dimanche 13 juillet 2014

பெருந்தேவி நாயகனே போற்றி


பெருந்தேவி நாயகனே போற்றி!

ஊரென்ன பேசிடுமோ? சுற்றி யுள்ள
     உறவென்ன செப்பிடுமோ? முன்னோர் வைத்த
சீரென்ன ஆகிடுமோ? வளமார் உள்ளம்
     சிதைந்தென்று குன்றிடுமோ? வாழ்க்கை யென்னும்
தேரென்று நின்றிடுமோ? என்றன் மேனி
     தீயென்று கண்டிடுமோ? தெரியேன் உன்றன்
பேரொன்றோ உண்மையென நம்பி நின்றேன்
     பெருந்தேவி நாயகனே போற்றி! போற்றி!!
                         
25-05-2001

21 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      அருமை எனும்சொல் பெருமை உணா்த்தும்!
      வருகைக்கு எனதுயிா் வாழ்த்து!

      Supprimer
  2. ருசிக்கத் துவங்கியதும்
    சட்டென உணவு தீர்ந்தது மாதிரி இருந்தது
    சட்டென முடித்தது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      ஒருவிருத்தம் என்றாலும் நம்முயிரைக் கவ்வும்
      திருவிருத்தம் என்பேன் திளைத்து!

      Supprimer
  3. Réponses
    1. பாவேந்தர் பாரதி தாசன் இறையியல் கவிதை எழுதி நானறியேன். "யாம் அறியோம் பராபரமே" ஆனால் பெருந்தேவி நாயகனே போற்றி கவிதையை இடுகையிட்ட கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்கள் சமயம் தழுவிய கவிஞராகி விட்டரோ? இனி...
      சமயம் தரும் உங்களுக்கு புகழ் என்னும் இமயம்.
      புதுவை வேலு

      Supprimer

    2. வணக்கம்!

      முருகன் துதியமுதை முத்தமிழ்ப் பாவேந்தா்
      உருகிப் படைத்தாா் உவந்து!

      ஒப்பற்ற சக்தி உலகை இயக்குவதாய்
      செப்பும் நெறியே சிறப்பு!

      என்னுள் இருந்தே இயக்கும் பெருஞ்சக்தி
      பொன்னாா் திருமலை போற்று!

      Supprimer
  4. வணக்கம் ஐயா!

    எண்சீர் விருத்தமதில் ஏற்றசீர் பேரழகு!
    கண்கரைய வைத்ததே காண்!

    அருமையான எண்சீர் விருத்தம்!.
    சோக இழையோடு மனதில் ஒட்டிக்கொள்கின்றது...

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கண்ணுள் புகுந்திட்ட கண்ணனை என்னுடைய
      பண்ணுள் படைத்தேன் பணிந்து!

      Supprimer
  5. வணக்கம் கவிஞரையா!

    மண்ணுலக வாழ்க்கையில் உளம் காணும்
    வலியைச் சொல்லுகின்ற கவிதை...

    கவிதை தரும் சோகத்தை ரசிப்பதென்று சொல்லமுடியுமா?..

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மண்ணுலக வாழ்வு மகிழ்வுற வேண்டுமெனில்
      விண்ணுலக நாதனை வேண்டு!

      Supprimer
  6. வணக்கம்
    ஐயா

    தமிச்சுவை ததும்பிய கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்ச்சுவை அள்ளித் தருங்கவியில் ஆழ்ந்தால்
      இமியளவும் துன்பம் இலை!

      Supprimer
  7. சிறந்த உணர்வுள்ள கவிதை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெஞ்சுள் நிலைத்த நெடுமாலை நான்பாடக்
      கொஞ்சும் தமிழும் குளிர்ந்து!

      Supprimer
  8. கவிதை சிறியதாயினும் சிறப்பே...
    எனது ஹிந்தமிழ் காண்க...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அாிய கவியில் அகத்தைப் பதித்தீா்
      காிய கமலனைக் கண்டு!

      Supprimer
  9. போற்றி விட்டீர் பெருந் தேவி நாயகனை
    பெற்றிடுவீர் புகழ் அனைத்தும் பெரும் பயனும் !
    வாழ்க வளமுடன் ....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருந்தேவி நாயகனின் பேரழகில் ஆழ்ந்தால்
      வருங்கோடி இன்பம் வளர்ந்து!

      Supprimer

  10. ஊரென்ன என்றே உரைத்த விருத்தத்தில்
    சீரென்ன? கொண்ட சிறப்பென்ன? - பேரண்டம்
    தாண்டித் தழைக்கும் தமிழ்தந்தீா்! வாழ்த்துகிறேன்
    வேண்டித் திருமலையில் வீழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொன்மலை நாதனின் பொற்றாள் பணிந்தேத்தி
      என்கலை ஓங்க எழில்தந்தாய்! - மின்கலை
      கற்ற தமிழ்ச்செல்வா! கன்னல் கவிதைகளைப்
      பெற்ற தமிழ்ச்செல்வா பேசு!

      Supprimer