மொழிஞாயிறு
ஞா. தேவநேயப் பாவாணா்
தமிழ்வாழ்த்து
பரவுந்
தமிழைப் பாங்குடனே
படித்துப் படித்துச் சுவைத்ததனால்
திருவுங்
கலையுந் திகழ்கின்ற
தேனாம் கவிதை தீட்டிவரும்
மரபுக்
கவிஞன் பாரதிநான்
வணங்கும் இனிய வண்டமிழே!
விரவும்
அன்பால் எனைநாடி
மேலாம் பாக்கள் தருவாயே!
தலைவர்
க. தமிழமல்லன்
கனிகள்
கொண்ட சுவைகளையே
கலந்து பேசும் கலைமகனே!
பணிவும்
கனிவும் ஒருசேரக்
காணும் இனிய பெருமகனே!
பணிகள்
புரிந்தே தமிழ்மொழியைப்
பாங்காய்க் காக்கும் தமிழ்மகனே!
அணிகள்
தந்தாய் தமிழுக்கே
அடியேன் உன்னைத் தொழுகின்றேன்!
அவையடக்கம்
மதுவும்
பாலும் கலந்ததுபோல்
மணக்கும் தமிழில் திளைத்தோரே!
எதுவும்
அறியா நிலையினிலே
எழுதி வந்தேன் சிலபாக்கள்!
இதுவும்
கவியோ? என்றிங்கே
என்னை நீங்கள் வெறுக்காதீர்!
உதவும்
கருணை உளத்தோடே
உயர்வாய் எண்ணிப் போற்றிடுவீர்!
பாவாணா்
பாவாணர்
படைப்பெல்லாம் தமிழ்வேலைப் பாடு!
பக்கங்கள் ஒவ்வொன்றும் தேனமிழ்தக் கூடு!
பாவாணர்
தனித்தமிழால் உயருமிந்த நாடு!
பகரும்அவர் வழிநின்றால் மிளிரும்நம் வீடு!
பாவாணர்
நற்றொண்டால் நாம்பெற்றோம் பீடு!
பைந்தமிழ்மேல் அன்னாரின் பற்றுக்கே(து) ஈடு
பாவாணர்
எழுத்தெல்லாம் மணக்கும்பூக் காடு!
பாடிடுவேன் அவர்புகழை நற்பாக்க ளோடு!
இருள்தவழும்
மடமையிலே நாட்டு மக்கள்
இருந்துழலும் துயரினையே ஓட்ட வேண்டி
அருள்தவழும்
நெல்லைதனில் வந்து தித்த
ஆற்றல்மிகு செந்தமிழின் ஞாயி றாவார்!
பொருள்தவழும்
அறிவொளியால் பொய்மை மாயப்
புவியினிலே பூந்தமிழும் பொலியக் கண்டோம்!
மருள்தவழும்
மனத்தவரின் வருத்தம் தீர்த்த
வளர்தேவ நேயரையே வாழ்த்து வோமே!
உத்திக்கும்
காட்டாகும் நூல்கள் தம்மை
உவந்தளித்த பெருமகனார் தேவ நேயர்!
தித்திக்கும்
செந்தமிழின் சீரைச் சேர்த்துக்
தெவிட்டாத பாக்களையே தீட்டித் தந்தார்!
முத்தான
தனித்தமிழை வாழ்வில் கொண்ட
மூதறிஞர் எனும்பெயரைப் பெற்ற செம்மல்!
எத்திக்கும்
தம்மொழியே ஏற்றம் கொள்ள
இனிதுழைத்த ஏந்தலையே ஏத்து வோமே!
அஞ்சாத
நெஞ்சுடையார்! தமிழ்ச்சொல் வேரை
ஆய்ந்துரைக்கும் அறிவுடையார்! எதிர்ப்பைக் கண்டு
துஞ்சாத
துணிவுடையார்! வாழ்வில் என்றும்
தூயதமிழ்ப் பற்றுடையார்! மொழியில் வந்து
நஞ்சாகக்
கலந்துவிட்ட அயலார் சொல்லை
நன்கறிந்து நீக்குதிற னுடையார்! தீமை
பஞ்சாகப்
பறந்திடவே பணிகள் செய்த
பாவாணர் பெரும்புகழைப் பாடு வோமே!
விழிகாக்கும்
இமையிரண்டும்! கட்டும் வேலி
விளைகின்ற பயிர்காக்கும்! முன்னோர் சொன்ன
வழிகாக்கும்
நல்லோரின் ஆட்சி! கூர்த்த
மதிகாக்கும் நல்லொழுக்கம்! சிரிக்கும் கன்னக்
குழிகாக்கும்
பேரழுகு! கொள்ளைக் குன்றாய்க்
குலங்காக்கும் பாவாணர் தொண்டும் இங்கே
மொழிகாக்கும்!
தமிழர்பண் பாட்டைக் காக்கும்!
மொய்ம்புடைய நெறிகாக்கும் வெற்றி யோடே!
ஏடுதிகழ்
பன்மொழிகள் இருந்திட் டாலும்
இன்றமிழ்போல் அரும்தொன்மை கண்ட துண்டோ?
நாடுபுகழ்
ஆய்வாளர் தோன்றி னாலும்
நற்றமிழை ஆய்ந்தவர்கள் அவர்போல் யாரோ?
காடுகமழ்
பூந்தமிழைத் தருவார் பல்லோர்!
கலப்பில்லாத் தமிழ்தருவார் தேவ நேயர்!
நீடுபுகழ்
ஆய்வறிஞர் பாவா ணர்தாம்!
நீள்புவியில் அவர்சிறப்பைப் பரப்பு வோமே!
பாவாணா் விழா - 07.02.1995
பழந்தமிழ் பாட்டு! பாவாணர் புகழ் பகர்ந்திட கேட்டு, மூவா முத்தமிழின் சுவை, கண்டேன்!கொண்டேன்! உண்டேன்! வாழ்த்துக்கள்! தாசரே!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தனித்தமிழ் ஞாயிறு! தமிழாய்[வு] அரிமா!
கனித்தமிழ்ப் பாவாணா் காண்!
ஐயா...
RépondreSupprimerபாங்கான தமிழதில் பாவாணர் புகழ்சொன்ன பாவதைத்தான் கண்டு மனம்மிக மகிழ்வானதே...
பாவாணர்ஐயாவின் அரியபல பணிச்சிறப்புகளைக் பகிர்ந்தீர்கள். மிக்க நன்றி ஐயா!
த ம.3
Supprimerவணக்கம்!
பாவாணா் பைந்தமிழைப் பாடிக் களித்திட்டால்
நாவாணா் ஆகிடுவோம் நாம்!
ஏடுதிகழ் பன்மொழிகள் இருந்திட் டாலும்
RépondreSupprimerஇன்றமிழ்போல் அரும்தொன்மை கண்ட துண்டோ?//
யாரால் இந்த கேள்வியை எழுப்ப முடியும் உங்களால் மட்டுமே முடியும்
Supprimerவணக்கம்!
முன்னே பிறந்திட்ட முத்தமிழின் நுால்யாவும்
என்னே இனிமை இசைத்து!
பாவாணர் அவர்களில் சிறப்பை வரிகளில் கண்டு மகிழ்ந்தேன்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மொழிஞாயி[று] ஈந்த முதுமொழி யாவும்
வழியாகி வந்த வலம்!
பன்மொழி அறிஞர், மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் தமிழுக்கு செய்திருக்கும் அளப்பரிய தொண்டுகளை, கவிதை வரிகளில் பாங்குற அமைத்துள்ளீர்கள் அய்யா நன்றி
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பன்மொழி வல்லார்! படா்புகழ்ப் பாவாணா்
நன்மொழி நாடல் நலம்!
\\பாவாணர் நற்றொண்டால் நாம்பெற்றோம் பீடு!
RépondreSupprimerபைந்தமிழ்மேல் அன்னாரின் பற்றுக்கே(து) ஈடு
பாவாணர் எழுத்தெல்லாம் மணக்கும்பூக் காடு!
பாடிடுவேன் அவர்புகழை நற்பாக்க ளோடு!\\
பூக்காட்டில் பறித்த புதுமலர்களின் நறுமணத்தை நாங்களும் நுகர பாக்களாய் எமக்களித்தீர், பாவாணரின் பெருமையை பாமரரும் அறியும் வண்ணம் அழகாய் எடுத்துரைத்தீர்.
\\இதுவும் கவியோ? என்றிங்கே
என்னை நீங்கள் வெறுக்காதீர்!\\
இதுவன்றோ கவியென்று வியக்கிறோம் ஐயா. இனிய பாராட்டுகள் தங்களுக்கு.
Supprimerவணக்கம்!
பாக்காட்டில் நெஞ்சென்றிப் பாவாணா் பாடியவைப்
பூக்காட்டில் காணும் பொலிவு!
பாவாணர் அய்யாவை அழகுத் தமிழில் புகழ்ந்துள்ளீர்கள் அய்யா!!!
RépondreSupprimerஅழகு...
Supprimerவணக்கம்
இருள்நீக்கி இன்புற ஈடிலாப் பாவாணா்!
பொருள்தேக்கித் தந்தார் புகழ்
மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள் பெருமை சொல்லும், தங்களது பாமாலை, பூக்குவியலாய் வழியெங்கும் மணம் பரப்புகிறது.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாவாணா் பொன்னடியைப் பாடி மகிழ்ந்திடுவோம்!
பூ...வானம் துாவும்! பொலிந்து!
t:m:6
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஈடிலா நுால்களை ஈந்த தமிழச்செல்வா்!
கோடி மலா்களின் கூட்டு!