காதல் ஆயிரம் [பகுதி - 79]
766.
சின்னஞ் சிறிய உதவிகளைச் செய்துனக்கு
என்றன் உளமினிக்கும்! இன்கவியே! - உன்னினைவு
தன்னந் தனிமையிலே தாக்கி எனைப்பிழியும்!
கன்னஞ் சிவக்கும் கனிந்து!
767.
அன்பே!வா! உன்னை அணைத்து மகிழ்ந்திடவே!
இன்றேன்!தா! காதல் இயற்றிடவே! - துன்பேன்?
படரும் கொடியெனப் பற்றித் தழைத்திடுக!
தொடரும் இனிமை துளிர்த்து!
768.
வாடி அருகினிலே! வண்ண மதுக்குடத்தைத்
தாடி சுவைத்திடவே! தங்கமே! - கோடிமுறை
முத்தங்கள் இட்டாலும் மோகம் பெருகுதடி!
சித்தம்..கள் உண்டதுபோல் சீா்த்து!
769.
அன்பே அமுதே! அருந்தமிழே! எந்நொடியும்
இன்பே அளித்த இளங்கொடியே! - உன்பேரை
ஏட்டில் எழுதிப் படித்தேன்! இதயமெனும்
கூட்டில் வடித்தேன் குளிர்ந்து!
770.
வண்ண இதழில் வழியும் மதுஅள்ளி
உண்ண துடிக்கும் உயிர்உணா்வு! - கண்மணியே!
எண்ணம் பெருகி எனைவாட்டும்! ஏக்கத்தை
நண்ணும் இரவை நகா்த்து!
(தொடரும்)
ஏக்கம் -
RépondreSupprimerகொள்ள செய்திடீங்க அய்யா..!.
Supprimerவணக்கம்!
ஏக்கம் கொடுத்த எழில்அவளைப் நான்பாடித்
துாக்கம் தொலைத்துத் துயருற்றேன்! - பூக்குமென்
ஆக்கம் அனைத்தும் அவள்கொண்ட சீருரைக்கும்!
ஊக்கம் உயரும் ஒளிர்ந்து!
இதழோடு இதழ் வைத்து
RépondreSupprimerஇன்பத்தேனை உறிஞ்ச ஆசை
பொழுதோடு எனக்களிக்க
புறப்படுவோர் யாருமுண்டோ
Supprimerவணக்கம்!
என்றன் கவிதை இயம்புகின்ற ஆசைகள்
இன்றேன் அளிக்கும்! இசைகொடுக்கும்! - அன்பால்
விளைந்த கனிபடைக்கும்! வீழ்ந்துழலும் துன்பம்
களைந்த நிலைபடைக்கும் காண்!
மயக்க வைக்கிறது வரிகளும்...!
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
மயக்கம் கொடுக்கும் மலரவள்! நெஞ்சின்
இயக்கம் கொடுக்கும் இளையவள்! இன்பக்
கலைமகள்! என்றன் கவிமகள்! அன்னாள்
அலைமகள் கொண்ட அழகு!
மிக மிக அருமை
RépondreSupprimerகவிதை படிக்கப் படிக்க
கள்ளுண்ட மயக்கம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
கள்ளுண்ட போதையிலே காவியம் தீட்டுகிறேன்!
உள்ளுண்ட மோகம் உயா்ந்திடவே! - துள்ளுந்து
செல்வதுபோல் செல்லுமென் நெஞ்சம்! அவள்அழகு
கொல்வதுபோல் கொஞ்சும் குவிந்து!
tha.ma 5
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழ்மன நங்கையைத் தாலாட்டும் வண்ணம்
அமிழ்த மணத்தை அளித்தீா்! - இமைப்பொழுதும்
என்னை அகலா திருப்பவளைப் பாடுகிறேன்!
முன்னை அருளால் மொழிந்து!
ஐயா...
RépondreSupprimerபாக்கள் மொட்டவிழ்ந்து மோக மணம்வீசும் பட்டுவண்ணப் பூக்களாய் உள்ளதே...
என் வணக்கமும் வாழ்த்துக்களும்...
சிந்திடும் தேனமுது செவ்விதழில் என்றுரைத்து
முந்தி முகிழ்ந்திடும் முத்தான சொல்லெடுத்து
செந்தமிழின் சீர்தன்னை சிறப்பாக திரட்டியிங்கு
பந்தியில் பாயசமாய் படைத்திட்ட பாஇனிமை...
Supprimerவணக்கம்!
பா..இனிமை! பார்வை தரும்இனிமை! பாவையவள்
நா..இனிமை! நல்ல தமிழினிமை! - கா..இனிமை!
என்னுயிர்க் காதலி வாழும் இடம்இனிமை!
பொன்னுயிர் என்பேன் புகழ்ந்து!
வெண்பா அரசே வாழ்க! முத்துக்கள் அனைத்தும் தமிழின் சொத்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வெண்பா அரசன்யான் வீழ்ந்த இடம்சொல்வேன்!
நண்பா பிறரிடம் நல்காதே! - பெண்ணவளின்
வண்ண விழிவிரித்த பொன்வலையில் சிக்குண்டேன்!
நண்ணும் உறக்கம் நலிந்து!
முண்டு!
கவிதை சுவையூட்டுகின்றது ஐயா!தொடருங்கள் தொடர்கின்றேன்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கன்னி அழகே கவிக்குச் சுவையுயூட்டும்!
பொன்னி நதிபோல் பொழில்ஊட்டும்! - மின்னிவரும்
தேரேறித் தேவி வருங்காட்சி தேனுாட்டும்!
சீரேறி என்னுள் சிறந்து!
RépondreSupprimerவலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!
நாளும் வருகைதரும் நல்லோரே! உம்மனத்துள்
மூளும் கருத்தை மொழிகின்றீா்! - தேளெனக்
கொட்டும் அவள்விழிமேல் கட்டும் கவிமலா்கள்
சொட்டும் அமுதை சுநந்து!