dimanche 8 janvier 2017

வண்ணக ஒத்தாழிசை

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
[ஒரு தரவு + மூன்று தாழிசை + அராகம் + அம்போதரங்கம் + தனிச்சொல் + சுரிதகம்]
 
திருமகளே!
 
தரவு

மாலவனின் மணிமார்பில் மகிழ்ந்திருக்கும் மலர்மகளே!
காலழகின் எழிற்கண்டு கவிகோடி பிறக்குதடி!
கோலவிழி குடிகொண்டு குதித்தாடும் இருமீன்கள்
காலமெலாம் மயக்கத்தைக் கணக்கின்றிக் கொடுக்குதடி!
ஞாலத்தின் தலைமகளே! நறுந்தமிழாய் இனிப்பவளே!
ஆலத்தின் வலிமையினை அருட்பார்வை அளிக்குதடி!
சேலத்துக் கனியாகச் செயல்யாவும் சுவைத்திடவே
சீலத்தைக் குவிப்பவளே! திருமகளே! அலைமகளே!
 
தாழிசை
அரங்கனவன் அருந்திடவே அலையமுதில் பிறந்தவளே!
தரங்கமதில் அழகனுடன் தவத்துயிலில் அமர்ந்தவளே!
சுரங்கமெனச் சுடர்ச்செல்வம் சுரக்கின்ற உயர்மகளே!
சரணடைந்தேன் உனதடியைத் தயவளித்து நலம்புரிவாய்! [1]
 
காட்டினிலே திருராமன் கருத்தேந்தி நடந்தவளே!
நாட்டினிலே அடியவர்கள் நலங்காணச் சிரித்தவளே!
வீட்டினிலே பெருஞ்செல்வம் விளைந்தாடச் செழித்தவளே!
பாட்டினிலே உனைத்தொழுதேன்! பழிபோக்கி அருள்புரிவாய்! [2]
 
குழல்மீட்டும் திருக்கண்ணன் குழல்தழுவி மகிழ்ந்தானே!
பொழில்கூட்டும் மதுவருந்திப் போதையினை அடைந்தானே!
எழில்கூட்டும் இளையவளே! எனைக்காக்கும் இறையவளே!
நிழல்ஊட்டும் இடமளிப்பாய்! நெடும்புகழாம் வரமளிப்பாய்! [3]
 
அராகம்!
திருவுனை விழைமனம் பெருநிலை அடையுமே!
தினைதரும் சுவையுடன் திறம்பல அணியுமே! [1]
அருளுனை விழைமனம் அணியென மிளிருமே!
அமுதென வரும்மொழி அழகுற ஒலிருமே! [2]
பொருளுனை விழைமனம் புகழ்வழி புனையுமே!
புலவரின் பொலியுளம் புவிநலம் பொழியுமே! [3]
தெருளுனை விழைமனம் வருந்துயர் ஒழியுமே!
திசையுறும் வகையினில் திகழ்நலம் பெருகுமே! [4]
 
அம்போதரங்கம் பேரெண் [நாற்சீர் ஈரடி இரண்டு]
அணிமணிகள் பூண்டொளிரும் அழகொளிரும் உன்னுருவை
அகமேந்திக் களிக்கின்ற அடியவனைக் காத்திடுவாய்! [1]
பிணிவழிகள் நாடாமல் பிழைவழிகள் சேராமல்
பிறவியெனும் துயர்களைந்து பீடுநிலை அளித்திடுவாய்! [2]
 
அம்போதரங்கம் அளவெண் [நாற்சீர் ஓரடி நான்கு]
தண்பார்வைத் தளிர்கொடியே! தாமரைமேல் ஒளிர்பவளே! [1]
உன்பார்வை பட்டவுடன் என்பாவம் தீருமடி! [2]
வன்பார்வை கொண்டவெனைப் பொன்பார்வை மேவுமடி! [3]
புண்பார்வை எண்ணங்கள் புலம்நீங்கி ஓடுமடி! [4]
 
அம்போதரங்கம் இடையெண் [முச்சீர் ஓரடி எட்டு]
அடியவர்க்கு அருள்கின்ற கைப்போற்றி! [1]
அன்பமுதைப் பொழிகின்ற வாய்போற்றி! [2]
விடியலென ஒளிகின்ற விழிபோற்றி! [3]
விரிந்தமலர் மணக்கின்ற மனம்போற்றி! [4]
கருமேகம் குடிகொண்ட குழல்போற்றி! [5]
கனிமேவும் சுவைகொண்ட முகம்போற்றி! [6]
ஒருபொழுதும் எனைமறவாக் குணம்போற்றி! [7]
ஒப்பில்லாத் திருவடியின் எழில்போற்றி! [8]
 
அம்போதரங்கம் சிற்றெண் [இருசீர் ஓரடி பதினாறு]
பொற்கொடி போற்றி! [1]
பூவல்லி போற்றி! [2]
பொற்பொளி போற்றி! [3]
புகழ்நாச்சி போற்றி! [4]
அலைமகள் போற்றி! [5]
அருள்மகள் போற்றி! [6]
மலர்மகள் போற்றி! [7]
மதிமகள் போற்றி! [8]
மண்மகள் போற்றி! [9]
விண்மகள் போற்றி! [10]
பொன்மகள் போற்றி! [11]
இன்மகள் போற்றி! [12]
செண்பகம் போற்றி! [13]
அன்பகம் போற்றி! [14]
தண்ணகம் போற்றி! [15]
பண்ணகம் போற்றி! [16]
 
தாயே! [தனிச்சொல்]
 
சுரிதகம்
பலபல பிறவுகள் பற்றி இழிந்தேன்!
நலமெதும் இன்றி உளமிருள் கொண்டேன்!
துன்பம் தொடரத் துவண்டு கிடந்தேன்!
இன்பம் இன்றி இதுவரை நொந்தேன்!
இந்தப் பிறப்பில் வந்து பிடித்தேன்
சிந்தை தரித்தேன் செல்வியே உன்னை!
திருமலைத் தாயே! தேனே!
ஒருமுறை என்னைத் திருவிழி காண்கவே!
 
பாட்டரசன் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.01.2017

1 commentaire: