vendredi 2 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 112]



காதல் ஆயிரம் [பகுதி - 112]

941.

வானின் நிறத்தழகில் வந்தவளே! வண்ணமலர்
தேனின் சுவைப்பெருக்கே! தேவியே! - மீனின்
அழுகையைத் தண்ணீர் அறிந்திடுமோ? காதல்
தொழுகையை ஏன்மறந்தாய் சொல்லு!

942.
வெண்பா விருந்தை விளைத்திடவே! வேல்விழியே
பண்பாய்ப் படைத்திடுக பார்வையை! - பெண்ணுனக்கு
நானடிமை ஆனகதை நன்கறிவாய்! உன்னழகில்
தேனடிமை ஆனகதை தேர்ந்து!

943.
மாதின் மனத்தைக் களவிட்ட கள்வனே!
தேதி பலவோடத் தேய்கின்றேன்! - சோதியாய்
நற்செய்தி நல்காயோ? நான்மயங்க என்னழகை
முற்றோதிச் சென்றாயே முன்பு!

944.
உருகுதே என்னுயிர்! மூச்சுவழி ஊர்ந்து
பெருகுதே ஆசைகள்! பித்தால் - கருகித்
தவிக்கின்றேன் உங்கள் தமிழழகில்! கைகளைக்
குவிக்கின்றேன் காதல் கொழித்து!

945.
தூண்டிலிடும் மீனாய்த் துடிக்கின்றேன்! உன்னிதயக்
கூண்டிலிடும் பேற்றைக் கொடுப்பாயா? - வேண்டுகிறேன்
உன்றன் மடிமேல் தலைவைத் துறவாடி
என்றன் உயிரை இணைத்து!

(தொடரும்)

6 commentaires:


  1. மின்னும் கருத்தேந்தி மீட்டும் இசையாவும்
    பின்னும் பிசையும் மனத்தினையே! - அன்றாடம்
    உன்றன் கவியழகில் உள்ளுருகி வாடுகிறேன்
    என்றன் உயிரும் இளைத்து!

    RépondreSupprimer
  2. உருக வைக்கும் வரிகளை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. பெண்ணுனக்கு நானடிமை ஆனகதை நன்கறிவாய்! //
    எல்லா ஆண்களுமே பெண்களுக்கு அடிமைதானே.ஆம் அம்மா,மனைவி,மகள் போன்றோரிடம்

    RépondreSupprimer
  4. பாக்களில் அழகான சொற்பிரயோகங்களைக் காண்கின்றேன்.
    கற்கும் எங்களுக்கு சொற்பஞ்சம் இல்லாமல் உங்கள் பாக்களில் நிறையவே சொற்களை அழகழகாகத் தொடுத்திருக்கின்றீர்கள்!

    மிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  5. // உருகுதே என்னுயிர்! மூச்சுவழி ஊர்ந்து
    பெருகுதே ஆசைகள்! பித்தால் - கருகித்
    தவிக்கின்றேன் உங்கள் தமிழழகில்! கைகளைக்
    குவிக்கின்றேன் காதல் கொழித்து //

    எங்கள் உள உணர்வைப் பிரதி பலிக்கும் வெண்பாவிது ஐயா...
    நீங்கள் வடிக்கும் வெண்பாக்களில் இதயம் துடிக்கவும் மறக்கிறது.
    அப்படி லயித்துபோகின்றோம்.

    வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா!

    RépondreSupprimer
  6. வானாய் , மலராய், தேனாய் , மீனாய்... கவிதை ரசம் அழகு

    நமக்கு தெரிந்ததெல்லாம் "நடுவுல மானே தேனே போட்டுக்கறதுதான்"

    RépondreSupprimer