dimanche 8 janvier 2017

மயங்கிசைக் கொச்சகம்

இயன் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
[கலிப்பாவின் ஆறு உறுப்புகள் தமக்கு விதிக்கப்பட்ட இடமும் முறையும் மயங்கியும் மிகுதியாகவும் குறைவாகவும் வரும்.]
  
கண்ணுக்குக் கோயில் கட்டுவேன்!
  
தரவு

அலகில்லா விளையாட்டை அளிக்கின்ற விழியழகே!
நலமெல்லாம் இழந்திங்கு நலியுதடி என்னெஞ்சம்!
புலமெல்லாம் அடங்காமல் பொழுதெல்லாம் அலைபாயும்!
தலமெல்லாம் வணங்குகிறேன் தளிர்கொடியே உனையடைய! [1]
  
வாயளிக்கும் மொழியழகு வளரமுதை நிகர்த்ததடி!
சேயளிக்கும் சிரிப்பழகும், சிவந்துள்ள உதட்டழகும்,
நோயளிக்கும் அறிவாயோ? நுாலிடையின் அசைவெண்ணிப்
பாயளிக்கும் கனவுகளைப் பசுங்கிளியே உணர்வாயோ? [2]
  
தாழிசை
மொழியழகு மிகுந்துவர முனைப்புடனே கவிபாட
வழியழகு பலகாட்டும் மலர்முகத்து விழியழகு! [1]
  
தேனுாறி மனந்திளைக்கத் திரண்டுவரும் ஆசைகளில்
நானுாறி உயர்வடைய நடைகாட்டும் விழியழகு! [2]
விருத்தத்தின் விருந்தாக வியனிளமை மருந்தாக
வருத்தத்தைத் துடைக்குமடி மணிமுகத்து விழியழகு! [3]
  
பெண்ணழகு படர்ந்தொளிரப் பெருமையெலாம் நிறைந்தொளிர
மண்ணழகுப் பொழிலாக மணக்குதடி விழியழகு! [4]
  
காத்திருக்கும் மனத்துக்குள் கனவுகளைக் குவித்திங்குச்
சேர்த்தணைத்து உறவாடிச் சிவக்குதடி விழியழகு! [5]
  
ஏக்கத்தை அளிக்குதடி! ஆக்கமுறத் துடிக்குதடி!
துாக்கத்தை வெறுக்குதடி துாண்டிலிடும் விழியழகு! [6]
  
அராகம்
மதுநிறை குடமடி! மனமுறு தமிழடி!
புதுமலர் மணமடி! பனிபொழி திருவிழி! [1]
புவியினில் எழிலடி! புகழ்தரும் அவையடி!
கவியுறு கருவடி! கலைகமழ் திருவிழி! [2]
உயர்வுறு வழிதரும்! உணர்வுறு மதிதரும்!
துயரறு சுடருறு சுழலுறு திருவிழி! [3]
உடலுறும் உரமிடும்! உயிருறும் ஒளிதரும்!
கடலுறு கயலிரு களிநட திருவிழி! [4]
  
தாழிசை
கண்தீட்டும் கருமைநிறம் கவியென்னைக் கவுக்குதடி!
புண்ணுாட்டிப் பொழுதெல்லாம் புரட்டியெனைப் படுத்துதடி! [1]
  
சுமைதிரண்டு அழுத்துதடி! சுவைதிரண்டு பழுக்குதடி!
இமையிரண்டும் அசைந்தழகாய் இதயத்தை இழுக்குதடி! [2]
  
வேல்கொண்டு விளையாடி விழியாட்டம் நடத்துதடி!
கோல்கொண்டு கவிமனத்தைக் குளமாகக் குழப்புதடி! [3]
  
அம்பாக எனைத்தாக்கி அணுஅணுவாய் வதைக்குதடி!
வம்பாகக் கதைபேசி வளமாக நடிக்குதடி! [4]
  
கூர்கொண்ட முனைகொண்டு குறிபார்த்தே அடிக்குதடி!
ஏர்கொண்ட முனையாக எனதுயிரைக் கிழிக்குதடி! [5]
  
வண்டாகப் பறக்குதடி! மனம்அமர்ந்து குடிக்குதடி!
திண்டாட எனைவைத்துத் தினந்தோறும் அழைக்குதடி [6]
  
[தனிச்சொல்] கண்கள்
  
[இருசீரடி அம்போதரங்கம்]
தேனும் ஆகும்!
தென்றல் ஆகும்!
வானும் ஆகும்!
வண்ணம் ஆகும்!
மானும் ஆகும்!
மதுவும் ஆகும்!
மீனும் ஆகும்!
மின்னல் ஆகும்!
வண்டும் ஆகும்!
செண்டும் ஆகும்!
கண்டும் ஆகும்!
நண்டும் ஆகும்!
புலமை ஆகும்!
புதுமை ஆகும்!
வளமை ஆகும்!
வண்மை ஆகும்!
  
[தனிச்சொல்] அதனால்
  
அன்பே உன்னிரு அழகிய விழிக்குப்
பொன்னொளிர் கோயில் புவியில் கட்டுவேன்!
காதல் மறையெனக் காவியம் தீட்டுவேன்!
மோதல் தவிர்த்து மோகம் பொழிகவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire