mercredi 23 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 8]




காதல் ஆயிரம் [பகுதி - 8]

71.
காதல் கதைவரையும் தூரிகை! இன்பமிகு
மோதலை முன்னுரைக்கும் முன்னுரை! - மாதவளே!
பொன்மயில் ஆடும் அசைவுகளைப் பூத்திங்கே
என்னுயிரை ஈர்க்கும் இமை!

72.
அடுக்காய்க் கவிதைகளை அள்ளி அளிக்கும்!
மிடுக்காய் எடுப்பாய் மிளிரும்! - கொடுக்கும்
அகத்துள்ளே பொங்கியெழும் ஆசைகளை! உன்றன்
முகத்துக்(கு) அழகூட்டும் மூக்கு!

73.
சுரக்கும் மதுவூற்று! சொர்க்கத்தின் வாயில்!
விரைந்து கணைதொடுக்கும் வில்கள்! - உருகிடவே 
அன்பைப் பொழிகின்ற மேகம்! அழகே!உன்
இன்பத்தேன் ஊறும் இதழ்!

74.
மண்ணில் தவழும் கருமேகம்! மன்னனிவன்
கண்ணில் தவழும் கவியலை! - இன்பெய்தி
மஞ்சம் மணக்கும் பொழுதினிலே என்கைகள்
கொஞ்ச மணக்கும் குழல்!

75.
பொழிலோ? பொழியும் பனியோ? புகழார்
எழிலோ? இறைவாழ் இடமோ? - செழிப்பருளும்
பண்பின் பிறப்பிடமோ? பைங்கொடியே உன்னுடைய
அன்பொளி வீசும் அகம்!

76.
நீராடி நின்றவுனை நேராகக் கண்டதனால்
போராடி நிற்கின்றேன் பூங்குயிலே! - தீராத
தாகத்தைத் தந்து தவிர்த்திடச் செய்யுதடி
மோகத்தை மூட்டுங் கனி!

77.
கொஞ்சும்! மலர்க்கொடியை விஞ்சும்! அதைக்கண்டு
நெஞ்சும் நினைவும் நெகிழ்ந்தாடும்! - தஞ்சமென
உன்னைத் தொடர்ந்துவர ஊட்டும் உணர்ச்சியை!
என்னை இழுக்கும் இடை!

78.
மலைவாழைத் தண்டோ? மெழுகோ? வடித்த
கலையொளிர் தூணோ? கருத்தை - வளைத்துக்
கவரும் வடிவழகே? கண்மணியே! உன்றன்
துவளும் இடையின் தொடை!

79.
படித்தவுடன் நன்றே படியும்!சீர் எண்ணி
முடித்தவுடன் சொற்கள் முகிழ்க்கும்! – விடிந்தவுடன்
நாளினிக்கும்! எல்லாம் நலிந்ததுவே! மீண்டும்..வா
தாளினிக்கும்! பாக்கள் தழைத்து

80.
படிக்கப் பிடிக்கலையே! பார்ப்போர் மதிக்க
நடிக்கத் தெரியலையே! நங்காய்! – துடிக்கத்
துடிக்க வாடுகிறேன்! நீயின்றிப் பாக்கள்
வடிக்க வருமோ வளம்?

(தொடரும்)

8 commentaires:

  1. அய்யா...!

    கவிதை உங்களுடன்-
    ஊஞ்சலாடுது!

    எனக்கோ மனம்-
    வாடுது!

    ஏங்குது...!

    அருமைங்க அய்யா..

    அதற்கு மேல் வார்த்தை-
    பஞ்சம் அய்யா...!


    RépondreSupprimer
  2. //அடுக்காய்க் கவிதைகளை அள்ளி அளிக்கும்!//காதல் படுத்தும்பாடு.. அருமை.

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா !
    தங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மனதைக் கவர்ந்து செல்கிறது !
    மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    RépondreSupprimer
  4. காதலுக்கும் கவிதைக்கும் இன்னும் மவுசு உண்டு.

    RépondreSupprimer
  5. அழகிய கவிதைகள் நெஞ்சோடு நிறைகிறது வாசிக்கையில் வாழ்த்துக்கள் கவிஞரே

    RépondreSupprimer
  6. இடையும் இதழும் இமையும் அவளின்
    தொடையும் கவியாய்த் தொடுத்தீர்! – கொடையாய்ப்
    படைக்கும் கவிநடையில் பாவையர் நெஞ்சம்
    உடைந்திடுமே உள்ளம் உழன்று!


    --

    RépondreSupprimer
  7. அடடா பேச்சு வருகுதில்லையே. சொற்கள் தொலைந்துவிட்டதையா உங்கள் சொக்கவைக்கும் சொல்லாடல் கண்டு....

    RépondreSupprimer
  8. கொஞ்சும் வரி கண்டே நெஞ்சம்
    கவி படிக்க தஞ்சம் எனக்கேட்டே கெஞ்சும்.. ஐயா தவறிருந்தால் மன்னிக்கவும் படித்த ஆர்வத்தில் மனம் பிதற்றுகிறது. இப்படியாவது நாங்களும் எழுத கற்றுக்கொள்கிறோம் ஆசானே.

    RépondreSupprimer