mercredi 23 juillet 2014

கல்வியே கண்




"கல்வியே கண்"

செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட
வெல்லும் அடலேறாய் விஞ்சிட - தொல்லுலகில்
யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல
வேண்டுமே கல்வி விளக்கு!

சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற
நீதி நிலத்தில் நிலைத்திட! - ஆதியிலே
ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற
வேண்டுமே கல்வி விதை!

கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச்
சொல்லி மகிழும் சுடர்க்குறளே! - முல்லைமலர்க்
காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும்
ஏடொளிரும் வண்ணம் இரு!

நல்லோர் திருவடியை நாடி நலமெய்த!
வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! - அல்லல்
அகன்றோட! அன்பாம் அமுதூறக் கல்வி
புகுந்தொளிர வேண்டும் புலம்!

கற்க வயதேது? கற்ற நெறியேற்று
நிற்க குறையேது? நெஞ்சுற்ற - தற்செருக்கு
விண்ணொளி கண்ட வெண்பனி போல்மறையும்!
ஒண்மதி கல்வி உடைத்து!

உண்மை ஒளியினையும் ஓங்கும் வடலூரார்
வண்மை வழியினையும் மாண்பினையும் - வெண்மை
மலரொக்கும் நெஞ்சினையும் வாய்த்துமகிழ் வெய்த
மலையொக்கும் கல்வியுடன் வாழ்!

பிறப்பொக்கும் நன்னெறியைப் பேணி உலகோர்
சிறப்பொக்கும் வாழ்வில் செழிக்க! - நிறைகல்வி
ஒன்றே உயர்மருந்தாம்! நன்றே இதைஉணர்ந்தால்   
அன்றே அமையும் அரசு!

படத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்துக்
கிடக்கும் செயலொழிய! கீர்த்தி - படைக்கும்
நிலைகாண! நீண்ட நெடும்பார்வை காண
கலைகாண கல்வியே கண்!

எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்!
கொல்ஆள் வினைக்கும் குழிபறிக்கும்! - சொல்லாலும்
தீயாலும் போகா! தெளிந்து படித்திட்டால்
ஓயா தொளிரும் உயிர்த்து!

பெருஞ்செல்வம் பேரரணிகள் பெற்றாலும், ஈடில்
அருஞ்செல்வம் கல்வி அறிக! - வருஞ்செல்வம்
குன்றிக் குறைந்திடலாம்! கற்றவை நம்முயிரோடு
ஒன்றி இருக்கும் ஒளிர்ந்து!

23.07.2014

22 commentaires:


  1. கல்வியே கண்ணென்று காட்டிய வெண்பாவில்
    அள்ளியே தந்தீா் அருந்தேனை! - துள்ளியே
    ஆடிக் களித்தோம்! அழகொளிா் செந்தமிழைக்
    சூடிக் களித்தோம் சுடா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் வெண்பாவைப்
      பாடிக் கொடுத்த பசுந்தமிழா! - நாடியே
      என்றன் கவிபடித்து ஈந்த எழுத்தெல்லாம்
      இன்றேன் அளிக்கும் எனக்கு!

      Supprimer
  2. சிறந்தொளிரும் செல்வத்தைச் சீர்தூக்கிக் காட்டி
    அறமொளிரும் வெண்பா அளித்தீர்! – சுறண்டொளிரும்
    நல்விளக்கு தந்திடும் நன்மைபோல் வாழ்க்கையின்
    நல்விளக்கம் தந்தீர் நவின்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்விளக்கு என்று நவின்றுள்ள உன்கவியைப்
      பொன்விளக்கு என்று புகல்கின்றேன்! - பன்விளக்கு
      நாட்டில் ஒளிா்ந்திடலாம்! ஞானத் திருவிளக்குஉன்
      கூட்டில் ஒளிரும் கொளுத்து!

      Supprimer
  3. http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_23.html
    வலைச்சரம் வாருங்கள் கவிஞரே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வலைச்சரத்தில் என்னை வளமாய் உரைத்த
      கலைச்சரத்தைக் காணும்என் கண்
      !

      Supprimer
  4. // எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்... //

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்
      கல்வியைக் கற்போம் கமழ்ந்து!

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா.
    தங்களின் கவித்துவ வரிகளை பல தடவை பொருள் உணர்து படித்தேன் ஐயா. இறுதியில் சொல்லி கருத்து உண்மைதான்..

    வருஞ்செல்வம்
    குன்றிக் குறைந்திடலாம்! கற்றவை நம்முயிரோடு
    ஒன்றி இருக்கும் ஒளிர்ந்து!

    பகிர்வு நன்றி ஐயா.
    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கல்வியே கண்ணென்று காட்டும் குறள்வழியில்
      செல்வோம் சிறப்போம் செழித்து!

      Supprimer
  6. வணக்கம்
    ஐயா
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்றன் வருகையில் உள்மகிழும்! அன்பேந்தி
      என்றும் கருத்தை எழுது!

      Supprimer
  7. "பெருஞ்செல்வம் பேரரணிகள் பெற்றாலும், ஈடில்
    அருஞ்செல்வம் கல்வி அறிக! " என்ற
    சிறந்த வழிகாட்டலை
    வரவேற்கிறேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஈழத்துப் பாவாணா் ஈந்தகருத்து ஆற்றலின்
      ஆழத்தைக் காட்டும் அளந்து!

      Supprimer
  8. வணக்கம் ஐயா!

    கண்ணெனப் போற்றிடக் கல்வி இருக்கவே
    மண்ணில் மலரும் மகிழ்வு!

    கல்வியே கண்னெனப் படைத்த வெண்பாக்கள்
    காலத்திற்கும் அவசியமானது ஐயா!
    மிக அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. மண்ணில் மலரும் மகிழ்வென என்னுடைய
      கண்ணில் கமழும் கவிதந்தீா்! - விண்மதியே!
      பண்ணில் சிறப்புற்ற பாவலா்போல் பாடுகிறீா்!
      எண்ணிலா இன்பம் எனக்கு!

      Supprimer
  9. கல்வியே கண் வெண்பாக்கள்
    கருத்தை ஈர்த்தன ஐயா..
    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கருத்தைக் கவரும் கவியென்று நன்றே
      பொருத்தமாய்ச் சொன்னீா் புகழ்ந்து!

      Supprimer
  10. வள்ளுவன் வகுத் தளித்த கல்வியி யம்பிடும்
    புலவர் புகழ் இடித் துரைத்து!

    புதுவை வேலு(KUZHALINNISAI.blogspot.com)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதுமைக் மனமுடைய பொங்குதமிழ் வேலு
      புதுவைக்குச் சேர்த்தார் புகழ்!

      Supprimer
  11. கற்பதற்கு வயதில்லை.....ஐயா! கற்பது என்பது பாட நூல் வழியாக மட்டும் இல்லையே! கல்வி மட்டும்தான் நம்முடன் என்றுமே துணைவரும்.! நல்ல ஒரு படிவு ஐயா!!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லா வலைகளிலும் இன்தேன் கருத்தெழுதும்
      வல்ல துளசிக்கென் வாழ்த்து!

      Supprimer