mercredi 2 janvier 2013

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 10]



நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்



பேராசிரியா் அவா்களுக்கு வணக்கம்!

நன்றி உரைத்த நறுங்குறள் காட்சியிலே
ஒன்றி உவந்த துளம்!

28.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

இட்டப் பணியைச் செய்தொளிரும்
    சிட்டுக் குருவிக்(கு) என்நன்றி!
கட்டக் கட்டச் சுவா்உயரும்!
    கனியக் கனியச் சுவைகூடும்!
எட்ட முடியா இடத்தினிலே
    இருந்தால் என்ன? நம்நட்பு
நட்ட மரம்போல் தழைத்துயரும்
    நம்மின் இதயக் கூட்டினிலே!

ஆன்மா, ஆத்மா, சொற்களையே
    அழகாய் உயிர்என்(று) எழுதிடுக!
வான்மா மழையாய்ப் பொழிகின்ற
    வண்ணத் தமிழில் குளித்திடுக!
தேன்மா, வாழை, பலாக்கனிகள்
    தென்றல் தமிழின் உறவாகும்!
நான்..மாத் தமிழின் பற்றாலே
    நவின்ற கருத்தை உணா்ந்திடுக!

30.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நல்ல குறிப்புகளை நாளும் படைத்திங்கு
வல்ல திறனை வளா்கின்றாய்! - வெல்லுதமிழ்
காக்கும் கவிஞன்யான் வாழ்த்துகிறேன்! நெஞ்சத்துள்
பூக்கும் கருத்தைப் பொழிந்து!

04.12.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பீடையிலே மார்கழியைத் தள்ளி வைத்துப்
    பிரித்துநமை ஆண்டிடவே செய்த வேலை!
ஓடையிலே குளித்ததுபோல் குளிரும் மாதம்!
    ஒப்பில்லா மலா்கண்ணன் மகிழும் மாதம்!
கோடையிலே நிழலருமை புரியும் தோழி!
    கூா்மதிக்கே உலகுண்மை தெரியும் என்பேன்!
வாடையிலே நமை..மயக்கும் தாழை போன்று
    வந்தாடும் மார்கழியை வாழ்த்திப் பாடு!

06.12.2012

------------------------------------------------------------------------------------------------------
 
வணக்கம்!

கல்வெட்டுக் காவியத்தைப் படித்த போது
    கவிஞன்என் இதயத்துள் கண்ணீா் ஓட்டம்!
முள்வெட்டு போல்குத்தும் வயிற்றின் சண்டை!
    முடிவின்றித் தொடா்கின்ற வறுமைக் கோடு!
பல்வெட்டு தெரிகின்ற மெலிந்த தோற்றம்!
    பஞ்சடைந்த தலைக்கோலம்! ஏந்நாள் தீரும்!
சொல்வெட்டு வைக்காமல் கவிதை தந்த
    துாயகவி மகேந்திரனை வணங்கு கின்றேன்!

06.12.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முடிகுறித்து இங்கே மொழிந்த கருத்தைப்
படியெடுத்துக் கொண்டேன் பரப்ப! - வடிவாய்
இருக்க வழிசொன்னார் செம்மலை! இன்பம்
பெருக்க வழிசொன்னார் பேணு!

முடியென்ன? முகமென்ன? என்றே எண்ணி
    மூலிகையைத் தேடுதற்குக் காலம் இல்லை!
அடியென்ன? சீா்என்ன என்றே எண்ணி
    அருந்தமிழைப் படைக்கின்ற கவிஞன் யானே!
இடியென்ன? வெடியென்ன பகைவா் தம்மை
    இடுப்பொடித்துத் துாளாக்கும்  மொழிப்போர் வீரன்!
செடியென்ன? கொடியென்ன? தமிழைத் தாங்கித்
    செழிக்கின்ற தலையெனக்கு! முடியும் ஏனோ?

07.12.2012

------------------------------------------------------------------------------------------------------
 

13 commentaires:

  1. வணக்கம் ஐயா...
    உங்களின் கவிக்கருத்துக்காகவே
    கவிதைகள் எழுதலாம்...
    என் தளத்தில் உங்களின் கருத்தைக் கண்டதும்
    மிகவும் மகிழ்ச்சியுறுவேன் ...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      நல்ல கவிதைகளை நன்குணா்ந்து போற்றுவதே
      வல்ல புலவனின் வாழ்வு!

      Supprimer
  2. கருத்திடலிலும் கவி மழை பொழிகிறீர்கள்! நன்று

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வான்மழை நல்கும் வளமாக என்கவிதை
      தேன்மழை நல்கும் திரண்டு!

      Supprimer
  3. முடியென்ன? முகமென்ன? என்றே எண்ணி
    மூலிகையைத் தேடுதற்குக் காலம் இல்லை!
    அடியென்ன? சீா்என்ன என்றே எண்ணி
    அருந்தமிழைப் படைக்கின்ற கவிஞன் யானே!
    இடியென்ன? வெடியென்ன பகைவா் தம்மை
    இடுப்பொடித்துத் துாளாக்கும் மொழிப்போர் வீரன்!
    செடியென்ன? கொடியென்ன? தமிழைத் தாங்கித்
    செழிக்கின்ற தலையெனக்கு! முடியும் ஏனோ

    ரொம்ப கருத்துள்ள வரிகளில் கவிதை படைத்து வருகிறீர்கள். படிக்க படிக்க மனதுக்குள் உற்சாக ஊற்றெடுக்கிறது ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படிக்கப் படிக்கச் சுவைகூடும்! பாக்கள்
      வடிக்க வடிக்க வளம்!

      Supprimer
  4. வணக்கம் ஐயா, காலையிலேயே உங்க கவிதை மூலம் மனதை நெகிழ வைத்திவிடீர்கள். அருமை ஐயா.

    என்னுடைய பெயரையும் சேர்த்து எழுதியது, இந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      செம்மலை நண்பா! சிறந்த கருத்திட்டாய்!
      எம்வலை ஓங்கும் எழுந்து!

      Supprimer
  5. கட்டக் கட்டச் சுவா்உயரும்!
    கனியக் கனியச் சுவைகூடும்!

    கற்கக் கற்க கனிவு தரும் கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கனியக் கனியச் சுவைபெருக்காய்த் தந்தீா்
      இனிய கருத்தை இசைத்து!

      Supprimer
  6. புத்தாண்டில் இன்னும் உங்கள் கவிதைகள் பொங்கட்டும்... புதுவருட வாழ்த்துக்கள்...

    பொங்கல் கவிதையும் நன்று...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்ல தமிழ்மகள் ஆதிரா சொன்னவை
      வெல்லச் சுவையின் விருந்து!

      Supprimer

  7. வணக்கம்!

    ஊக்கமுடன் வந்த உறவுகளுக்கு என்நன்றி!
    ஆக்கமுற ஆய்வோம் தமிழ்

    RépondreSupprimer