vendredi 4 juillet 2014

கவிஞா் சீராளன்கவிஞர் கி. பாரதிதாசன் பதிற்றந்தாதி

நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின்  பட்டம்  பரிசேற்றே  - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால்  கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தர் பாதம் பணிந்து!

பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து!

இருந்தேன் இதுகாறும் இவ்வுலகின் ஓரம்
பெருந்தேன் அடையில் பிணைத்தீர் - மருகா
உனது மனமோ! உயிராளும் மூச்சோ
எனதுள்ளம் கொண்ட எழுத்து!

எழுத்தில் எழிலாட என்குருவே நெஞ்சில்
கொழிக்கவை இன்றமிழ் கோர்த்துச் - செழிப்பான
அந்தாதி சீர்விருத்தம் அத்தனையும் செம்மையுற
வந்தெடுத்து வைப்பேன்நல் வாழ்த்து!

வாழ்த்துகிறேன் பாவலரே! வண்டமிழின் காவலரே!
ஆழ்ந்துறங்கும் வேளையிலும் ஆன்மாவில் - சூழ்ந்திருக்கும்
நல்லுரைகள் சேர்த்துருக்கி நன்றிசொல்வேன் ! நானிலத்தின்
எல்லா இடத்தும் இருந்து!

இருக்கும் வரைக்கும் இருகரம் கூப்பித்
திருவருள் தன்னைத் தொழுது - திருவாய்
கமழும் திருவாச கம்போல்! உருகும்
உமதன்பு போதும் உயிர்க்கு!

உயிரின் முதலோன் உமக்களித்த இன்பப்
பயனில் எமக்கும் பகிர்ந்தீர் - முயன்றிங்குக்
கற்றதனை முன்மொழிவேன் காப்பியமாய்! அவ்வழிக்கே
பெற்றேன் இனிய பிறப்பு!

பிறப்பின் பயன்கண்ட பேரின்ப நாளில்
அறத்தின் வழிநடக்க ஆள்க! - நிறைந்த
நறுமலர்க் காடாய் நனிச்சுவை தேனாய்ச்
சிறப்புறும் என்னுடைச் சீர்!

சீர்பெருகும் இப்புவியில் சீராளன் என்பெயரும்
ஒர்யுகம் வாழ உயிர்தந்த - பார்புகழ்
வீசுகின்ற பாவலர் வாழ்மண்ணும் நன்றெனவே
பேசும் கவிதைகள் பெற்று!

பெற்றேன் பெருமனத்தின் பேறொன்றே! உம்மிடத்தில்
கற்றேன் கவியறிவு காவலரே - நற்றமிழ்ச்
சொல்லெடுத்து நன்றிபல சொல்கின்றேன்! என்னுள்ளம்
நல்லுரையைக் கூறுமென் நா!

கவிஞர் சீராளன்

02.07.2014
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

சீராளன் அவர்கள் பா புனையும் ஆற்றலையும் பைந்தமிழ்ப் பற்றையும் கண்டு கவிஞர் என்றும் பட்டம் அளித்தேன்.

கவிஞர் சீராளன் அவர்களுக்கு மிக மிக ஏற்புடையது என்பதை அவர் பாடிய பதிற்றந்தாதி சான்று!

கவிஞர் சீராளன் காலம் வெல்க!

காற்றலை போன்று கவிபாடும் உன்னுடைய
ஆற்றலைக் கண்டேன்! அகங்குளிர்ந்தேன்! - போற்றுமுயர்
பட்டம் அளித்திட்டேன்! பைந்தமிழ்ப் பூங்குயிலே
கொட்டும் முரசடித்துக் கூவு!

என்றன் பெயரில் எழுதிய அந்தாதி
இன்றேன் சுரக்கும் இதயத்துள்! - என்றென்றும்
சீருடன் வாழ்க! செழுங்கவிஞர் சீராளன்
பேருடன் வாழ்க பெருத்து!

அருந்தம்பி சீராளன் அந்தமிழ் காக்கும்
பெரும்நம்பி என்றபெயர் பெற்று - வரும்காலம்
ஓங்கட்டும்! வாழ்நலம் தேங்கட்டும்! நற்புகழைத்
தாங்கட்டும் அன்னைத் தமிழ்!

கவிஞர் கி. பாரதிதாசன் 
02.07.2014

25 commentaires:

 1. கவிஞர் சீராளன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சீராளன் தந்த செழுந்தமிழில் என்னெஞ்சுள்
   நீராடும் என்றும் நினைத்து!

   Supprimer
 2. கவிஞர் சீராளனின் கவிதை அருமை ஐயா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நற்கவி சீராளன் நல்கிய பாக்களை
   இப்புவி போற்றும் இசைத்து!

   Supprimer
 3. வணக்கம்
  ஐயா.

  தகவல் அறிந்தேன் மிக்க மகிழ்சியாக இருக்கிறது. கவிஞர் சீராளன் தன் புகழ் பாரரெங்கும் சிறக்க எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நல்ல தமிழெடுத்து நல்கிய பாக்களைச்
   சொல்லச் சுரக்கும் சுவை!

   Supprimer
 4. வணக்கம் ஐயா!

  எங்கள் கவியே! இனிதே இயம்பிய
  உங்கள் பணியிது ஓங்குகவே! - மங்காப்
  புகழும் மகிழ்வும் பொலியச் சிறந்து
  திகழுமே சீராளன் சீர்!

  உள்ளம் மகிழ்வில் பொங்க - உளமார
  உரைத்தேன் நல்வாழ்த்து இங்கு!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பாராளும் வேந்தனாய்ப் பாவலன் என்புகழைச்
   சீராளன் தந்தான் செழித்து!

   Supprimer
 5. அன்புச் சகோதரரே சீராளா!

  எங்கள் ஐயா உள்ளத்தில்
  ...என்றும் வாழும் சீராளர்!
  உங்கள் அன்பு வாழ்த்ததினால்
  ...ஓங்கும் கீர்த்தி மேலுமிங்கே!
  திங்கள் வானில் திகழ்வதுபோல்
  ...தீட்டும் பாக்கள் திகழட்டும்!
  தங்கும் மேன்மை காலமெலாம்
  ...தாய்த்தமிழ் உம்மை வாழ்த்திடவே!

  ஐயாவின் பெருமையையும் புகழையும்
  உங்கள் திறமைகள் உலகிற்குப் பறைசாற்றட்டும்!

  என்றென்றும் என் வாழ்த்தும் உங்களுடன் உடனிருக்கும்!

  வாழ்க வளமுடன்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நற்றம்பி சீராளன் நல்கிய பாட்டெண்ணிப்
   பொற்கவி செய்தீா் புகழ்ந்து!

   Supprimer
 6. சீராளான் சிந்தியத் தேன்
  செந்தமிழ்த் தேன் அந்தாதி
  பாராள வலை தன்னில்
  பதிவிட்டீர் பதில் ஓதி
  அருமை!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அந்தாதி யாப்பில் அருந்தம்பி சீராளன்
   வந்தோதித் தந்தான் வளம்!

   Supprimer
 7. வணக்கம் கவிஞர் அண்ணா !

  என்காலம் வெல்ல இனிதாக வாழ்த்துகின்ற
  கன்னல் கவியே கனிமரமே - அன்பின்
  இலக்கணத்தில் அள்ளி இடுகின்ற பாக்கள்
  உலகுக்கும் ஊட்டும் ஒளி !

  அன்னைத் தமிழின் அறங்காவ லர்நீங்கள்
  இன்புற வேண்டும் இனி !

  என்ன சொல்லி நன்றியுரைப்பேன் எனக்கே தெரியவில்லை ஐயா ...
  உமக்காக பதிவிட்ட பாக்களை மனமுவந்து உங்கள் வலையிலும் பகிர்ந்து
  மேலும் எனக்கு உற்சாகம் தருகின்றீர்கள் மிக மகிழ்கின்றேன்


  என்னை வாழ்த்தி வெண்பாக்கள் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ..!

  வாழ்க வளமுடன் !
  9

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எல்லாக் கவிகளையும் ஏற்றமுறப் பாடிடவே
   சொல்லிக் கொடுப்பேன் சுவைத்து!

   Supprimer

  2. அன்புத்தம்பி சீராளன் அவர்களுக்கு வணக்கம்!
   நலத்துடன் வளத்துடன் வாழ்க!

   உலகுக்கே ஊட்டும் ஒளியென்றாய்! உள்ளம்
   நிலவுக்கே சென்றுலா நீந்தும்! - மலருக்குள்
   மாட்டிய வண்டானேன்! வண்ணத் தமிழுக்குள்
   தீட்டிய செல்வத்தைத் தின்று!

   Supprimer
 8. வணக்கம் கவிஞரையா!

  புதுமை படைக்க இன்னுமோர் இளங்கவிஞரோ!..

  அருமை! அருமை!

  வரவேற்கின்றேன்!...

  இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பூங்கொடி சொற்களைப் பொற்றமிழ் தந்திட்ட
   மாங்கனி என்பேன் மகிழ்ந்து!

   Supprimer
 9. கவிஞர் சீராளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனிய கவிபாடும் சீராளன் இன்தேன்
   கனியக் கமழும் கவி!

   Supprimer
 10. Réponses

  1. வணக்கம்

   அன்புடன் வந்தே அரும்பத்து வாக்கினை
   இன்புற தந்தீா் எனக்கு!

   Supprimer
 11. வணக்கம் கவிஞர்களே ! வருங்காலம் இனி உமது வாழ்த்துக்கள் பாடி வாழ்த்த வகையற்றவள். இருப்பினும் நீவீர் சிறப்புடன் வாழவேண்டும் எனும் எண்ணம் நெஞ்சில் நிறையவே உள்ளவள். வாழ்க வாழ்க பல்லாண்டு வளமோடு...!

  இருவரும் கை கோர்த்து -என்ன
  இன்னல்கள் வந்தாலும் தகர்த்து
  எடுத்த பெயர் நிலைத்திடவே
  பாக்கள் பல தொடுத்து
  பாரெல்லாம் புகழ் பரவ
  பைந்தமிழும் செழித்தோங்க
  நாளும் தமிழ் அன்னை நாவில்
  தவழ்ந்தாட நட்டு வைத்த
  மரங்களும் பட்டுப் போகாது
  நீட்டும் கரங்களில் நீ சிட்டு போல்
  மகிழ்வோடு நீந்தி விளையாடு!

  வாழ்க வளமுடன் ....!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனியா இயம்பிய இன்றமிழ்ச் சொற்கள்
   கனியா? கரும்பா? கதை!

   Supprimer

 12. சீராளன் தந்த செழுந்தமிழை நானேந்தி
  பாராளும் அன்னையிடம் பாடிடுவேன்! - தேரோடும்
  இன்ப மகிழ்வேந்தி எங்கள் கவிதாசன்
  பொன்விழா காண்க பொலிந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நண்பா் அனைவரும் நான்மகிழ வாழ்துரைத்தார்!
   தண்பா படைத்தார்! தமிழமுதை - உண்ணென்றார்!
   அன்பில் குளித்தேன் அகம்நிறைந்து இன்புற்றேன்!
   என்றும் மறைவேன் இதை!

   Supprimer