காதல் ஆயிரம் [பகுதி - 74]
731.
முத்தக் கடலில் முழுகியது என்னுயிர்!
அத்தை மகளே! அருந்தேனே! - சித்தத்தில்
ஆசை பெருகுதடி! ஆனந்த இன்னிசையின்
ஓசை பெருகுதடி ஓர்ந்து!
732.
கால்நான்கும் பின்னிக் களிக்கும்! இனிமையுள்
தோள்நான்கும் பின்னிச் சுகம்சுரக்கும்!
- நாள்நான்கும்
ஏனோ ஒருநாள் எனப்போகும்! உன்நினைவால்
நானோ கவியானேன் நன்கு!
733.
பட்டென்பேன்! பாவையவள் பாடிப் பறக்கின்ற
சிட்டென்பேன்! செம்மலர் மொட்டென்பேன்!
- கட்டுடல்பொன்
தட்டென்பேன்! நற்சுவை பிட்டென்பேன்! கற்பனையைக்
கொட்டென்பேன் இன்பங் குழைத்து!
734.
மீசை முடிகுத்தி மேனி சிலிர்க்குதடி!
ஆசை அலைபெருகி ஆடுதடி! - தாசனவன்
ஓசை மணியருகே உம்மா மழைபொழிந்து
பூசை படைத்தான் புகழ்ந்து!
735.
பஞ்சு இளமெத்தை! பிஞ்சுடல் நோகுதடா!
கொஞ்சும் நினைவுகள் விஞ்சுதடா! - பஞ்சமென
வஞ்சி வதங்குதடா! கோதை மனங்குளிர
நெஞ்சம் நெகிழ்ந்திட நீவு!
736.
கள்வனே! இன்பக் கவிதைகளைக் கட்டுகின்ற
செல்வனே! செந்தமிழ்த் தொண்டனே! - மல்லனே!
வல்லவனே! என்னை வதைப்பவனே! நெஞ்சுவக்கும்
நல்லவனே! தாராய் நலம்!
737.
தளிர்கொடியும் சாய்கிறது! தள்ளாடி வானில்
குளிர்நிலவும் காய்கிறது! கொஞ்சும் - வளர்கவியே!
நெஞ்சத்தின் சூடெல்லாம் நீயணைக்க ஓடிவிடும்!
மஞ்சத்தின் மார்பழகா வா!
738.
வளமாய்க் கவிபொழியும்! வண்டு விழிகள்
நலமாய்க் கதைபேசும் நாளும்! - மலர்மகளே!
எண்ணமெலாம் உன்னெழகில் ஆழ்ந்திட என்னுயிர்
வண்ணமெலாம் காணும் வளர்ந்து!
739.
உன்னைச் சிறைபிடித்தேன்! உன்னுள் குடிபுகுந்தேன்!
என்னை இயக்கும் இனியவனே! - என்எண்ணம்
பொன்வண்ணம் கொண்டு பொலிகிறது! எப்பொழுதும்
இன்வண்ணம் யாவும் இசைத்து!
740.
ஈருடல் ஓருயிர் என்றே இணைந்திருந்தோம்!
சீருடல் மேவிச் செழித்திருந்தோம்! - தேரழகி
செல்வா! செழுந்தமிழா என்றெனைக் கொஞ்சியவள்
அல்வா கொடுத்தாள் அணைத்து!
(தொடரும்)
லட்சம் வரை எழுதி லட்சியத்தை வெல்லுங்கள்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வாழ்கின்ற நாள்வரை வஞ்சி வடிவழகில்
ஆழ்கின்ற சிந்தை அளிக்கின்ற - சூழ்கவிகள்
பெண்ணவள் கொண்டொளிரும் பேரழகில் ஓர்பகுதி!
விண்ணவள் என்றே விளம்பு!
ஈருடல் ஓருயிர் என்றே இணைந்திருந்தோம்!
RépondreSupprimerசீருடல் மேவிச் செழித்திருந்தோம்! - தேரழகி
செல்வா! செழுந்தமிழா என்றெனைக் கொஞ்சியவள்
அல்வா கொடுத்தாள் அணைத்து!
இன்றைய நிலைமைதனை இயம்பிநீர் அழகாய்
சில புன்னகைப் பூக்களும் பூத்தது இக் கவி கண்டு.
வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் கவிதை மழை !
Supprimerவணக்கம்
சிவந்த இதழிரண்டும் இன்சுவை அல்வா!
தவழ்ந்த கவிதை தமிழ்தேன்! - அவளிடம்
பெற்ற இனிமையை எண்ணிமனம் பித்தாகும்!
கற்ற கலைகளைக் காத்து!
/// மீசை முடிகுத்தி மேனி சிலிர்க்குதடி!
RépondreSupprimerஆசை அலைபெருகி ஆடுதடி! - தாசனவன்
ஓசை மணியருகே உம்மா மழைபொழிந்து
பூசை படைத்தான் புகழ்ந்து! ///
ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
இளமை துடித்தாடும்! இன்பக் கனவு
வளமை வடித்தாடும்! வாட்டும்! தலைமையுரை
ஆற்றும் அவளழகைக் கண்டவுடன் என்மனம்
போற்றும் கவிதை புனைந்து!
ஐயா...
RépondreSupprimerசித்தம் மயங்கச் சிலிர்த்திடத் தமிழ்மொழியில்
நித்தம் இயற்றி நிரலிட்டுத் தரும்பாக்கள்
நத்தம் நடக்கின்ற நடனங்கள் தன்னையுமே
வித்தமுடன் தருமுங்கள் விந்தை திறமைதான் ...
Supprimerவணக்கம்!
விந்தை விழியழகில் வீழ்ந்து கிடக்கின்றேன்!
சிந்தை இழந்து சிதைகின்றேன்! - மொந்தையின்
போதை தெளிந்துவிடும்! கோதை கொடுத்திட்ட
போதை தெளிந்திடு மோ?
RépondreSupprimerவணக்கம்!
காதல் கவிதைகளைக் கற்றுக் களித்தவா்கள்
மாதா் மனமிணைந்து வாழ்ந்திடுவார்! - ஓதுகிறேன்
வண்ண மலா்மணமாய் வார்த்த கருத்தெண்ணி
நண்ணும் கவிதை நலம்!
விழியிரண்டு கற்ற வித்தை என்னே
RépondreSupprimerதமிழ் மொழி கண்டு விழையும் பெண்ணே..
அருமை அருமை ஐயா.