vendredi 25 juillet 2014

செய்யுள் இலக்கணம்அருளுகவே!

வெண்டளையால் வந்த அறுசீர் விருத்தம்!

அருமலை வாழும் அழகா!
     திருமலை நாதா! வணங்குகிறேன்!
பெருங்கலை வாணா! பெயர்பல
     பெற்றொளிர் வண்ணா!உன் பொன்னடிகள்
தரும்மலைச் செல்வம்! இதற்கு
     வருநிலை என்னுள் வளர்க்காதே!
ஒருநிலை யோடுனை ஒன்றி
     உயர்நிலை காண அருளுகவே!

பொருள் விளக்கம்:

அருமை நிறைந்த திருப்பதி மலையில் வாழும் அழகனே! என் தலைவனே! இந்த உலகத்தைப் படைத்துக் காக்கின்ற கலைஞனே! பற்பல வண்ணங்கள் உள்ளனபோல், எவ்வுலக மக்களும் வணங்குவதற்குப் பலபெயர்களைப் பெற்றவனே! உன்னுடைய பொன்னொளிரும் திருவடிகளைக் கண்டால் மலைபோன்று எல்லாச் செல்வமும் கிடைக்கும். இந்தச் செல்வங்களைத் தேடி வருகின்ற நிலையை எனக்குத் தரவேண்டாம்! வடலூர் வள்ளல் பெருமான் பாடிய ஒருமையுடன் நினதுதிரு மலரடியை நினைக்கின்ற நன்நிலையை போல், உன்னை மட்டுமே எண்ணி உன்னழகைப் பார்த்துப் பார்த்துக் களிப்புறும் நிலையை மட்டும் எனக்கு அருளுக.

பாட்டின் இலக்கணம்!

1. ஒவ்வொரு அடியும் வெண்டளையில் அமைய வேண்டும்.
2. அடியின் இறுதியிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை.
3. ஆறாம் சீர் காய்ச்சீராக வரவேண்டும்
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற வேண்டும்.
5. அடிதோறும் நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

25.07.2014 

24 commentaires:

 1. வணக்கம் ஐயா

  அருமையான திருமலையானின்
  அறுசீர் விருத்தம்

  இலக்கணத்தை இன்னும் சற்று விளக்க முடியுமா ஐயா..?

  நன்றி.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   உமையாள் உவந்திடவே செல்வேன் விளக்கம்
   இமைகளை மூடா திருந்து!

   Supprimer
 2. விளக்கம் மிகவும் சிறப்பு ஐயா... நன்றி...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வெண்டளை வந்த வியன்அறு சீா்விருத்தம்
   தண்டமிழ் ஓங்கும் தழைத்து!

   Supprimer
 3. வணக்கம் ஐயா!

  அருமை! மிக அருமை ஐயா!
  நன்றியுடன் வாழ்த்துக்கள்! இன்னும் தொடருங்கள்!...

  ஐயா!
  முதலில் மலைத்தே போனேன். ஆயினும் முயன்றுள்ளேன்.
  தளைதட்டுதோவெனப் பார்த்தே களைத்துவிட்டேன்.
  பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்!
  தாய் தமிழும் ஆசான் நீங்களும்தான் துணை!

  உளமதில் என்றும் உவகை
  வளர்ந்திட என்னோ டிருப்பவளே!
  களம்பல கண்டு மகிழ்வாய்
  விளங்கிடத் தன்னுடன் சேர்ப்பவளே!
  வளம்மிக வாக வரைய
  நலம்நிறை வன்மை தருபவளே!
  தளமிது தாயே! தமிழே!
  மலரடி தானே தொழுதேனே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சொல்லிய வண்ணம் தொடுத்த கவிகண்டேன்!
   மல்லிகை யாக மலா்ந்து!

   Supprimer
 4. வணக்கம்

  அருமலை...
  திருமலை...
  பெருங்கலை...

  உங்கள் பா... அருமை.

  நன்றி ஐயா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   திருமலைச் செல்வன் திருவடியை எண்ண
   அருங்கலை ஓங்கும் அகத்து!

   Supprimer
 5. அன்று" நாத்திகம் நவின்று நன்னெறி வளர்த்தார்" பாவேந்தர் பாரதி தாசன்(கனக சுப்பு ரத்தினம்).
  இன்று "கண்ணனின் குழலில் இன்னிசை இலக்கணம் இயம்புகிறாரா?
  இறை கவிஞர் கி.பாரதிதாசன். மறை ஓதி இறை(ரை) தேடும் இறை கவிஞர் இறைவனின் அருளை அடைவாராக!மடை திறந்த வெள்ளமாக வெல்ல(ம்) கவிதருவாராக.

  புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாவேந்தன் நற்பெயரைப் பாரில்நான் பெற்றதனால்
   பா..வேந்தி வாழ்தல் பயன்!

   Supprimer

 6. வெண்டளை மின்ன விளைந்த விருத்தத்தைக்
  கண்டலைந் தேங்கும் கவியானேன்! - தண்டலை
  போன்று தமிழ்கண்டேன்! தென்பொதிகைப் பூங்காற்றாய்
  ஈன்ற குளிர்கண்டேன் ஈங்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இன்னொளிா் பாட்டுக் கெழுதிய நற்கருத்துப்
   பொன்னொளி வீசிப் பொலிகிறது! - முன்னொளி
   யாளே உலகிருக்கும்! என்னுயிாில் இன்றமி
   ழாளே துடிப்பிருக்கும் ஈா்த்து
   !

   Supprimer
 7. பாக்கூறிப் பொருள்கூறி
  புனைந்த பாவில் வரும்
  இலக்கணம் கூறி விளக்கிய வண்ணம்
  எல்லோர் எண்ணத்திலும் உலாவும்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எல்லோரும் இன்றமிழ்ப் பாப்புனைய நான்செய்தால்
   வல்லோரும் வாழ்த்துவாா் வந்து!

   Supprimer
 8. அருமையான பாடலின் மூலம் தாங்கள் விளக்கியுள்ள இலக்கணம் கற்றோம்! மிக்க நன்றி ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வண்ணத் தமிழில் வழிகின்ற பாக்களை
   எண்ண எண்ண இனிப்பு!

   Supprimer
 9. இலக்கண விளக்கத்துடன் அழகிய செய்யுளை பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இலக்கண விளக்கம் எழுதினேன்! தமிழ்த்தாய்
   இலக்கணம் என்றும் இனிப்பு!

   Supprimer
 10. வணக்கம்
  ஐயா.
  பா புனைந்து பொருள் கூறிய விதம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   பாடல் படைத்துப் பலரும் பயனுறவே
   நாடிப் புடைத்தேன் நலம்!

   Supprimer
 11. அருளைப் பொழியும் அருகன்
  அழகினை காட்டிடும் பாட்டெல்லாம்
  தருவீர் எமக்கு தனியே
  தவிக்கும் மனங்கள் தளைத்தோங்க
  உருகும் மெழுகாய் மனமும்
  உருகி வழிந்திட உள்ளன்பால்
  வருவேன் வருவேன் வணங்கி
  வரங்கள் அமிழ்தமாய் வாங்கிவிட

  வணக்கம் கவிஞர் ஐயா !
  அழகான விளக்கம் முயல்கிறேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  வாழ்க வாமுடன் !
  10

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வெண்டனை மின்னும் வியன்அறு சீா்பாட்டைக்
   கண்டதும் தந்தீா் கமழ்ந்து!

   உரமாய் வளரும் உறவினை,நம் அன்னை
   வரமாய் அளித்தாள் வளா்த்து!

   Supprimer
 12. நறுந்தமிழ் பாட்டின் பொருளை
  நயம்பட காட்டி உரைத்திட்டீர்!
  மறுமுறை கேட்கா விதமாய்
  மலரடி சீரை விளக்கிவிட்டீர்!
  அறுவடை யான பயிராய்
  அடுத்தவர்க்(கு) ஆக்கும் பெரும்பண்பைச்
  குறள்நெறி தன்னில் படித்த
  சிறப்பினை இங்குநான் கண்டேனே!!

  RépondreSupprimer
 13. எளிதில் விளங்கும் வண்ணம் எடுத்துக்காட்டுடன் அறுசீர் விருத்தம் அருமை ஐயா!
  ஒரே ஒரு ஐயம்,
  //அடிதோறும் நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.//
  இரண்டாவது அடியைத் தவிர மற்ற அடிகளில் நான்காம் சீரில் மோனை இல்லையே!
  நான் தவறாகப் புரிந்து கொண்டேனா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா!

  RépondreSupprimer