mercredi 23 juillet 2014

வலைப்போதை



வலைப்போதை!

கள்போதை தருவதுண்டு! காதல் வீசும்
     கண்போதை தருவதுண்டு! நெஞ்சைக் கவ்விச்
சொல்போதை தருவதுண்டு! ஆசை பொங்கிச்
     சுகப்போதை தருவதுண்டு! புகழாம் செல்வி
நல்போதை தருவதுண்டு! நாதன் பொற்றாள்
     நறும்போதை தருவதுண்டு! கொடிய கஞ்சா
வல்போதை தருவதுண்டு! பதிவை ஏற்றும்
     வலைப்போதை உனக்கேனோ சொல்வாய் நெஞ்சே?

நீரில்லை என்றாலும்! நெஞ்சுள் இன்பம்
      நிலையில்லை என்றாலும்! வாழ்ந்து வந்த
ஊரில்லை என்றாலும்! ஒட்டி நின்ற
      உறவில்லை என்றாலும்! முன்னோர் சேர்த்த
சீரில்லை என்றாலும்! செய்யும் செய்கை
      சிறப்பில்லை என்றாலும் பரவா இல்லை!
பாரெல்லை வரைகாட்டும் வலையை ஓர்நாள்
      பார்க்காமல் இருப்பாயோ பகர்வாய் நெஞ்சே?

அலைபெருகி வருவதுபோல்! வன்பே ராசை
      அகங்பெருகி வழிவதுபோல்! பொருள்கள் மீது
விலைபெருகித் தொடர்வதுபோல்! தீயோர் வாழ்வில்
      வீண்பெருகிப் படர்வதுபோல்! பொல்லா நாட்டில்
கொலைபெருகி நடப்பதுபோல்! வஞ்சம் என்றும்
      குணம்பெருகிக் கூன்பெருகிப் போதை கொண்டு
வலைபெருகிப் பதிவேற்றி வாக்கும் பெற்று
      தலைக்கனத்தைக் கொள்ளுவதோ சாற்றாய் நெஞ்சே?

உடனிருந்து கழுத்தறுக்கும் வஞ்சம் போன்றும்
      உள்ளொன்று வெளியொன்று பேசல் போன்றும்
கடனிருந்து களிக்கின்ற ஈனம் போன்றும்
      கனியிருந்து காய்கவரும் ஊனம் போன்றும்
குடமிருந்த மாங்கொத்தைக் கண்டு வாடும்
      குப்பையெனக் கூளமென நாற்றம் போன்றும்
விடமிருந்த இடம்மாறி உன்னுள் உற்று
      விளையாடும் வலைப்போதை ஏனோ நெஞ்சே?

வலைநோக்கம் என்னென்று வகுக்க வேண்டும்!
      வரும்காலம் நம்பதிவை வாழ்த்த வேண்டும்!
கலைநோக்கம் இல்லாமல், மொழியைக் காக்கும்
      கவிநோக்கம் இல்லாமல் எழுதல் வீணே!
தொலைநோக்கப் பார்வையுடன் கருத்தை ஆய்ந்து
      தொடுக்கின்ற பதிவுகளைக் கற்றோர் ஏற்பர்!
இலைநோக்கம் என்றுரைத்துப் பொழுதைப் போக்கி
      இழிவேந்தும் வலைப்போதை ஏனோ நெஞ்சே?

22.07.2014

20 commentaires:


  1. கலைப்போதை உண்டு! கவிப்போதை உண்டு!
    கொலைப்போதை கொள்ளல் கொடுமை! - நிலையாய்
    இலைப்போதை என்றே ஏளனம் செய்யும்
    வலைப்போதை நல்குமோ வாழ்வு!?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்றவர் கற்றவரைக் கண்டு களிப்புறுவர்!
      மற்றவர் ஏங்கி வயிறெரிவர்! - நற்றோழா
      உன்றன் கவிபடித்து உள்ளம் உருத்தேறும்!
      என்றும் எழுதுக இங்கு

      Supprimer
  2. ///கலைநோக்கம் இல்லாமல், மொழியைக் காக்கும்
    கவிநோக்கம் இல்லாமல் எழுதல் வீணே!
    தொலைநோக்கப் பார்வையுடன் கருத்தை ஆய்ந்து
    தொடுக்கின்ற பதிவுகளைக் கற்றோர் ஏற்பர்!//
    உண்மை ஐயா
    உண்மை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வீணே பதிவேற்றல் வெற்று விழலன்றோ!
      ஊணே சுமையாம் உடற்கு!

      Supprimer
  3. // வரும்காலம் நம்பதிவை வாழ்த்த வேண்டும்... //

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருங்காலம் எண்ணி வகையிடும் வாழ்வே
      அருங்கோலம் கொண்ட அழகு!

      Supprimer
  4. "வலைநோக்கம் என்னென்று வகுக்க வேண்டும்!
    வரும்காலம் நம்பதிவை வாழ்த்த வேண்டும்!
    கலைநோக்கம் இல்லாமல், மொழியைக் காக்கும்
    கவிநோக்கம் இல்லாமல் எழுதல் வீணே!" என
    அழகுற உரைத்திட்ட அறிஞரே! - வரும்
    காலம் நல்ல பதிவுகளையே
    எதிர்பார்க்கிறது என்பது உண்மையே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நோக்கம் இலாமல்..நீ ஆக்கும் பதிவுகளைப்
      போக்கும் உலகம் புடைத்து!

      Supprimer
  5. வணக்கம் ஐயா!

    நோக்கமின்றிச் செய்கின்ற செயல்கள்
    அனைத்துமே யாருக்கும், தனக்குமே பயனற்றதே..

    வலையில் ஏதோ ஒன்றைப் பதிவிடல், வாசகர் எண்ணிக்கை, வாக்குப் போட்டி
    இப்படி அதற்கு நாம் அடிமையாவதை நல்லமுறையில்
    அழகிய விருத்தப் பாவில் மிக அருமையாக தெரியவைத்துள்ளீர்கள்.

    சிந்திக்க வேண்டிய தருணம் இது ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்மணப் பட்டறையில் வந்தெய்த வேண்டி
      உமியாய்ப் பறக்கும் உயிா்

      Supprimer
  6. உள்குத்து பதிவா?

    RépondreSupprimer
    Réponses
    1. நிஜம் என்று ஒன்று இருந்தால்?
      அதன் நிழல் நிச்சயம்! தன்பதிவை பதியத் தான் செய்யும்.

      புதுவை வேலு

      Supprimer

    2. வணக்கம்!

      முள்குத்தும்! தீட்டும் முனைகுத்தும்! பாதையிலே
      கல்குத்தும்! மிக்கொளியில் கண்குத்தும்! - புள்குத்தும்!
      பல்குத்தும்! நெல்குத்தம்! சொல்குத்தும்! நானறியா
      உள்குத்தும் போக்கை உணா்த்து!

      Supprimer
  7. வணக்கம் கவிஞரையா!

    நான் பதிவுகள் ஏதும் இடுவதில்லை. நேரம் மற்றும் விடயம் இப்படி
    எதுவும் எனக்கு சரியாக அமையாததே காரணம்.
    நல்ல அறிவுரை! பதிவர்கள் பயனுறுவர்.
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உண்மை உரைத்த உயா்மணப் பூங்கொடியே
      ஒண்மை மொழியுன் உயிா்!


      Supprimer
  8. அருமையான கவிதை! மிகவும் ரசித்தோம் தமிழை!

    வலை போதைதான் ஐயா! ஆனால், தங்களுடைய அழகானக் கவிதைகள், இன்னும் பலரது நல்ல எழுத்துக்கள் எல்லாம் படிக்க வலையில் உலா வந்தால்தானே ஐயா வாசிக்க முடியும்! வலையில் கற்க பல உள்ளது! தாங்கள் சொல்லுவது போல வேண்டாதவற்றை வலையில் உலா வந்து போதையாகிவிடக் கூடாதுதான்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலத்தை எண்ணிக் கணக்கிட்டால் சுற்றிவரும்
      ஞாலத்தை வென்றிடலாம் நாம்!

      Supprimer
  9. வலைதளங் காக்க கற்றோர் கவிசெயின்
    புவியும் புகழ்ந் துரைத்து
    புதுவை வேலு (குழல் இன்னிசை kuzhalinnisai.blogspot.com)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வலைப்போதை ஏறி வழிமறந்தால் வாழ்வின்
      நிலையிழந்து போவோம் நெளிந்து!

      Supprimer