vendredi 27 janvier 2017

கேட்டலும் கிளத்தலும்


  
ஐயா வணக்கம்!
  
நான்கு வகைப் பாக்களின் ஓசைகளைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
  
சுமதி நடராசன் அன்பரசி பிரான்சு

--------------------------------------------------------------------------------------------------------------------------
  
பாட்டின் ஓசை இலக்கண விளக்கம்
  
வெண்பா செப்பல் ஓசை பெறும். ஆசிரியப்பா அகவல் ஓசை பெறும். கலிப்பா துள்ளல் ஓசை பெறும். வஞ்சிப்பா துாங்கல் ஓசை பெறும்.
  
1.
வெண்பாவின் செப்பலோசை ஏந்திசைச் செப்பல், துாங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும்.
  
"ஏந்திசைச் செப்பலும் துாங்கிசைச் செப்பலும்
ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா
செப்பல் ஓசை வெண்பா ஆகும்" [ சங்க யாப்பு]
  
"ஏந்திசை வெண்சீர்! இயற்சீர் துாங்கிசை!
ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்" [தொன்னுால் விளக்கம் 221]
  
"செப்பல் இசையன வெண்பா" [யா.கலம் 57]
  
"செப்பல் ஓசையில் சிறக்கும்வெண் பாவே" [முத்து வீரியம் யாப்பு - 12]
  
"அதுதான்
ஏந்திசை துாங்கிசை ஒழுகிசை எனவொரு
மூன்ற வகைப்படும் மொழியுங் காலை" [முத்து வீரியம் யாப்பு - 13]
  
ஏந்திசைச் செப்பல்!
  
"வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு - 14]
  
வெண்பாவின் ஈற்று வாய்பாட்டுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் அனைத்தும் காய்ச்சீராக அமைவது ஏந்திசைச் செப்பல் ஆகும்.
  
எடு.கா
மண்ணழகு பூத்தாடும்! மாண்பழகு கூத்தாடும்!
விண்ணழகு கோத்தாடும் பெண்ணழகே! - கண்ணழகு
தண்ணழகு காத்தாடும்! தண்டமிழின் சீரேந்திப்
பண்ணழகு மூத்தாடும் பார்!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
துாங்கிசைச் செப்பல்
  
"இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
துாங்கிசைச் செப்பல் என்பனார் புலவர்" [சங்க யாப்பு]
  
"இயற்சீர் வெண்டளை யான்வரும் பாவே
துாங்கிசை யாமெனச் சொல்லப் படுமே" [முத்து வீரியம் யாப்பு - 15]
  
வெண்பாவின் ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் அனைத்தும் ஈரசைச் சீராக அமைவது துாங்கிசைச் செப்பல் ஆகும்.
  
எடு.கா
  
கொடியினைக் காத்த குமரனைச் சாற்றும்!
இடியினை ஏந்துரை ஆற்றும்! - கொடியெனப்
பூக்கும் புகழினைப் போற்றும்! மனமுறும்
ஆக்கம் அனைத்தும் அடைந்து!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒழுகிசைச் செப்பல்
  
"வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்" [சங்க யாப்பு]
  
"வெண்சீர் இயற்சீர் விரவி ஒழுகுவது
ஒழுகிசை என்மனார்உணர்ந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 16]
  
காய்ச்சீரும், ஈரசைச் சீரும் கலந்து அமைவது ஒழுகிசை செப்பல் ஆகும்.
  
எடு.கா
மாலை மணவீசும்! மாவழகு பாப்பேசும்!
மாலை தொழுதமனம் மாண்பேந்தும்! - மாலையிலே
பொன்னாதி கேசவனை அட்ட புயகரனை
என்னாவி சேரும் இணைந்து!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
-------------------------------------------------------------------------------------------------------------------------
  
2.
ஆசிரியப்பாவின் அகவலோசை ஏந்திசை அகவலோசை, துாங்கிசை அகவலோசை, ஒழுகிசை அகவலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும்,
நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும்,
ஆயிரு தளையும் ஒத்து ஆகிய அகவலும்,
ஏந்தல் துாங்கல் ஒழுகல் என்றிவை
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப" [யா.கா. 21 மேற்]
  
"அகவல் இசையன அகவல்" [யா.கலம். 49]
  
"அகவல் ஏந்திசை அகவல், துாங்கிசை
அகவல், ஒழுகிசை அகவல் மூவகைப்படும்" [முத்து வீரியம் யாப்பு - 30]
  
ஏந்திசை அகவலோசை!
  
"நேர் ஒன்று ஆசிரி யத்தளை யான்வரல்
நேரிசை அகவல் எனப்படும் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 31]
  
நேர் ஒன்றிய ஆசிரியத்தளையால் அமைந்த பாடல் ஏந்திசை அகவலோசை பெறும்.
  
எடு. கா
வண்ணம் காட்டும் கண்கள் கண்டேன்!
எண்ணம் சீறி விண்ணில் செல்லும்!
பாக்கள் என்னும் பூக்கள் பூக்கும்!
ஏக்கம் தீர்த்தல் எந்நாள் பெண்ணே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
துாங்கிசை அகவலோசை
  
"நிரையொன்று ஆசிரியத்தளை யான்வரல்
துாங்கிசை அகவல் எனச்சொலப் படுமே" [முத்து வீரியம் யாப்பு - 32]
  
நிரை ஒன்றிய ஆசிரியத் தளையால் அமைந்த பாடல் துாங்கிசை அகவலோசை பெறும்.
  
எடு.கா
சிரித்திடும் இதழெழில் பறித்திடும் உளத்தினை!
தரித்திடும் கனவினை! தழைத்திடும் தமிழினை!
மலைமகள் உருவினள்! அலைமகள் அருளினள்!
கலைமகள் மொழியினள்! கனிந்திடும் கவிகளே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒழுகிசை அகவலோசை
  
"இவ்விரு தளையும் பிறவும் மயங்கி
வருவது ஒழுகிசை யாம்வழுத் திடினே" [முத்து வீரியம் யாப்பு - 33]
  
நேர் ஒன்றிய ஆசிரியத்தளையும், நிரை ஒன்றிய ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து அமைந்த பாடல் ஒழுகிசை அகவலோசை பெறும்.
  
எடு.கா
  
கொத்து மலரே! கொஞ்சுங் கிளியே!
செத்துப் பிழைக்கிறேன்! செந்தேன் தருவாய்!
முத்தம் ஒன்று முகிழ்த்தால் என்ன?
சொத்துக் குறையுமா? சொல்லடி செல்லமே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]

---------------------------------------------------------------------------------------------------------------------------
  
3.
கலிப்பாவின் துள்ளலோசை ஏந்திசைத் துள்ளலோசை, அகவல் துள்ளலோசை, பிரிந்திசைத் துள்ளலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின்,
வெண்டளை தன்தளை என்றிரண்டும் இயையின்
ஒன்றிய அகவல் துள்ளலென்று ஓதுப,
தன்தளை பிறதளை என்றிவை அனைத்தும்
பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்" [பழைய இலக்கணம்]
  
"துள்ளல் ஓசை கலிஎன பொழிப" [தொல். பொ. 395]
  
"துள்ளல் இசையன கலிப்பா, மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே" [யா.கலம் - 78]
  
"துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
என மூவகைப்படும் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு - 44]
  
ஏந்திசைத் துள்ளலோசை
  
"ஏந்திசைத் துள்ளல் இயையின் கலித்தளை" [முத்து வீரியம். யா.செ. 45]
  
கலித்தளை மட்டும் வந்தால் ஏந்திசைத் துள்ளலோசை பெறும் [காய் முன் நிரை வரும்.] [புளிமாங்காயும், கருவிளங்காயும் வரும்]
  
எடு.கா
பொழிலோங்கும் திருமலையில் புகுந்தாடும் பொறிவண்டே!
எழிலோங்கும் மலர்மார்பன் இடம்சென்றே எனைச்சொல்வாய்!
வழியோங்கும் நிலையின்றி வனிதைமனம் படுந்துயரை
விழியோங்கும் அழகனிடம் விரிவாக உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
பிரிந்திசைத் துள்ளலோசை
  
"வெண்டளை தன்தளை விரவி வருவது
பிரிந்திசைத் துளலெனப் பேசப் படுமே" [முத்து வீரியம் யாப்பு 46]
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை பெறும்.
  
எடு.கா
  
பொன்மேவும் திருமலையில் பூத்தாடும் மதுமலரே!
துன்மேவும் நானுன்னைத் துாதாக விடுகின்றேன்!
மின்மேவும் பேரழகன்! விழியழகன் இடஞ்சென்றே
என்மேவும் ஆசைகளை இசையாக உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அகவல் துள்ளலோசை
  
"இவ்விரு தளையும் பிறவும் மயங்கித்
தொடருவது அகவல் துள்ளலாம் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 47]
  
கலித்தளையும், வெண்டளையும், பிற தளையும் கலந்து வருவது அகவல் துள்ளலோசை பெறும்.
  
எடு.கா
வளமார் திருமலையில் வாழ்கின்ற தீங்கனியே!
குளமார் மலரழகன் கொண்ட குடில்நாடி
அளமார் கனவுகள் ஆளும் துயரத்தை
உளமார் வகையறிந்து உண்மை உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
--------------------------------------------------------------------------------------------------------------------------
  
4.
வஞ்சிப்பாவின் துாங்கலோசை ஏந்திசைத் துாங்கலோசை, பிரிந்திசைத் துாங்கலோசை, அகவல் துாங்கலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்,
ஒன்றாத வஞ்சித் தளையே வரினும்,
என்றிவை இரண்டும் பிறவும் மயங்கினும்
ஏந்தல் அகவல் பிரிந்திசைத் துாங்கலென்று
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப" [பழைய இலக்கணம்]
  
"துாங்கல் ஓசை வஞ்சி ஆகும்" [தொல்.பொ - 369]
  
"வஞ்சிக்கு ஓசை வழங்கும் துாங்கலே" [தொன்னுால் விளக்கம் - 237]
  
"துாங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 54]
  
ஏந்திசைத் துாங்கலோசை
  
"ஒன்றிய வஞ்சித் தளையான் ஒழுகுவது
ஏந்திசைத் துாங்கல் எனப்படும் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 55]
  
ஒன்றிய வஞ்சித் தளையால் வருவது ஏந்திசைத் துாங்கலோசை ஆகும் [கனி முன் நிரை வரும்]
  
எடு.கா
புலமையின்வளம் பொலிகின்றஊர்!
கலைகளின்வளம் கமழ்கின்றஊர்!
அலைகளின்வளம் அணைக்கின்றஊர்!
குலைகளின்வளம் கொளும்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
பிரிந்திசைத் துாங்கலோசை
  
"ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது
பிரிந்திசைத் துாங்கல் எனப்பெயர் பெறுமே" [முத்து வீரியம் யாப்பு - 56]
  
ஒன்றாத வஞ்சித்தளையால் வருவது பிரிந்திசைத் துாங்கலோசை ஆகும் [ கனி முன் நேர் வரும்]
  
எடு.கா
வல்லபுலவர் வாழ்கின்றஊர்!
நல்லமறவர் சூழ்கின்றஊர்!
வெல்லமொழியர் ஆள்கின்றஊர்!
கல்விஇனியர் சீர்ப்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அகவல் துாங்கலோசை
  
" இவ்விரு தளையும் பிறவும் விரவித்
தொடருவது அகவல் துாங்கல் எனலே" [முத்து வீரியம் யாப்பு 57]
  
ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் கலந்து வருவன அகவல் துாங்கலோசை ஆகும்
  
எடு.கா
பாவேந்தரின் படைகொண்டஊர்!
நாவேந்தரின் நடைகொண்டஊர்!
காவேந்திடும் கவிகொண்டஊர்!
தேவேந்திடும் எம்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை என்று சில இலக்கணநுால் உரைக்கின்றன. அகவல் துள்ளலோசை என்றும் சில இலக்கண நுால்கள் உரைக்கின்றன. இதுபோன்றே வஞ்சியின் துாங்கலோசையில் மாறுமட்டு இலக்கணம் உரைக்கப்பட்டுள்ளது. இதைக் குறித்து உரையாசிரியர்கள் எண்ணியதாக நான் அறியவில்லை.
  
"துள்ளல் இசையன கலிப்பா, மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே" [யா.கலம் 78]
  
"துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
என மூவகைப்படும் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு 44]
  
"துாங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 54]
  
மேலுள்ள நுாற்பாக்களில் முதலில் ஏந்திசையும், இரண்டாம் நிலையில் பிரிந்திசையும், மூன்றாம் நிலையில் அகவலும் சொல்லப்பட்டுள்ளதால் இவ்வகையிலேயே ஓசையின் வகையை ஏற்றல் சிறப்பாகும்.
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை என்றும், கலித்தளையும், வெண்டளையும், பிற தளையும் கலந்து வந்தால் அகவல் துள்ளலோசை என்றும், ஒன்றாத வஞ்சித்தளை வந்தால் பிரிந்திசைத் துாங்கலோசை என்றும், ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் கலந்து வந்தால் அகவல் துாங்கலோசை என்றும் கொள்க.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.01.2017

2 commentaires: