jeudi 15 août 2013

சாற்றுகவி

[புதுவைப் பெரும்புலவா், மரபுக்கவி மாமணி, கலைமாமணி,  
என் குரு, எந்தையாகிய கவிஞா் தே. சனார்த்தனன் என்ற கிருட்டினசாமி அவா்கள் காதல் ஆயிரம் நுாலுக்கு வழங்கிய  சாற்று கவி]



கவிஞர் தே. சனார்த்தனனார் பாடிய

காதல் ஆயிரத்தின் சாற்றுகவி

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
கன்னற் தமிழில் கமழும் காவியம்
கண்டாய் இனிக்கும் காதல் ஆயிரம்!
வெண்டளை மணக்கும் வெண்பா விருந்தாம்!
பழகு தமிழில் பாங்காய்ப் படைத்த
அழகுப் பாக்கள்! அருமை! அருமை!
காளி தாசனைக் கண்ண தாசனைத்
தோளில் சுமந்த பாரதி தாசன்
நல்ல கவிகளை நாமும் பருக
வல்லமை யோடு வழங்கும் மறவன்!
அந்தாதி அரசர் அரிய புத்திரர்பால்
செந்தமிழ் பெற்ற சிறந்த பாவலன்!
எழுத்தி லக்கணம் யாப்பி லக்கணம்
அழுத்தமாய்க் கற்ற அருந்தமிழ்ப் புலவன்!
பாயும் வெள்ளமாய்ப் பைந்தமிழ் ஓங்க
ஆயிரம் பாக்கள் அளிப்பதும் எளிதோ?
கற்பனை இன்பம் காற்றென வீசும்!
அற்புத மாக அணிவகை பேசும்!
எதுகையும் மோனையும் இயல்பாய் இனிக்க
மதுகைப் பாக்களால் மணக்கும் இந்நூல்!
விரைவாய் வெண்பா பாட விழைவோர்
தரவாய் இதனைத் தம்முளம் கொண்டால்
அழகாய் எழுதும் ஆற்றல் அடைந்து
பிழையிலா வெண்பா பீடுறப் புனைவார்!
செம்பொன் மேனியன் சீரினைக் கூறும்
கம்பனில் தோய்ந்த கவிஞன் பாரதி
தாசனின் படைப்பு! தமிழ்க்கோர் சிறப்பு!
வாசம் உள்ள மல்லிகை போலக்
காதல் ஆயிரம் கனிச்சுவை நல்கும்!
ஆதலால் போற்றினன் அகவற் பாவிலே!

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனன்
துணைத்தலைவா் புதுவைத் தமிழ்ச் சங்கம்

3 commentaires:

  1. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்

    தந்தைக்குப் பெருமை மட்டுமல்ல, தந்தையிடமிருந்
    தே
    பிழையிலா வெண்பா பீடுறப் புனைவார்!

    எனும் பாராட்டு. இதை வேறென்ன வேண்டும். மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்களும் நன்றிகளும்

    RépondreSupprimer
  2. வாழ்த்துகள் அய்யா...

    RépondreSupprimer
  3. ஏற்றிய வெண்பா இயம்பிய இனிமைக்குச்
    சாற்றிய அகவல் தந்தஉம் தந்தையின்
    மாட்சிமை என்றன் மனதில் உவகைக்
    காட்சி என்றே காணுகிறேன் இங்கே!

    மிகமிக அருமையாக உள்ளது ஐயாவின் சாற்றுகவி!

    தனயனால் தந்தை கொள்ளும் பெருமை சொல்லிமாளாது. எத்தகைய பெருமையை உங்கள் தந்தை கொண்டார் என்பதைத் தனது அகவலில்...

    // காளி தாசனைக் கண்ண தாசனைத்
    தோளில் சுமந்த பாரதி தாசன்//

    மிக அழகாகக் காட்டியுள்ளார்.

    தங்களின் தந்தைக்கும் தங்களுக்கும்

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer