vendredi 5 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 72]






காதல் ஆயிரம் [பகுதி - 72]


711.
ஏலத்தில் இட்டென்னை விற்கும் இழிவேனோ?
கோல விழிப்பெண்ணே? கோதையே - காலமெலாம்
சாலம் பலபுரிந்து சாய்த்த கதைபோதும்!
கூலமாய் என்னைக் கொளுத்து!

712.
சின்ன குயிலின் சிறகொடித்து ஏன்சிரித்தாய்?
கன்னற் கனியைக் கசப்பென்றாய்! - என்னவளே!
கண்ணெதிரில் காதலின் காலுடைத்து ஏன்போனாய்!
எண்ணத்தில் இட்டாய் இடி!

713.
உன்னை உனக்கே எடுத்துரைத்தும் கேட்காமல்
என்னை எரித்துவிட எண்ணுவதேன்? - கண்ணை
இமைகாக்கும்! பெண்ணே உனைக்காத்தேன்! நெஞ்சைச்
சுமைகாக்கச் செய்தாய்ச் சுழன்று!

714.
எப்படி மனம்வந்ததோ என்னைப் பிறரிடம்
அப்படிச் சொல்ல? அடி..பெண்ணே! - அப்பப்பா
ஒப்படி இல்லா உயர்கவி தந்தவனை
இப்படிக் கொல்லுவ தேன்;?

715.
மொட்டுப் பிரியும்! முகிற்பிரியும்! வன்னுடல்
கட்டுப் பிரியும்! கருபிரியும்! - தொட்டுநலம்
இட்டுப் பிரியும் இளையவளே! என்னுயிர்
விட்டுப் பிரியும் விரைந்து!

716.
என்ன..சொல்? ஏது..சொல்? என்னிதயம் வாடுதடி!
வன்ன..சொல் நல்கும் வடிவழகே! - துன்புறும்
சின்ன..சொல் எண்ணியதேன்? சிந்தை துடிதுடிக்கச்
சொன்ன..சொல் மாறியதேன் சொல்லு?

717.
உனக்கென்ன பெண்ணே உறங்குகிறாய்? கொண்ட
கணக்கென்ன நானறியேன்? கண்ணே! - குணமில்
மனமென்ன கல்லோ? வனம்வளர் முள்ளோ?
தினமென்னைக் கொல்லுவதோ தீர்ப்பு?

718.
இனிப்பார்க்க வேண்டாம்! இனிப்பேச வேண்டாம்!
சனி..பார்க்க வேண்டாம் சகியே! - இனிக்கும் 
கனி..பார்க்க வேண்டும்! கவிபாட வேண்டும்!
பனி..பார்க்க வேண்டும் பறந்து!

719.
துறந்துவிடு காதலைத் தூரமாய் எங்கோ
பறந்துவிடு பாவைநான் வாழ! - உறவை
மறந்துவிடு என்றால் மலரே எனையிங்(கு)
இறந்துவிடு என்றே இயம்பு!

720.
கொஞ்சிச் சிணுங்கும் குயின்மொழியில் என்னுடை
நெஞ்சி சிணுங்கி நெகிழ்ந்துருகும்! - வஞ்சியே!
தொட்;டுச் சிணுங்கும் செடிபோல உன்பார்வை
பட்டுச் சிணுங்குமெனைப் பார்!

(தொடரும்)


2 commentaires:

  1. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. ஐயா... வலிமிகு மனதினோடு வரும் உணர்வினை நம்மொழியில் எப்படியெல்லாம் பகிரலாமென இங்கு உங்கள் பாக்களால் பயின்றேன்...:).
    ரசிக்கின்றேன்...உங்கள் தயவால் பயில்கின்றேன்.
    மிக்க நன்றி ஐயா!
    என் வணக்கமும் வாழ்த்துக்களும்!

    கொஞ்சிய மொழி கோபம்மிகக் கொண்டதென
    விஞ்சிய பாக்களால் விளம்பியது கண்டேன்
    துஞ்சிய மனதோடு துளைத்திடும் கூர்வரிகள்
    அஞ்சிய நிலைதருமென அறிந்திட்டேன் நன்கே...

    RépondreSupprimer