mercredi 18 janvier 2017

மும்மண்டில வெண்பா!




வெண்பா மேடை - 36
  
மும்மண்டில வெண்பா!

1.
கண்ணா! கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை
என்..நா மடல்மின்ன என்றும்..தா! - மன்னா!
சுடர்மிகு தொன்னெறியும் சூட்டு! சுவைகள்
நடமிடும் நன்னெறியும் நாட்டு!

கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை என்..நா
மடல்மின்ன என்றும்..தா! மன்னா! - சுடர்மிகு
தொன்னெறியும் சூட்டு! சுவைகள் நடமிடும்
நன்னெறியும் நாட்டு..கண் ணா!

கன்னல் கருத்துகளை என்..நா மடல்மின்ன
என்றும்..தா! மன்னா! சுடர்மிகு - தொன்னெறியும் 
சூட்டு! சுவைகள் நடமிடும் நன்னெறியும் 
நாட்டு!..கண் ணா!கடல்வண் ணா!

2.
பொங்குமலர் பூத்தவனம்! பொன்னழகு போந்தவொளி!
இங்குநலம் ஈர்த்தருளும் இன்றமிழே!! - எங்குமினிக்
காத்திடும் கன்னல்நெறி! கங்குகரை காணாமல்
சேர்த்திடும் புண்ணியச் சீர்!

பூத்தவனம்! பொன்னழகு போந்தவொளி! இங்குநலம்
ஈர்த்தருளும் இன்றமிழே! எங்குமினிக் - காத்திடும்
கன்னல்நெறி! கங்குகரை காணாமல் சேர்த்திடும்
புண்ணியச்சீர் பொங்கு மலர்!

பொன்னழகு போந்தவொளி! இங்குநலம் ஈர்த்தருளும்
இன்றமிழே! எங்குமினிக் காத்திடும் - கன்னல்நெறி!
கங்குகரை காணாமல் சேர்த்திடும் புண்ணியச்சீர்
பொங்குமலர் பூத்த வனம்!

இலக்கண விளக்கம்
  
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து. முதல் சீரை இரண்டாம் வெண்பாவின் ஈற்று சீராகவும், இரண்டாம் சீரை மூன்றாம் வெண்பாவின் ஈற்றுச் சீராகவும் வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்! [ மூன்று வெண்பாவிலும் எதுகையும், மோனையும், பொருள் சிறப்பும் அமைய வேண்டும்]
  
மும்மண்டிலத்தை எளிதாகப் பாடுவதற்கான வழிகள்.
  
பொதுவாக வெண்பாவில் அமையும் எதுகை, மோனை இலக்கணத்துடன் கீழ்வரும் நெறிகள் அவ்வெண்பாவில் அமையவேண்டும்.
  
வெண்பாவின் முதல் இரண்டு சீர்களில் ஈற்றசை நாள், மலர், காசு, பிறப்பு என்று வருமாறு அமையவேண்டும் [வண்டுக்கண், பூத்தவனம், என்னாடு, தேன்கொடுத்து, கண்மணியே]
  
முதலடியை முற்றும் மோனையாக அமைத்தல் வேண்டும். [கண்ணா! கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை]
  
இரண்டாம் அடியில் இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மோனை பெறவேண்டும். [என்..நா மடல்மின்ன என்றும்..தா! - மன்னா!]
  
முன்றாம் அடியை முற்றும் மோனையாக அமைக்க வேண்டும். [சுடர்மிகு தொன்னெறியும் சூட்டு! சுவைகள்]
  
நான்காம் அடியின் இரண்டாம் சீர், முதல் அடியின் முதல் சீரின் மோனை பெற வேண்டும். [ எடுத்துக்காட்டு இரண்டாம் மும்மண்டிலத்தில் பொங்கு, புண்ணிய சீர்களைக் காண்க]
  
முதல் அடியின் இரண்டாம் சீரும் இரண்டாம் அடியின் இரண்டாம் சீரும் மூன்றாம் அடியின் முதல் சீரும் ஓரெதுகை பெற வேண்டும். [ முதல் மும்மண்டிலத்தில் கடல்வண்ணா, மடல்மின்ன, சுடர்மிகு]
  
முதல் அடியின் மூன்றாம் சீரும், இரண்டாம் அடியின் முன்றாம் சீரும், மூன்றாம் அடியின் இரண்டாம் சீரும், நான்காம் அடியின் இரண்டாம் சீரும் ஓரெதுகை பெறவேண்டும். [முதல் மும்மண்டிலத்தில் கன்னல், என்றும்தா, தொன்னெறியும், நன்னெறியும் காண்க]
  
மூன்றாம் அடியின் மூன்றாம் சீர், முதல் அடியின் முதல் சீரின் எதுகை பெற வேண்டும். [இரண்டாம் மும்மண்டிலத்தில் பொங்குமலர், கங்குகரைச் சீர்களைக் காண்க] அல்லது மூன்றாம் அடியின் மூன்றாம் சீரும் நான்காம் அடியின் மூன்றாம் சீரும் எதுகை பெற வேண்டும். [முதல் மும்மண்டிலத்தில் சூட்டு, நாட்டுச் சீர்களைக் காண்க]
  
மோனை அமையா அடிகளில் எதுகை அமையலாம்.[ கண்டுச்சொல் ஊன்புடைக்கும் எண்ணமிகும் ஒண்மதியே!, இவ்வடியில் மோனை அமையவில்லை, மோனை வருமிடத்தில் எதுகை வந்துள்ளதைக் காண்க]
  
மும்மண்டில வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.01.2017

2 commentaires: