காதல் ஆயிரம் [பகுதி - 117]
966.
எழுதிடும் பாக்களில் ஏழிசை பொங்கும்!
தொழுதிடும் வண்ணம் சுடரும்! - ஒழுகிடும்
தேனைக் குடித்துத் திரண்டிடும் எண்ணங்கள்
வானைக் கடக்கும் வளர்ந்து!
967.
எங்கும் தமிழென எல்லாம் தமிழென
இங்குன் எழுத்தும் இனிக்குதடா! - தங்கமாய்ப்
பொங்கிடும் உன்றன் புலமை! எனக்குள்ளே
தங்கிடும் உன்றன் தமிழ்!
968.
காற்றில் கமழும் கவிமணத்தில் கட்டுண்டு
கீற்றில் கிடந்தேன் கிளுகிளுத்து! - ஊற்றின்
குதிப்பாய் உயிர்துள்ளும்! கோவைச்செவ் வாயின்
பதிப்பாய்ச் சுவைவெல்லும் பா!
969.
ஆற்றாக ஆசைகள் ஆர்த்தெழுந்து பொங்குதடி!
கூற்றாக வாட்டும் குளிரிரவு! - போற்றியுனைக்
காற்றாக வந்தணைக்கும் கற்பனைகள்! பாட்டெழுத
ஊற்றாக ஊறும் உணர்வு!
970.
ஒப்பனை இன்றி ஒளிர்கின்ற பேரழகால்
எப்பனை நெஞ்சும் இலகுமடி! - அப்பப்பா
கற்பனை கோடிக் கடலெனப் பொங்குதடி!
நற்றுணை செய்தாய் நடந்து!
(தொடரும்)
எங்கும் தமிழென எல்லாம் தமிழென
RépondreSupprimerஇங்குன் எழுத்தும் இனிக்குதடா! - தங்கமாய்ப்
பொங்கிடும் உன்றன் புலமை! எனக்குள்ளே
தங்கிடும் உன்றன் தமிழ்!
----
பாக்கள் அருமை...
சொற்பதங் கூறும் சுவையோ தனியே
RépondreSupprimerகற்பதற் கேலுமோ கவிஞரே! - விற்பனங்
காட்டும் கற்பனை கண்டு உள்ளம்
மீட்டுதே மகிழ்வை மிகவே!
மிக மிக அருமை ஐயா! ரசிக்கின்றேன் தொடர்ந்து...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
உங்கள் பாக்களை நாம் தினமும் படித்துவந்தாலே
RépondreSupprimerதமிழ்ச் சொற்களில் எமக்குண்டாகும் தட்டுப்பாடகன்றிடும்!
அத்தனை இலகுவாக இனிமையாகச் சொற்கள்
கட்டுக்கட்டாக உங்கள் பாக்களில் கொட்டிக்கிடக்கிறன.
வாழ்த்துக்கள்!
ஒப்பனை இன்றி ஒளிர்கின்ற பேரழகால்
RépondreSupprimerஎப்பனை நெஞ்சும் இலகுமடி! - அப்பப்பா
கற்பனை கோடிக் கடலெனப் பொங்குதடி!
நற்றுணை செய்தாய் நடந்து!
அழகு மொழியின் அமிர்த சுவையை
இலகு தமிழ் வார்த்தை கொண்டு
இயற்றிய பாக்கள் உண்டேன்
இனிக்கிறது நெஞ்சம் எல்லாம்...!
காதல் ஆயிரத்தின் இறுதிப் பகுதி அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடனே...!