jeudi 11 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 75]
காதல் ஆயிரம் [பகுதி - 75]


741.
ஏக்கத்தைத் தீட்டி இதயம் புகுந்தென்றன்
தூக்கத்தைப் போக்கித் துயர்தந்தீர் - ஊக்கத்தை
நானிழந்து நிற்கின்றேன்! நற்கவியே! என்னிதழைத்
தேனருந்தும் வண்டாகத் தீண்டு!

742.
பார்க்கும் திசையெல்லாம் பாவையுன் பொன்முகம்
சேர்க்கும் உணர்வை! செழுந்தேனை! - வேர்த்தே
உழைக்கின்ற நற்பகலில் உன்றன் நினைவோ
அழைக்கின்ற அன்பின் அணைப்பு!

743.
இன்ப உலகத்தின் எல்லை தொடக்கம்!
அன்பின் பதிப்பு!  சுவைஅமுது! - புன்னகைப்
பூவின் குளியல்! புதையல்! தொடர்முத்தம்
பாவின் படையலெனப் பாடு!

744.
முத்தத்தால் என்றன் முகம்சிவக்க! கால்தண்டைச்
சத்தத்தால் ஆசை சலசலக்க! - முத்தாடும்
காதோரம் கவ்விக் கதைபடிக்க! இன்பத்தைத்
தீதோரம் இன்றித் திரட்டு!

745.
கண்ணிலா காதல்? கருத்திலா? நீ..தீட்டும்
பண்ணிலா? தோற்றப் படைப்பிலா? - பெண்ணழகே
எண்ணிலா முத்தங்கள் ஈந்த களிப்பிலா?
விண்ணிலா வா!வா! விரைந்து!

746.
என்னவோ செய்கிறது! ஏக்கத்தால் இன்மேனி
பொன்னெனவே மின்னிப் பொலிகிறது! - என்கண்கள் 
காண்பெல்லாம் உன்னுருவக் காட்சி! இனியகவி
மாண்பெல்லாம் பொங்கும் மணந்து!

747.
மேகம் கருக்குதடி! மேற்றிசை மின்னலிலே
தேகம் மினுக்குதடி! தேன்மொழியே! - மோகத்தின்
வேகம் பெருகுதடி! வேகும் மனத்துள்ளே 
தாகம் பெருகுதடி தாழ்ந்து!

748.
பூத்துக் குலுங்கும் புதுமலர் சோலையிலே
காத்துக் கிடந்தேன் கவிபாடி! - கூத்தாடும்
என்மன எண்ணங்கள்! என்னவளே நீ..வந்து
பொன்மன வண்ணங்கள் போடு!

749.
இறுக்கி அணைத்திடுவாள்! இன்னிதழ்கள் ஒட்டிச்
சிறுக்கி சிணுங்கிடுவாள் சேர்ந்தே! - உறுதியாய்க்
காற்றும் புகுந்திடுமோ? காதல் அமுதத்தை
ஊற்றும் இளமை உணர்வு!

750.
எத்தனைச் சென்மம் எடுத்தாடும் நீ..வேண்டும்!
அத்தனைச் சென்மம் அழகுறவே! - சித்திரமே
கூடி மகிழ்ந்த குளிர்ச்சியை எப்பிறப்பும்
பாடி மகிழ்வோம் பறந்து!

(தொடரும்)

4 commentaires:

 1. பூத்துக் குலுங்குகிறது காதல்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  RépondreSupprimer
 2. காலையில் தேநீர் அருந்துவதுபோல எப்போதும் உங்கள் கவிதையை படிப்பேன்.அவசர வேளையில் கருத்தோ ஓட்டுபோடவோ முடிவதில்லை.புலவர்,ராமானுசம்,நீங்களும் இன்றும் வலைபக்கத்தில் இலக்கிய விருந்து படைத்துவருகிரீர்கள்.உங்களைப் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படித்தே நானும் கவிதை என்ற பேரில் எழுதி வருகிறேன் .குறை இருப்பின் மன்னிக்கவும் இன்னும் நன்றாக எழுத முயற்சிப்பேன்

  RépondreSupprimer
 3. எப்பிறப்பும் இனிக்கும் வெண்பா மாலை தந்த வள்ளலே வணங்குகிறேன்.

  RépondreSupprimer
 4. ஐயா... வணக்கம்!

  தாகம் மேவுதே தமிழ்மீது எமக்கும்
  வேகம் கூட்டுதே விந்தைமிகு சொற்களால்
  பாவும் கனக்குதே பாகாய் இனிக்குதே
  யாவும் சிறக்குதே நல்ல கவியாப்பிலே...

  RépondreSupprimer