mardi 15 juillet 2014

தொடுத்தலும் விடுத்தலும்தொடுத்தலும் விடுத்தலும்

திருமிகு அம்பாளடியாள் தொடுத்த தொடர் பதிவுக்கு இன்றுதான் விடை அளிக்கக் காலம் கமழ்ந்தது. வினாவுக்கான விடை நேரிசை வெண்பாவில் வடித்துள்ளேன். வெண்பாவில் முதல் இரண்டு அடிகள் வினாவும், அடுத்த இரண்டு அடிகள் விடையும், தனிச்சொல் மகடூஉ முன்னிலையாகவும் அமைதுள்ளன.

1. உங்களுடைய 100ஆம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

உன்னுடைய நூற்றாண்டு நன்னாள் நிகழ்வுகளைக்
கன்னல் கவியே கதைத்திடுக? - என்தோழி!
அன்னைத் தமிழ்காத்த அன்பர் தமையழைத்துப்
பொன்னை அளிப்பேன் புகழ்ந்து!

2.
என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

சொற்கள் மணக்கும் சுடர்கவி வாணரே!
கற்க விரும்பும் கலையென்ன? - பொற்கொடியே!
ஓவியப் பாட்டெழுதி ஒப்பில் தமிழொளிரக்
காவியம் செய்தற் கடன்!

3.
கடைசியாகச் சிரித்தது எப்போது?

இறுதியாய் வாய்வலிக்க என்று சிரித்தீா்?
உறுதியாய் இங்கே உரைப்பீா்! - நறுங்கொடியே!
வான்வெடி போன்றதிரும் வண்ணச் சிரிப்பென்று
தேன்மொழி சொன்னாள் திகைத்து!

4.  ஒருநாள் முழுவதும் மின்சாரம் இல்லையெனில் நீங்கள் செய்வது என்ன?

மின்சாரம் இன்றி விளைந்த ஒருநாளை
இன்சாரம் கூட்டி இயம்பிவீா்! - மென்கொடியே!
சிந்தை ஒளிர்கின்ற செந்தமிழ்ச் சீர்விளக்கில்
விந்தை புரிவேன் விழைந்து!

5.  உங்கள் செல்வங்களின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உங்கள் திருமகன் உற்ற திருமணத்தில்
தங்கள் உரைக்கும் தகையென்ன? - செங்கரும்பே!
தங்கக் குறள்நெறியைத் தாங்கி வளங்காணப்
பொங்கும் புலமை பொலிந்து!

6.
உலகத்தில் உள்ள சிக்கலை உங்களால் தீர்க்கமுடியும்

என்றால் எந்தச் சிக்கலைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?

உன்னால் முடியுமெனில் ஓங்கும் உலகத்தில்
என்ன படைப்பீர் இசைத்திடுவீா்? - அன்பொளியே!
என்னைக் கொடுத்தேனும் என்னுயிராம் செந்தமிழ்
அன்னைக்கு அமைப்பேன் அரசு!

7.
நீங்கள் யாரிடம் அறிவுரை கேட்பீர்கள்?

தொல்லை அகன்றோடத் தூய தமிழ்க்கவியே
எல்லையை யாரிடம் கேட்டிடுவீர்? - நல்லமுதே!
தந்தையும் தாயும் தமிழ்தந்த ஆசானும்
சிந்தையுள் வாழ்வார் சிறந்து!

8.
உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்

என்ன செய்வீர்கள்?

பொல்லார் பலர்கூடிப் பொய்யுரைஉன் மேலுரைத்தால்
நல்லார் நெறியுடையீா் நாடுவதென்? - நல்லியளே!
அஞ்சா மனமேந்தி ஆற்றல் மதியேந்தித்
துஞ்சா திருப்பேன் துணிந்து!

9.
உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

வாழ்வின் துணையிழந்து வாடும்நன் நண்பனுக்குத்
தாழ்ந்து தருகின்ற சொல்லென்ன? - சூழ்புகழாய்!
மல்கும் பிறவிகள் மண்ணில் கணக்குளதோ?
சொல்லித் துடைப்பேன் துயர்!

10.
உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

இனிமை பொழிகின்ற இன்றமிழா? வீட்டில்
தனிமையில் என்செய்வீா் சாற்றும்? - கனிமொழியே!
என்றும் இதயத்துள் ஈடில் தமிழணங்கு!
மன்னும் கவிதை மலை!

15.07.2014
-------------------------------------------------------------------------------------------------------

உரைநடை வினாவில் இருந்த அயற்சொற்களைச் தமிழாக்கியே பதில் அளித்துள்ளேன்.

பவர்கட்  - மின்சாரம் துண்டிப்பு
பிரச்சனை - சிக்கல்
அட்வைஸ் - அறிவுரை

28 commentaires:

 1. வணக்கம்
  கவிஞர்(ஐயா)

  ஒவ்வொருவினாவுக்கான பதிலும் வெண்பாவில் செப்பிய விதம் கண்டு மகிழ்ந்தேன்....
  வெண்பா வடிவில் செப்பிய வார்த்தைகள்
  என்மனதில் பசுமரத்தாணிபோல. பதிந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வெண்பா விருந்தளித்தேன்! வெல்லும் தமிழேந்தி
   நண்பா முழங்குவோம் நாம்!

   Supprimer
 2. வணக்கம்
  ஐயா

  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வருகைக்கு நன்றி! தமிழ்மண வாக்குத்
   தருகைக்கு நன்றி தழைத்து!

   Supprimer
 3. வணக்கம் கவிஞரையா!

  அடடா.. இத்தனை சிறப்பாய் கேள்வியும் நானே
  பதிலும் நானே என்று அருமையாகப்
  பாவிசைத்தே பதில் கூறிவிட்டீர்கள்! அருமை! மிக அருமை!

  வாழ்த்துக்கள் கவிஞரையா!

  அதுசரி.. அந்த மூன்றாவது வினாவின் விடையென்ன?
  அதையும் கூறுங்களேன்..
  நாங்களும் சேர்ந்து சிரிப்போமே!..:)

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அடடா எனவுள்ளம் ஆழ்ந்து வியக்கும்!
   படபட எனவெடிக்கும் பாட்டு!

   Supprimer
 4. வணக்கம் ஐயா!..

  தொடுத்த வினாவும் தொடர்ந்தே விடையாய்
  எடுத்துக் கொடுத்தீர் இனிமை! - அடுக்கு
  மொழியில் முகிழ்த்த இதழ்கள் மணத்தைப்
  பொழியுதே பாக்களாய்ப் பூத்து!

  எத்தனை இனிமை எங்கள் மொழியினிலே...
  அத்தனையும் சேர்த்து அள்ளி வழங்கினீர்கள் இங்கு!
  ஒவ்வொரு வினாவும் அதன் விடையும்
  வெண்பாவாய் அமைத்த அழகு அருமை ஐயா!

  பாக்களின் சீர்களைச் சேகரிக்கின்றேன் ஐயா!
  நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் உங்களுக்கு!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம்!

   வெண்பாவில் தந்த வியன்தமிழை நான்கண்டு
   பண்பாடி நின்றேன் பணிந்து!

   Supprimer
 5. கனியையொத்த கவிதை விருத்தளித்து இனிய பதில் தந்த
  பாரதி தாசனே வாழிய வாழிய பல்லாண்டு !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அம்பாள் தொடுத்த அருமை வினாக்களுக்கு
   எம்மால் இயன்ற எழுத்து!

   Supprimer
 6. பண்புடனே இட்டீர் பாக்களிலே பதில்
  மாண்புடனே மண்மீது நிலைக்கும் உம்புகழ்...!

  அருமை அருமை ...!ரசித்தேன் கவிஞரே..! வாழ்த்துக்கள் ...!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பண்புடன் வந்து படைத்த கருத்திற்கு
   அன்புடன் நன்றி அணி!

   Supprimer
 7. பாவாலே பகிர்ந்த பதில்கள்
  யாராலும் சுவைக்கச் சிறந்த
  சிந்தனை

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாவால் படைத்த பதில்களைத் தாம்கண்டு
   நாவால் நவின்றீா் நலம்!

   Supprimer
 8. Réponses

  1. வணக்கம்!

   சுவைத்தேன் எனஇங்குச் சொன்ன வொருசொல்
   சுவைத்...தேன் கொடுக்கும் சுரந்து!

   Supprimer
 9. ஒவ்வொரு பதிலும் உங்கள் பாணியில் மிகவும் சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஒவ்வொரு வெண்பாவும் ஓங்கு சுவைதந்தால்
   செவ்விய செந்தமிழின் சீா்

   Supprimer
 10. தங்களிடம் தமிழ்கற்க ஆசையாய் இருக்கிறது அய்யா!
  நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கற்றுக் களிப்பீா்! கனித்தமிழ்ச் சீா்களைப்
   பெற்றுக் களிப்பீா் பெருத்து!

   Supprimer
 11. ஒவ்வொன்றும் அருமை..மிகப் பிடித்தது // என்னைக் கொடுத்தேனும் என்னுயிராம் செந்தமிழ்
  அன்னைக்கு அமைப்பேன் அரசு!
  //
  நன்றி ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அன்னைத் தமிழ்மொழி ஆளும் அரசேற்க
   என்னை அளித்தல் இயல்பு!

   Supprimer
 12. கவிதை வரிகளில் ரசிக்க வைத்த பகிர்வு ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கவிதை அடிகள் கனிச்சுவை தந்தால்
   புவியில் பெறுவேன் புகழ்!   Supprimer

 13. சிறந்த வெண்பாக்கள்!
  செந்தமிழ்ப் பூக்கள்!

  வாழ்த்துகிறேன்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   முற்றத்துப் பூவாசம் மூளைவரை தாக்கியெனைச்
   சுற்றிடச் செய்யும் சுருண்டு!

   Supprimer

 14. தொடுத்தல் விடுத்தல் கவிகண்டேன்! தொங்கித்
  தடுத்தல் இலாதா தகைமை! - எடுத்தோதி
  நெஞ்சம் மகிழ்கிறது! நேச கவிவாணா!
  விஞ்சும் சுவையில் விழுந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நெஞ்சம் மகிழ்ந்திங்கு நெய்த கவிகண்டேன்!
   விஞ்சும் சுவைத்தேன் விருந்துண்டேன்! - பஞ்சமிலாக்
   கொஞ்சும் தமிழ்ச்சீர்கள் கொட்டும் தமிழ்ச்செல்வன்
   அஞ்சா அரிமா அழகு!

   Supprimer