டுகிறேன்! பாட்டுலகின்
ஆதவனே செய்வாய் அருள்!

706.
தூக்கம் முழுதும் தொலைந்ததடி! என்னுயிரைப்
போக்கும் செயல்கள் புரிந்ததுமேன்? - தாக்கும்
இடிபோல் நினைவோங்கும் என்செய்வேன்? பூத்த
கொடிபோல் இருப்பவளே கூறு?

707.
பொய்விழிப் பார்வை புலவனெனைக் கொல்லுதடி! 
மெய்வழி என்று விடிந்திடுமோ? - செய்யவள்போல்
உய்யவழி செய்தாய் எனஇருந்தேன்! நெஞ்சத்தை
நய்யவழி செய்தாய் நடித்து!

708.
பொல்லாச் செயற்புரிந்து பூகம்பம் வந்ததுபோல்
எல்லாம் அழித்தனையே! என்செய்வேன்? - சொல்லடி!
கல்லோ உனக்கிதயம்? காதல் உயிர்குடித்தாய்!
முள்ளோ? புதரோ? முடிவு?

709.
சின்ன குழந்தையிடம் வண்ண இனிப்புகளை
உண்ணக் கொடுத்தே ஒடுக்குதல்போல் - எண்ணமெலாம்
கன்னல் மழைபொழிந்து காதல் பயிர்வளர்த்துப்
பெண்ணவள் போனால் பிரிந்து!

710.
கழுவும் பொழுது நழுவிடும் மீன்போல்
பழகும் மதியொளி பாவாய்! - பழமாய்
வழங்கும் மொழியுடையாய்! வாடி வதங்கிப்
புழுங்குமென் நெஞ்சம் புரண்டு!

(தொடரும்)

3 commentaires:

  1. ஐயா...
    என் வணக்கமும் வாழ்த்துக்களும்!

    நீங்கள் பாக்களைப் பாடப்பாட எம்மனத்தில் தமிழ்ப்பூக்களாய் பூக்கின்றதையா...

    சிந்தை முழுதும் சிறந்தஉம் பாக்களால்
    விந்தை மிகவாக வியப்பு மேலோங்குதே
    எங்கள் தமிழன்னை எமக்களித்த வரமன்றோ
    மங்காப் புகழோடு மாண்புற்று நீர்வாழ்கவே!

    RépondreSupprimer
  2. பேசி பேசி - பலமுறை ரசித்தேன் ஐயா... (704)

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. எல்லா வரிகளுமே அருமை !...வாழ்த்துக்கள் ஐயா .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer