jeudi 4 avril 2013

மொழியும் - வாழ்வும்





மொழியும் - வாழ்வும்

   தமிழ்மொழியின் பெருமையை உலகுக்கு அறிவித்தவர் மொழியியல் அறிஞர் கால்டுவெல் பெருமகனார். தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள். நான் மரமாக வளர்த்து வருகிறேன்.
- பாவாணர்

   மக்களுடைய சொந்த மொழியிலேயே நாம்(அரசு) பேச வேண்டும்
- அரசியல் மேதை இலெனின்

   தமிழ் படிக்கதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியதை உடையவர்கள் அல்ல. 
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

   தமிழ்ப் புலவர்களே! தமிழ் பெருமக்களே! கவனம்! கவனம்! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு மக்கள் குமுதாயத்திற்கு உயிர் அதன் மொழிதான். தமிழ்மொழி அழிந்து விட்டால் தமிழர்களின் சீரும் சிறப்பும் அழிந்துவிடும்.
- சுப்பிரமணிய சிவா

   தாய் மொழி வளராத நாடு ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய் மொழி ஓம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக.
தமிழ்த்தென்றல் திரு. வி.

   ஆட்சித் துறையில், இன்று பிறமொழிச் சொற்கள் பயின்ற சொற்களாக உறவாடுகின்றன. தாய்மொழிச் சொற்கள் செல்வாக்கிழந்து ஒதுங்கி நிற்கின்றன. அதனால் பிற மொழி பேசுவோர், தாய்மொழியைப் புறக்கணிப்பவர்  செல்வாக்காக வாழ முடிகிறது. தாய் மொழிப் பற்று உடையவர் ஏங்கி வாடுகின்றனர். அவர்கள் தாய் மொழிச் சொற்களை வழங்குதலும் தவறாகக் கருதப்படுகிறது.
- முனைவர் மு. வரதராசனார்

   தனித்தமிழ்க் கோட்பாடு மட்டுமல்ல. மறைமலை அடிகளின் ஏனைய தமிழ்நெறிக் கொள்கைகளையும் சீர்திருத்தக் கருத்துகளையும் யான் மனமார  ஏற்றுக் கொள்கிறேன். ஆம், தமிழ்ப் பகைவர்கள் தமிழர்க்கும் தமிழ்நெறிக்கும் செய்து வரும் கேடுகளைச் சில ஆண்டுகளாகவே யான் உணர்ந்து கொண்டு வருகிறேன்.
- பண்டிதமணி கதிரேசனார்

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக, மிகப் பெரிய இனத்தவரும், ஆற்றலும், நன்கு மதிக்கப்படுபவரும், வழிபாட்டிற்கு உரியவருமான ஆரிய மக்களின் சமற்கிருத மொழியை எதிர்த்து நின்று தன் ஆட்சியை நிலை நாட்டி வந்துள்ள திராவிட மொழிகள் தம் இடத்தைப் பற்றவரும் வேறு எம்மொழி முயற்சியையும் இனிவரும் காலங்களில் எதிர்த்து அழித்துவிடும்.
- அறிஞர் கால்டுவெல்

   தாய் மொழியில் பற்றில்லாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடைய  மாட்டார்கள்
தந்தை பெரியார்   
                                                                                                   
   தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்று மொழிக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் இல்லை.
- தாகூர்

   கல்வியின் நோக்கம் வேலை வாய்ப்பைப் பெறுவதே என்று இன்று பலராலும் பேசப்பெறுகிறது இதன் விளைவாக அண்மைக் காலங்களில் மொழிப் பாடங்களில் ஒருவித அக்கறையின்மையைத் தோற்றுவித்துள்ளனர். அதன் விளைவுகளை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால் இந்த நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு நாட்டுப்பற்றுக் குறைந்து, அயல் மொழி மோகம் தலை தூக்கியுள்ளது, உயர்கல்வி பெறும் மாணவர் அயன்மைப்பட்டுப் போய்க்கொண்டிருக்கின்றனர், அயன்மைப் பட்டுப்போன ஒருவனிடம் ஆள்மை நிறைந்த தேசப் பற்றை எதிர்ப்பார்க்க முடியுமா? இந்த நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவேண்டிய இளைஞன் அயன்மைக்கு ஆட்படுவதால் இந்தத் தேசத்துக்கு ஏற்படும் ஊறுகளை எண்ணிப்பார்க்க வேண்டாமா? அயன்மை நீக்கம், ஆள்மை ஆக்கம், அற நாட்டம், ஆதல் ஈடேற்றம் இவைபோல்வன கால் கொள்ள வேண்டுமாயின் மொழிப் பாடம் இன்றியமையாததாகும்
 - . ரா. கு. நாகு

   உலகப் போர்களினால் பொருளாதார நலிவடைந்த நிப்பான் நாடு இன்று உலகத்தில் முன்னேறிய நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது, இம் முன்னேற்றத்திற்கு நிப்பானியர்களின் நாட்டுப் பற்றையும் தாய்மொழி வழிக் கல்வியையும் குறிப்பிடாமல் இருப்பதில்லை நிப்பானின் அறிவியல் வளர்ச்சிக்கும் நுட்ப மேம்பாட்டுக்கும், தாய்மொழி வழிக் கல்வியே முக்கிய காரணம் எனலாம் கலைக்கல்வி, அறிவியல் கல்வி, தொழிற்கல்வி ஆகியவை நிப்பானில் நிப்பானிய மொழியிலேயே நடைபெறுகின்றன.

- இராசாராம்

  மனத்திலுள்ள கருத்தைத் தெளிவாகக் காரணச் செய்கை முறையில் வெளிப்படுத்துவதற்குச் சிறந்த மனப்பயிற்சி வேண்டும். இதைத் தாய்மொழி வாயிலாகத்தான் எளிதில் பெற இயலும் தாய்மொழிப் படிப்பே கல்விக்கு அடிப்படையாக அமைந்து நிலைத்தும் ஆழமானதுமான உயர் பண்புகளை ஒருவரிடம் ஏற்படுத்துகின்றது. ஒரு திட்டப்படி வேலை செய்தல் மனத்திலுள்ள கருத்துகளைக் கோவையாக வெளியிடல் கலைத்துறைகளில் இறங்கி உழைத்தல் முதலிய நற்பழக்கங்கள் யாவும் தாய்மொழிப் படிப்பால் தான் கைவரப் பெறும் என்பதை மொழி முறை அறிந்த மூதறிஞர்கள் மொழிகின்றனர், எனவே தாய்மொழிப் படிப்பு மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படுகின்றது.
 -  முனைவர் . சுப்பு

10 commentaires:

  1. மிக அருமையாக தமிழ்மொழியின் சிறப்பதனை அறிஞர்கள் கூறியவற்றிலிருந்து தொகுத்துத் தந்துள்ளீர்கள் ஐயா.

    தமிழ்மொழி தொன்மைவாய்ந்த மொழி. சங்ககாலத்திலிருந்தே நம் தமிழ்மொழி இருந்தது என்பதற்கும் பல சான்றுகளாக சங்கப்பாடல்களிலேயே பல இலக்கியப் பாடல்களின் மூலம் அறியலாமென படித்திருக்கின்றேன்.

    இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டில் மட்டுமன்றி அங்கு தாய்நாட்டில் வாழும் எம்முறவுகளின் அயல்நாட்டு மொழி ஆர்வத்தினால் தாய்மொழியில் உள்ள பற்றினை கைவிட்டு இழக்கத்தொடங்கிவிட்டனர். மிக வருந்தத்தக்க வேதனையாகிய விடயமே.

    அனைவருக்கும் தாய்மொழிப்பற்று இருக்கவேண்டும். தமிழராகிய நாம்தான் எம்மொழியின் பற்றினை அதன் அவசியத்தினை எம் சந்ததிகளுக்குப் புகட்டவேண்டும்.
    பெற்றோரும் கற்றோரும் ஆவன செய்து எம்மொழியைக் காக்க முன்வரல் வேண்டும்.

    அவ்வகையில் உங்கள் பங்கென நீங்கள் ஆற்றும் சேவை உள்ளங்கை நெல்லிக்கனி ஐயா!

    இன்றைய காலச்சூழ்நிலைக்குத்தக்க மிக அவசியமான சிறப்பான பதிவு இது.

    உங்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    தேமதுர தமிழ்மொழி உலகெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

    வாழ்க தமிழ்மொழி! வளரட்டும் அதன் புகழ்!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மொழியின் சிறப்பை மொழிந்த கருத்து!
      விழியின் ஒளியை விளைத்து!

      Supprimer
  2. வாழ்நாளெல்லாம் போதாதே, நம் தாய்மொழியாம் தமிழின் புகழ் பாட,எத்துனை அறிஞர் வந்து சொன்னாலும் நம்மவர் நம்மொழியின் சிறப்பை உணர்வாரோ? ஆதங்கத்துடன் அப்துல் தயுப்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      தமிழா் தமிழ்மொழியைத் கற்றால், துயரம்
      இமியும் வருமே இனி!

      Supprimer
  3. வெந்தனனில் வேகாது, தண்ணீரில் மூழ்காது என்று போற்றப் பெற்ற தமிழின் பெருமையினை அழகுற உரைத்துள்ளீர்கள் அய்யா.
    உலகைத் தமிழால் உயர்த்துவோம். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உலகத் தமிழா் உயா்வுறும் வண்ணம்
      நிலத்தில் தமிழை நிறுவு!

      Supprimer
  4. சிறப்பான தொகுப்பு... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்றே சிறந்திட நறுந்தமிழ் சீா்மையை
      இன்றே விளைப்பாய் இனித்து

      Supprimer
  5. அருமையான பகிர்வு !.இவைகள் எப்போதும் நாம்
    உணர வேண்டிய உண்மைகள் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அளித்த அழகுக் கருத்துரையில்
      எம்மனம் உருகும் இளைத்து

      Supprimer