mardi 30 juillet 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை
  
நாதவே பார்..வான்தேர் போலென்தேர் சீரடைய,
மாதவே பார்..தமிழ் மாண்தொகையின் - வேதவேர்
சேர்..காவே! உன்சேய்நான் பொன்சேர் தகைதர,
வார்..பாவே தண்சீர் வடித்து!
  
தேவனே! தேர்சேர்ந்து சீர்த்தமிழ் மேவுக!
காவலே உள்ள கருணையே! - ஆவ
லுறுங்கவி யோக வளமே..சேர்! தேனே!
வறுமை யழியவே வா!
  
படிக்கும் முறை:

முதல் வெண்பா, தேரின் 1 என்ற குறியிட்ட இடத்தில் நேரே படித்துக் கீழிறங்கி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்து இறுதியில் தேரின் அச்சுக்குச் சென்று 'சே' அங்கிருந்து வலது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து, மீண்டும் அச்சுக்கு வந்து, அங்கிருந்து இடது சக்கரத்தைச் சுற்றிச் சக்கர மையம் அடைந்து மீண்டும் அச்சியின் மையம் 'சே' வந்து நேரே மேலேறி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று அங்குள்ள துாணேறித் துாணின் உச்சியில் நிறைவடையும்.
  
இரண்டாம் வெண்பா 2 என்ற குறியிட்ட இடத்தில் தொடங்கி நேரே படித்து மேலேறி நேராகப் படித்து இவ்வாறு வலது இடதுமாக மாறி மாறிப் படித்துத் தேரின் உச்சியை அடைந்து நடுவே இறங்கி வெண்பா தொடங்கிப் பக்கம் சென்று துாணில் இறங்கி நிறைவடையும்.
  
பாடல் கருத்துரை:
  
வெண்பா 1
  
வானில் செல்லும் சூரியத் தேர்போன்று என்னுடைய தேரும் சிறப்படைய தலைவனே என்னைப் பாராய். தாயானவனே! என்னைப் பாராய்! தமிழின் தொன்மைான ஆழமான கருத்துக்களை என் பாடலில் சோலையாகச் சேர்த்திடுவாய்! உன் மகன் பொன்போல் உயர்வடைய பாடும் பாடலில் தண்மையுடைய சீர்களை அளித்திடுவாய்.
  
வெண்பா 2
  
இறைவனே! நான் பாடும் தேரில் அமர்ந்து சிறப்புடைய தமிழை விரும்புகவே. என்னைக் காவலுறும் கருணையே! ஆசையுடன் பாடும் செய்யுளில் உயர்ந்த வளங்களை அருளுகவே. இனிக்கின்ற தேனே. என் வறுமையை போக்க வருகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire