காதல் ஆயிரம் [பகுதி - 119]
976.
கழிகிறது ஓர்நொடியும் ஓர்யுகமாய்க் கண்டு!
மொழிகிறது மோகம் முளைத்து! - பழியைப்
பொழிகிறது பொய்யாய்ப் புலவன்மேல்! பொங்கி
வழிகிறது காதல் வளர்ந்து!
977.
தேக்குமரத் தோளழகா! தேவியெனை அப்படியே
தூக்கிவர என்செய்வேன்? சொக்குகிறேன்! - நீங்காத
ஏக்கமுடன் பார்க்கின்றேன்! இன்பக் கவியெழுத
ஊக்கமுடன் பார்க்கின்றேன் ஓர்ந்து!
978.
பொன்னிதயம் பெற்றவளே! பூவே! புலவனின்
இன்னிதயக் கூட்டை இடிப்பதேன்? - உன்னிதய
வாயிலை ஏன்அடைத்தாய்? இன்பக் கவியெழுதும்
கோயிலை ஏன்அடைத்தாய் கூறு?
979.
கொஞ்சுமொழி பேசிய கோதையின் செவ்விதழ்
நஞ்சுமொழி பேசுதல் நாயமோ? - விஞ்சினிமை
வஞ்சிமொழி யாகும்! வருத்தம் எதற்காக?
பஞ்சிமொழி யாளே பகர்!
980.
செல்லமொழி பேசிடுவாள்! செந்தேனில் சொல்கலந்து
மெல்லமொழி பேசிடுவாள்! வெல்மொழியாள்! - வல்லமையாய்
நல்லமொழி பேசிடுவாள்! நற்றமிழில் போட்டியிட
இல்லைவழி என்றும் எனக்கு!
(தொடரும்)
கெஞ்சும் மொழி கொஞ்சுதே காதலில்
RépondreSupprimerவிஞ்சுமே வாழ்வில் விரைந்து!
ஐயா!
RépondreSupprimerஉங்கள் வெண்பாக்களைக் கண்டவர்வர்கள் பேச்சு மறந்தனரோ?
இனியாகிலும் காதலை உணர்வோமென எண்ணினர் போலும்!
வாழ்த்துக்கள்!
பாக்கள் அருமை.
RépondreSupprimerசெல்லமொழி பேசிடுவாள்! செந்தேனில் சொல்கலந்து
RépondreSupprimerமெல்லமொழி பேசிடுவாள்! வெல்மொழியாள்! - வல்லமையாய்
நல்லமொழி பேசிடுவாள்! நற்றமிழில் போட்டியிட
இல்லைவழி என்றும் எனக்கு!
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
த ம5