samedi 7 janvier 2017

அம்போதரங்க ஒத்தாழிசை


அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
[ஒரு தரவு + மூன்று தாழிசை + அம்போதரங்கம் + தனிச்சொல் + சுரிதகம்]
  
கண்ணா வாராய்!
  
தரவு

சூடியணிந்த சுடர்க்கொடிபோல் சுவையொழுகப் படர்தமிழில்
பாடியணிந்த கவிகேட்டுப் பரமா..உன் விழிதிறவாய்!
கூடிமகிழ்ந் தெனைத்தழுவக் குதித்திங்கு வரவேண்டும்!
ஆடிமகிழ்ந் தெனையணைத்து அருளமுதைத் தரவேண்டும்!
கோடிமலர் குவித்தாலும் குளிர்முகத்துக் கிணையாமோ?
வாடிமனம் கிடக்கின்றேன்! வழிமூடித் தடுக்காதே!
ஓடிவரும் உணர்வலையை உசுப்பிவிடும் மணிமார்பா!
நாடிவரும் ஆசைகளை நானுரைக்க மொழியேது?
  
தாழிசை
கோதையவள் மயங்கிடவே குழலுாதி இசைத்தவனே!
சீதையவள் மயங்கிடவே சிவவில்லை ஒடித்தவனே!
போதை..இவள் அடைந்திடவே பொழுதெல்லாம் சிரிப்பவனே!
பேதையிவள் தவிக்கின்றேன் பெருங்கருணை புரிவாயே! [1]
  
பல்லாண்டு கவிகேட்டுப் பனிபோன்று குளிர்ந்தவனே!
வில்லாண்டு வினைமுடித்து வியன்புகழை அடைந்தவனே!
கல்லாண்டு கிடந்தவளைக் கழிந்தெழவே நடந்தவனே!
சொல்லாண்டு தொழுகின்றேன்! சுடர்க்கருணை அருள்வாயே! [2]
  
ஆழ்வாரின் தமிழமுதை அனுதினமும் சுவைப்பவனே!
வீழ்வாரின் குறைதீர்த்து விழிநீரைத் துடைப்பவனே!
தாழ்வாரின் தலைமீது தகையடியைப் பதிப்பவனே!
கூழ்போன்று கொதிக்கின்றேன்! குளிர்கருணை பொழிவாயே! [3]
  
அம்போதரங்கம் பேரெண் [நாற்சீர் ஈரடி இரண்டு]
தாயுரைத்த சொற்கேட்டுத் தந்தைவரம் காத்திட்ட
சேயுளத்துத் திருராமன் செயலெண்ணிப் போற்றுகிறேன்! [1]
கங்கையெனும் துறையடைந்து கருங்குகனின் அன்புண்டு
தங்கமனத் தம்பியெனத் தாங்கியதைச் சாற்றுகிறேன்! [2]
  
அம்போதரங்கம் அளவெண் [நாற்சீர் ஓரடி நான்கு]
வாலிக்கு வீடளித்த வள்ளல் நீயே! [1]
வண்வீடன் தனையணைத்த மல்லன் நீயே! [2]
மேலிருக்கும் வீட்டுக்கு வேந்தன் நீயே! [3]
வேண்டிவரும் அன்பருக்குத் தோழன் நீயே! [4]
  
அம்போதரங்கம் இடையெண் [முச்சீர் ஓரடி எட்டு]
அலைதுயிலும் பேரழகா போற்றி! [1]
இலைதுயிலும் ஓரழகா போற்றி! [2]
மலைதுாக்கி நிரைகாத்தாய் போற்றி! [3]
சிலைதுாக்கி அறங்காத்தாய் போற்றி! [4]
மண்ணளந்த மாயவனே போற்றி! [5]
பண்ணளந்த மாதவனே போற்றி! [6]
விண்ணளந்த வேங்கடனே போற்றி! [7]
தண்ணளந்த தயாநிதியே போற்றி! [8]
  
அம்போதரங்கம் சிற்றெண் [இருசீர் ஓரடி பதினாறு]
கண்ணா போற்றி! [1]
வண்ணா போற்றி! [2]
மன்னா போற்றி! [3]
பொன்னா போற்றி! [4]
அன்பே போற்றி! [5]
அமுதே போற்றி! [6]
இன்பே போற்றி! [7]
எழிலே போற்றி! [8]
அருளே போற்றி! [9]
அறமே போற்றி! [10]
திருவே போற்றி! [11]
திறமே போற்றி! [12]
கடலே போற்றி! [13]
கதிரே போற்றி! [14]
உடலே போற்றி! [15]
உயிரே போற்றி! [16]
  
என்றுரைத்து [தனிச்சொல்]
  
சுரிதகம்
  
உன்னைத் தொழுதே உவந்து கிடக்கும்
என்னை அணைத்தே இன்புற வாராய்!
திருமலைச் செல்வா! அருங்கலை வாணா!
பெருநிலை தந்து பேணிட வாராய்!
கன்னி பாடும் கவிகளைக் கேட்டுப்
பின்னிப் பிணைந்து பேசிட வாராய்!
யானை குரல்கேட் டெழுந்தாய்!
தேனை நிகர்குரல் தேவிக்கு அருள்கவே
  
பாட்டரசன் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.01.2017

1 commentaire:

  1. இன்னொரு பிறவி எட்ட வேண்டும் ...நான் -- இப்படியெல்லாம் எழுதப் பழக.
    வணங்குகிறேன் அய்யா

    RépondreSupprimer